

கீரைகளிலேயே சலிப்பின்றி வாசனையை உதிர்த்துக் கொண்டே இருக்கும் மணமிக்க கீரை புதினா. முகர்ந்து பார்த்தால் நாசித் துளைகள் வழியே வாசனையைப் பரப்பி மனதை உற்சாகப்படுத்தும். உணவாக எடுத்துக்கொண்டால் இரைக் குழல் வழியே ஆரோக்கியத்தை அனுப்பி உடலைக் குதூகலப்படுத்தும்!
கார்ப்புச் சுவையோடு துவர்ப்பையும் உடலுக்கு வழங்கும் அற்புதக் கீரை புதினா. கீரைகளிலேயே குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சம அளவில் பிரித்துக் கொடுக்கும் அதிசயக் கீரை ரகம் இது.
உணவுப் பொருள்களுக்கு நறுமணமூட்டும் கருவியாகவும் உணவுப் பொருள்கள் விரைவில் கெடாமல் பார்த்துக்கொள்ளும் காப்பானாகவும் உணவுக்கு இயற்கையாகச் சுகந்தமளிக்கும் நறுமணமூட்டியாகவும் பல நாடுகளில் புதினா பயன்படுத்தப் படுகிறது. மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில் புதினாவின் பயன்பாடு அதிகம்.
உணவுக்குப் பிறகு பல உணவகங் களில் புதினாக் கீரையின் உதவியுடன் தயாரிக்கப்படும் நவீன பானம் வழங்கப்படுவது அதிகரித்திருக்கிறது. அசைவ உணவு எடுத்துக்கொண்ட பிறகு சீரகம், புதினா சேர்த்துக் கொதிக்க வைக்கப்பட்ட பானத்தைப் பருகும் வழக்கம் பரவலாக இருந்து, இப்போது ஏறக்குறைய வழக் கொழிந்துவிட்டது.
சித்த மருத்துவம்: ‘அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங்…’ எனத் தொடங்கும் புதினாக் கீரைக் குறித்த அகத்தியர் குணவாகடப் பாடல், புதினாவை உணவு முறைக்குள் சேர்த்துவர சுவையின்மை, வாந்தி, செரியாமை, வயிற்று உப்புசம் போன்ற அறிகுறிகள் காணாமல் போகும் என்பதைத் தெரிவிக்கிறது.
உடலில் இருக்கும் தசைப்பிடிப்புகளை அகற்ற, செரிமானச் சிக்கல்களை அவிழ்க்க, உடலுக்கு லேசான வெப்பத்தைக் கொடுக்க, சோர்ந்திருக்கும் பசி உணர்வைப் பெருக்க புதினாக் கீரையை உணவாகப் பயன்படுத்தச் சொல்கிறது சித்த மருத்துவம்.
பொதினா, புதியன்மூலி, ஈயெச்சக் கீரை, புதியனா, புதீனா, புதியன்புதினா போன்ற வேறு பெயர்களும் புதினாவுக்கு உண்டு. ‘Mentha arvensis’ எனும் தாவரவியல் பெயர் கொண்ட புதினா வின் குடும்பம் ‘Lamiaceae’. மெந்தால், லிமோனின், பைபெரிடோன் போன்ற தாவர வேதிப்பொருள்களைக் கொண்டிருக்கிறது இக்கீரை.
வாசனை உமிழும் பானம்: உலர்ந்த புதினா கீரையைத் தண்ணீரி லிட்டு மெலிதாகக் கொதிக்க வைத்து வாசனை கமழும் பானமாகப் பருக விக்கலின் தீவிரம் படிப்படியாகக் குறையும். சுர நோயாளர்களுக்கான உற்சாகப் பானமாகவும் இது பயன்படும். உறக்கமின்றி அவதிப்படுபவர்கள் புதினாக் கீரையோடு கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சிப் பருகலாம்.
தலைபாரத்தைக் குறைப்பதோடு சிறுநீரைப் பெருக்கி உடலை நன்னிலையில் வைத்திருக்கவும் உதவும். புதினாக் கீரையில் இருக்கும் ஆவியாகக்கூடிய எண்ணெய், அதன் மருத்துவக் குணங் களுக்கு முக்கியக் காரணமாகிறது.
புதினாக் கீரையைத் துவையல், சட்னி என விதவிதமாகச் செய்து பிரமாதப்படுத் தலாம். புதினாவில் செய்த தொடு உணவு ரகங்கள் நாவின் சுவை மொட்டுகளை உற்சாகப்படுத்தி ஊட்டங்களை இலவச மாகப் பரிசளிக்கும். மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் அடிவயிற்று வலியைப் போக்க புதினா உதவும். மாதவிடாய்க் காலம் முடிவுக்குப் பிறகு ஏற் படும் எலும்பு அடர்த்திக் குறைவு நோயைத் தாமதப்படுத்தவும் புதினாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வேதிக் கூறுகள் உதவுகின்றனவாம்.
ஆய்வுக்களம்: புதினாக் கீரையின் நுண்கூறுகள் வழியாக உருவாக்கப்பட்ட நானோ துகள்கள், புற்று செல்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றன. கல்லீரலுக்குப் பாதுகாப் பளிக்கும் பிற மருந்துகளோடு புதினாக் கீரையையும் சேர்த்து வழங்க, கல்லீரலின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிறது ஆய்வு. மேலும், மூலக்கூறு ஆய்வுகளில் நீரிழிவு நோயாளர்களின் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைக்கவும் புதினாக் கீரையின் சாரங்கள் உதவும் எனும் செய்தி நம்பிக்கை அளிக்கிறது.
பல் மருத்துவத்தில்: இயற்கைப் பற்பொடி கலவைகளில் உலர்ந்த புதினாக் கீரையையும் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு இருக்கும் கிருமிநாசினி குணம், பற்பொடியின் மருத்துவக் குணத்தைப் பல மடங்கு அதிகரிக்கும். புதினாவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘மென்தால்’ எனும் வேதிப்பொருள், பல்வேறு மவுத்-வாஷ் கலவைகளில் சேர்க்கப்படுகிறது.
‘ஸ்ட்ரெப்டோகாக்கஸ்’ பாக்டீரியாக்களை அழிக்கும் வன்மை கொண்டது மென்தால்! பற்கள் சார்ந்து ஏற்படும் வாய்நாற்றத்தைப் போக்க புதினாக் கீரைப் பேருதவி புரியும்.
கீரையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யைத் தலைவலிக்குத் தடவ லாம். செரிமான உபாதைகளைத் தீர்க்கும் காரமிக்க மருந்தாகவும் இந்த எண் ணெய்யைப் பயன்படுத்தலாம். வெந்நீரில் புதினாக் கீரையைப் போட்டு ஆவிபிடிக்க தலைபாரம், மூக்கில் நீர்வடிதல் குறையும்.
வாரத்தில் ஒரு நாளாவது வாழை இலையில் பொதிந்த புதினாக் கட்டுச் சாதத்துக்குப் புதினா சட்னியைத் தொடு உணவாகச் சாப்பிட, செரிமானக் கருவிகள் துள்ளல் உற்சாகமடைந்து செரிமானத் தொந்தரவுகள் என்கிற பேச்சுக்கே இடமிருக்காது! வீட்டின் மூலிகைத் தொட்டிகளில் சுகந்தம் பரப்பும் புதினாக் கீரையை நட்டு வைத்தால் கீரையின் மணம் வீடு முழுவதும் பரவுவதோடு வயிற்றுச் சுரப்பிகளின் செயல் பாடுகளையும் சிறப்பாக்கும்.
புதினாக் கீரை, இயற்கையின் நேரடி வாசனை!
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com