

‘கிளைசிமிக் இன்டெக்ஸ்’ (Glycaemic index) என்றால் என்ன, டாக்டர்? - குமாரவேல், குடியாத்தம்.
சுருக்கமாகச் சொன்னால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஓர் உணவு எந்த வேகத்தில் அதிகப்படுத்துகிறது என்பதை அறிய உதவும் ஓர் அளவீட்டு முறையே ‘கிளைசிமிக் இன்டெக்ஸ்’. தமிழில், ‘ரத்தச் சர்க்கரையை உயர்த்தும் அளவு’ எனலாம். நாம் பல வகை உணவைச் சாப்பிடுகிறோம். உணவின் அளவு ஒன்றுபோலிருந்தாலும், உணவின் தன்மையைப் பொறுத்து அது ரத்தத்தில் குளுக்கோஸை அதிகப்படுத்துகிற ஆற்றல் வேறுபடுகிறது.
பொதுவாக, 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை 100% உயரும். எனவே, குளுக்கோஸின் ‘கிளைசிமிக் இன்டெக்ஸ்’ 100%. இதுபோல் மற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடும்போது ரத்தத்தில் அதிகரிக்கிற சர்க்கரை அளவையும் அதே அளவு குளுக்கோஸ் சாப்பிடும்போது அதிகரிக்கிற சர்க்கரை அளவையும் ஒப்பிடுவதை ‘கிளைசிமிக் இன்டெக்ஸ்’ என்கிறோம். உதாரணமாக, அரிசி, கோதுமை, சோளம், உருளைக்கிழங்கு, கேரட் போன்றவற்றின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 65 – 70%; பழங் களுக்கு 55%; பயறுகளுக்கு 30 – 40%. முக்கியமாக, சர்க்கரை நோயாளிகள் தெரிந்திருக்க வேண்டிய அளவீடு இது.
நடைப்பயிற்சியாளர்களிடம் பின்னோக்கி நடை பயில்வது இப்போது அதிகரித்து வருகிறது. இப்படியான நடைப்பயிற்சியை மேற்கொள்வது சரியா? ஏதேனும் பாதிப்பு உண்டா? - ஆர். நடேசன், கோயம்புத்தூர்.
சாதாரணமாக முன்னோக்கி நாம் நடக்கும்போது, குதிகாலை முன்வைத்து பின்னர் விரல்களைத் தரையில் வைப்போம். ஆனால், பின்னோக்கி நடக்கும்போது விரல் களை முதலிலும் குதிகாலை அடுத்தும் தரையில் வைப்போம். பின்னோக்கி நடக்கும்போது தொடையில் உள்ள நான்கு தலைத் தசைகள், பின் தொடைத் தசைகள்,கெண்டைக்கால் தசைகள், பிட்டத் தசைகள் ஆகியவை செயல்படுவதால் இந்தத் தசைகள் வலுப்பெறுகின்றன.பின்னோக்கி நடப்பது முழங் காலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது.
மேலும், உடலைப் பின்னோக்கித் தள்ள இடுப்புக்குக் கீழே உள்ள தசைகள் அதிகம் செயல்படுகின்றன. இதனால், கீழ் இடுப்பு வலி குறைகிறது. பின்னோக்கி நடக்கும்போது மேற்சொன்ன தசைகள் கடினமாகச் செயல்படுவதால், முன்னோக்கி நடப்பதைவிட 40% அதிக கலோரிகள் எரிக்கப்படுவதாகவும், உடலின் சமநிலையை அதிகப்படுத்துவதாகவும் ‘அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின்’ தெரிவித்துள்ளது.
பின்னோக்கி நடக்கும்போது ஓர் எச்சரிக்கை உணர்வு தேவைப்படுவதால், மூளையின் கவனம், ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றில் செயல்திறன் கூடுகிறது. இம்மாதிரியான நடையில் இதயத்தின் செயல்பாடும் நுரையீரலின் திறனும் அதிகரிக்கின்றன. பின்னோக்கி நடை பயில்வோர் தடுமாறி கீழே விழச் சாத்தியமுண்டு. அதைத் தவிர்க்க, நன்கு பழகிய இடங்களில் அல்லது சூழல்களில் பயிற்சி செய்ய வேண்டும்.
அல்லது பயிற்சியாளர் உடனிருக்க வேண்டும். நடையை மெதுவாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகவே வேகத்தைக் கூட்ட வேண்டும். நடக்கும் தூரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கூட்ட வேண்டும். சரியான காலணிகளை அணிந்துகொள்ள வேண்டும்.
என்னுடைய வயது 38. எனக்குக் கடந்த 10 வருடங்களாக இடுப்புக்குக் கீழ் கால் முழுவதும் வலி அதிகமாக இருக்கிறது. இந்த வலியைப் போக்க வழி சொல்லுங்கள். - லட்சுமி, தளவாய்புரம்.
இடுப்பு வலிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பிரதான காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, முதுகு முள்ளெலும்பு களில் உள்ள இடைவட்டு எனப்படும் சவ்வு விலகுவது. அடுத்தது, முள்ளெலும்பு மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங் களால் அங்கு தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகி, நரம்பு அழுத்தப்படுகிறது.
அதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து, நரம்பு முடங்கி வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் ‘சியாட்டிக் நரம்பு’ இவ்வாறு பாதிக்கப்படுகிறது. இதனால்தான் இடுப்புக்குக் கீழ் கால் முழுவதும் வலி பரவுகிறது. இதை ‘சியாட்டிகா’ என்கிறோம்.
இதற்கு வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவது, நன்றாக ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசியோதெரபி, ‘ட்ராக் ஷன்’ போன்ற சிகிச்சைகளில் குணமாக வாய்ப்பு உண்டு. சிலருக்கு முதுகுத் தண்டுவடத்தில் ஸ்டீராய்டு ஊசி போட்டும் இதைக் குணப்படுத்துவதுண்டு. முடியாதபட்சத்தில் அறுவை சிகிச்சையும் தேவைப்படக்கூடும்.
கட்டுரையாளர், பொது நல மருத்துவர்
- gganesan95@gmail.com