பச்சை வைரம் 21: நஞ்சை நீக்கும் லச்சக்கொட்டைக் கீரை

பச்சை வைரம் 21: நஞ்சை நீக்கும் லச்சக்கொட்டைக் கீரை
Updated on
2 min read

கிராமத்தில் பயணம் மேற்கொள்ளும்போது, பல வீடுகளுக்கு முன் மஞ்சள் கலந்த பசுமை நிறத்திலான இலைகளைக் கொண்ட மரம் பளிச்சென்று காட்சிகொடுப்பதை ரசித்திருப்போம். ஏதோ அழகுத் தாவரமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் அதைக் கடந்திருப்போம். கிராமத்துச் சமையலில் அதிகம் இடம்பிடிக்கும் லச்சக்கொட்டைக் கீரைதான் அது! தொலைவில் இருந்து பார்ப்பதற்கு வாதுமை இலைகளின் சாயலை நினைவுபடுத்தும். அகன்றும் நீண்டும் இருக்கும் இலைகள் இக்கீரைக்கான அடையாளம்.

மருத்துவக் குணங்களை வழங்கும் கீரைகளின் வரிசையில் லச்சக்கொட்டைக் கீரைக்கும் இடமுண்டு. இதுதான் லச்சக்கொட்டைக் கீரை என்று அறியாமலே அது சார்ந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு ‘ஆஹா என்ன சுவை…’ என்று உச்சரித்தவர்கள் நம்மில் பலர் இருப்பார்கள். கீரையைப் பச்சையாகச் சாலட் ரகங்களில் சேர்க்கும் வழக்கம் இருந்தாலும், சமைத்த லச்சக்கொட்டைக் கீரையின் சுவையும் பதமும் சற்று வித்தியாசமாகவே இருக்கும்.

அசைவத்திலும் சேர்க்கலாம்: லச்சச் கொட்டைக் கீரையின் நடு நரம்பை நீக்கிவிட்டு, பிறகு நறுக்கிச் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். லச்சக்கொட்டைக் கீரை, துவரம்பருப்பு, சின்ன வெங்காயம், மிளகு ஆகியவை சேர்த்துச் செய்யப்படும் கீரைப் பொரியல் மிகவும் சுவைமிக்கது. வேகவைத்த கீரையையும் பாசிப் பருப்பையும் நன்றாகக் கடைந்து, மிளகுத் தூள், மஞ்சள் தூள், சின்ன வெங்காயம் சேர்த்துச் சாப்பிட உடலுக்குள் ஊட்டங்கள் குறைவின்றித் தஞ்சமடையும்.

கீரையை நறுக்கி ‘பச்சடி’ வடிவில் சாப்பிட நாவிற்குச் சுவையும் உடலுக்குக் குளிர்ச்சியும் கிடைக்கும். கீரையோடு தேங்காய்த் துருவல் சேர்த்து நல்லெண் ணெய் கொண்டு பிரட்டி, கீரைப் பிரட்ட லாகவும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ‘சூப்’ போலவும் தயாரித்து மிளகுத் தூள் தூவிப் பருகலாம்.

அசைவ உணவு சமைக்கும்போது லச்சக்கொட்டைக் கீரையைச் சேர்க்கும் வழக்கம் கிராமத்துச் சமையலில் உண்டு. நார்ச்சத்தை இக்கீரை வழங்கும் என்கிற காரணத்தாலும், அசைவ உணவோடு சேரும்போது சுவையும் பதமும் சரியாக இருக்கும் என்கிற காரணத்தாலும் இந்தப் பழக்கம் உருவாகி இருக்கலாம்.

சிறந்த புண்ணாற்றி: சிறியதாக நறுக்கிய லச்சக் கொட்டைக் கீரையை நன்றாக வேகவைத்து, கொஞ்சம் வேகவைத்த பருப்பும் நெய்யும் சேர்த்துச் சோற்றோடு பிசைந்து சாப்பிட, வயிறு மற்றும் குடற்பகுதிகளில் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாக அமையும். உணவு எதிர்க்களித்தல் பிரச்சினை இருப்பவர்கள், கார உணவைத் தவிர்க்க வேண்டிய சூழலில் இருப்போர் இந்தக் கீரை நெய் பருப்பு சாதத்தை முயன்று பார்க்கலாம்.

ஆய்வுகளில்: டானின்கள், சபோனின்களைக் கொண்டி ருக்கும் லச்சக்கொட்டைக் கீரைக்குக் காயங்களை விரைந்து குணமாக்கும் சிறப்புப் பண்பு இருப்பதாகப் பல ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. நிறைய எதிர்-ஆக்ஸிகரணி பொருள்களை வைத்தி ருப்பதால் உடலுக்கு நோய் எதிர்க்கும் தன்மையை இக்கீரை வழங்குகிறது. மூட்டுவலி, தோல் நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் உணவில் சேர்க்க வேண்டிய கீரை இது. பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையும் இக்கீரைக்கு இருப்பது இதன் சிறப்பம்சம்.

நோய்நிலை காரணமாகச் சோர்வுற்றிருப்ப வர்களுக்கு ஊட்டங்களைக் கொடுத்து உடலை நன்னிலைக்கு மீட்கும் உணவுப் பொருள் லச்சக்கொட்டைக் கீரை! காமம் பெருக்கும் கீரைகளின் தொகுப்பில் லச்சக் கொட்டைக் கீரைக்கும் இடமளிக் கலாம். சிறுவயது முதலே கீரையைச் சாப்பிட்டு வர உடலுக்குப் பொலிவும் வலிமையும் தடையின்றிக் கிடைக்கும்.

வீக்கங்களை வடிக்கும்: வாதம் காரணமாக ஏற்படும் உடல் சோர்வு, மூட்டு வலி போன்றவற்றுக்கு லச்சக்கொட்டைக் கீரை மருந்தாக அமையும். சிறுநீரைப் பெருக்கி, உடலில் ஏற்பட்ட வீக்கங் களைக் குறைக்கும். குறிப்பாகப் பயணம் மேற்கொண்ட பிறகு உண்டாகும் கால் வீக்கத்திற்கு இந்தக் கீரையை உணவாகப் பயன் படுத்தலாம். அதே வேளையில் உடலில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிற தெனில் அடிப்படைக் காரணத்தை மருத்துவர் ஆலோ சனையோடு கண்டறிவதும் முக்கியம்.

லஜ்ஜக் கீரை, நஞ்சுண்டான் கீரை, நச்சுக்கொட்டைக் கீரை போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. கழிவை அகற்றி உடலில் தேங்கிய நச்சுகளை வெளியேற்றும் பண்பு இருப்பதால் நஞ்சுண்டான் கீரை என்கிற பெயர் ஏற்பட்டிருக்கலாம். லச்சக்கொட்டைக் கீரையின் தாவரவியல் பெயர் Pisonia alba. வைட்டமின்களும் தாது உப்புகளும் இந்தக் கீரையில் நிறையவே உண்டு.

வீட்டுக்கு ஒரு லச்சக்கொட்டை மரம்: வீட்டின் முன், இடமிருந்தால் தாராளமாக லச்சக்கொட்டைக் கீரை மரத்தை வளர்க்கலாம். முருங்கை மரம் எப்படிப் பலன் கொடுக்குமோ அதே போலக் கீரைகளைத் தேவைக்கு ஏற்பப் பறித்துச் சமைத்து லச்சக்கொட்டைக் கீரையின் பலன்களை அனுபவிக்கலாம். அனைத்துப் பருவங்களிலும் செழித்து வளரும் தன்மை உடையது. மருத்துவக் குணங்களைத் தாங்கிக்கொண்டு அகன்று விரிந்திருக்கும் கீரை, வீட்டுக்குப் பொலிவைக் கொடுப்பதோடு ஆரோக்கியப் பொலிவையும் கொடுக்கும்.

லச்சக்கொட்டைக் கீரை, அறியப்படாத அமிர்தம்!

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in