

மூட்டில் வலி ஏற்படும்போது ‘டைக்ளோஃபினாக்’ (Diclofenac) களிம்பைத் தடவச் சொல்கிறார்கள். அப்படித் தடவும்போது வலி குறைவதாக உணர்கி றோம். இது எப்படிச் சாத்தியமாகிறது, டாக்டர்? - க. நடராஜன், கோவில்பட்டி.
முதலில் வலி எப்படி உண்டாகிறது என்பதைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். மூட்டுகளில் அழற்சி ஏற்படும்போது நமக்கு வலி உண்டாகிறது. அழற்சி உள்ள இடத்தில் ‘புரோஸ்டோகிளான்டின்’ (Prostoglandin) எனும் வேதிப்பொருள் உற்பத்தியாகிறது. இது அங்குள்ள ரத்தக்குழாய்களைத் தேவைக்கு ஏற்ப விரிவடையச் செய்யும். அல்லது சுருங்கச் செய்யும். அதன் மூலம் அங்கு வீக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த வீக்கம் நமக்கு வலியை உண்டாக்கும். இந்த வலியை அங்கு சுரக்கப்படும் ‘பி-சப்ஸ்டன்ஸ்’ எனும் வலி கடத்திப் பொருள் நரம்புகள் வழியாக மூளைக்குக் கடத்தும். இதனால்தான் நாம் மூட்டில் வலியை உணர்கிறோம். இப்போது வலி உள்ள மூட்டில் ‘டைக்ளோஃபினாக்’ களிம்பைத் தடவுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதில் உள்ள ‘டைக்ளோஃபினாக்’ வேதிப்பொருள் ‘புரோஸ்டோகிளான்டின்’ உற்பத்தியைக் குறைக்கும்.
இது எப்படியென்றால், ‘புரோஸ்டோகிளான்டின்’ உற்பத்திக்கு ‘காக்ஸ்-1’ (COX-1)‘காக்ஸ்-2’(COX-2)எனும் இரண்டு வேதிப்பொருள்கள் தேவை. இந்த இரண்டின் சுரப்பையும் ‘டைக்ளோஃபினாக்’ கட்டுப்படுத்தும். இதனால் ‘புரோஸ்டோகிளான்டின்’ சுரப்பது குறைந்துவிடும். இதன் பலனாக, மூட்டில் அழற்சியும் வீக்கமும் குறையத் தொடங்கும். மேலும், மூட்டில் வலியைக் கடத்துகின்ற ‘பி-சப்ஸ்டன்ஸ்’ உற்பத்தியையும் ‘டைக்ளோஃபினாக்’ சிறிதளவு குறைத்துவிடும். அதனாலும் மூட்டில் வலி உணரப்படுவது குறைந்துவிடும்.
எனக்கு முகப் பரு நிறைய இருக்கிறது. முகத்திலும் மூக்கின் மேல் பகுதியிலும் சீழ்க் கட்டி வருகிறது. பிறகு தழும்பாகிவிடுகிறது. அதற்கு என்ன ரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்? என்ன சிகிச்சை உள்ளது? - ஜெ. சந்தோஷ், மின்னஞ்சல்.
சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால் கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். இதற்கு ஆரம்பநிலையிலேயே சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டிப் பருக்களுக்காகத் தனியாக எந்த ரத்தப் பரிசோதனையும் இல்லை.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட பொதுவான ரத்தப் பரிசோதனைகள், தைராய்டு ஹார்மோன்களின் அளவு, சர்க்கரை அளவு போன்ற வழக்கமான பரிசோதனைகள்தாம் மேற்கொள்ளப்படுகின்றன. சீழ்க்கட்டிப் பருக்களுக்கு கெமிக்கல் பீல், டெர்மாபரேசன், கொலாஜன் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிக்கான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் உள்ளன. தோல் மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி உங்கள் தேவைக்குப் பயன்படுத்தித் தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்டுவிடலாம்.
எனக்கு 40 வயது ஆகிறது, உடல் பருமனாக உள்ளது. மேலும், எனக்கு அடிக்கடி யூரிக் அமிலம் அதிகமாகிக் கால் கட்டை விரல் நுனியில் வலி அதிகமாகிவிடும். இதற்காக Goutnil, Signo flam, Sompraz, போன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறேன். இதற்கு நிரந்தரத் தீர்வு உண்டா? மாத்திரைகள் இல்லாமல் உணவுக் கட்டுப்பாட்டில் இதைச் சரிசெய்ய முடியுமா? ஆலோசனை கூறுங்கள். - ஹரிபாபு மணி,மின்னஞ்சல்.
சிறுதானிய உணவு, அரிசி, கோதுமை உணவு, பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவைச் சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகரிப்பதில்லை. பெரும்பாலும் கொழுப்பு அதிகமுள்ள செவ்விறைச்சி உணவு வகைகளிலும் மதுவிலும் தான் யூரிக் அமிலம் அதிகம். உதாரணமாக, 100 கிராம் கோழி ஈரல் சாப்பிட்டால் 313 மில்லி கிராம் அளவிலும், 100 மி.லி. மது குடித்தால் 1,810 மில்லி கிராம் வரையிலும் யூரிக் அமிலம் ரத்தத்தில் உற்பத்தியாகிறது.
எனவே, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல், மீன், நண்டு போன்ற அசைவ உணவு வகைகளைக் குறைத்துக்கொண்டு, பீர் உள்ளிட்ட மதுவை ஒதுக்கி வைப்பதன் மூலமும் உடலில் யூரிக் அமிலம் அதிகமாவது தடுக்கப்படும். வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட கேக், ரொட்டி, ஐஸ்கிரீம் போன்ற அதிக இனிப்புள்ள உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். விட்டமின்-சி மிகுந்த நெல்லிக்காய், திராட்சை, ஆரஞ்சு போன்றவை நல்லது.
நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம். சோடா குடிக்க வேண்டாம். உங்களுக்கு உடற்பருமன் இருக்கிறது. உங்கள் உடல் எடையைக் குறைத்தாலே இந்த அமிலப் பிரச்சினையும் சரியாகிவிடும். தினமும் உடற்பயிற்சி செய்தால் இந்த அமிலம் கட்டுக்குள் வரும்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com