

கண்கவர் முள்ளங்கியை அறியாத வர்களும் சுவை உணர்ந்து சாப்பிடாதவர்களும் குறைவு. அதிலும் சுவைமிக்க முள்ளங்கி சாம்பாருக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், அதன் கீரையை உண வாகப் பயன்படுத்தலாம் என்று அறிந்தவர்கள் வெகு சொற்பமே! புதிதாகப் பறித்த முள்ளங்கியா என்று அறிய, அதன் தலைப் பகுதியில் கீரை உயிர்ப்போடு இருக்கிறதா எனப் பார்த்து வாங்கும் நாம், அக்கீரையை வெட்டித் தூக்கி எறியாமல் உணவு முறைக்குள் சேர்த்துவந்தால் பலன்களோ ஏராளம்!
பஞ்சக் காலத்தில் முள்ளங்கிக் கீரையை உணவாகச் சாப்பிட்ட குறிப்புகள் இருக்கின்றன. வறுமையின் அடையாளமாகக் குறிப்பிடப்பட்ட கீரைகள், உண்மையில் வறுமையின் அடையாளம் அல்ல, நலத்துக்கான குறியீடு என்பதை நாம் புரிந்துகொண்டால் கீரையின் பலன்களை முழுமையாக அனுபவிக்கலாம்.
உலக அளவில் சாலட், சூப் வகைகளில் சமைக்காத முள்ளங்கிக் கீரையைத் தூவிச் சாப்பிடும் வழக்கம் அதிக அளவில் இருக்கிறது. முள்ளங்கிக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதே நம் பகுதியின் வழக்கம். முள்ளங்கிக் கீரையை ஆவியில் வேகவைத்து, ஆலிவ் எண்ணெய்யில் வதக்கிச் சாப்பிடும் பழக்கம் மேற்கத்திய நாடுகளில் உண்டு.
சூட்டைத் தணிக்கும்: முள்ளங்கிக் குழம்பைச் சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டு அதன் கீரையைத் தொடு உணவுக்குப் பயன்படுத்தும் வழக்கத் தைக் கிராமங்களில் பார்க்கலாம். வெப்பம் சார்ந்த அறிகுறிகள் ஏற்படுவதைத் தடுக்க வேனிற்காலத் தொடக்கத்திலேயே முள்ளங்கிக் கிழங்கு, முள்ளங்கிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்ளலாம். சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு மற்ற நீர்ப் பெருக்கும் உணவு வகைகளோடு முள்ளங்கிக் கீரையையும் அடிக்கடி சேர்த்து வரலாம்.
முள்ளங்கிக் கீரையோடு பாசிப்பருப்பு சேர்த்து வேகவைத்துக் கொஞ்சம் பூண்டு வதக்கிச் சேர்த்துக் கடையலாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கீரையை நெய் விட்டு வதக்கிக் கீரைப் பிரட்டலாகத் தயாரித்துத் தொடு உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
கொத்துமல்லிக் கீரை, புதினாக் கீரை, முள்ளங்கிக் கீரை மூன்றையும் நறுக்கி வெட்டிய வெள்ளரிக் காய், கேரட் போன்றவற்றுடன் எலுமிச்சைச் சாறு கொஞ்சம் விட்டுப் பிரட்டி, மாலை வேளையில் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.
சித்த மருத்துவம்: வயிற்றுப் புண்ணுக்கான உணவாக முள்ளங்கிக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம். இதை ‘தூயநிற முள்ளாங்கி யின் இலையை முற்றுமுண்டாற் குன்மவலி யுள்ளாங் கிளம்பா துரை…’ எனும் அகத்தியர் குணவாகடப் பாடல் மூலம் அறிந்துகொள்ளலாம். கார்ப்புச் சுவையைக் கொண்ட கீரையாக இருப்பினும் உடலுக்குக் குளிர்ச்சியை வழங்கும் வித்தியாசமான கீரை ரகம் இது.
முள்ளங்கியைப் போலவே சிறுநீரைப் பெருக்கும் தன்மை கீரைக்கும் உண்டு! ‘கீரைப்பிடி முள்ளங்கிக் காம்பின்சா றுழக்கிற் சேரப் பலந்தேனி லுண்’ எனும் மூலிகைக் குறள், முள்ளங்கி இலையின் காம்பு, நரம்புச் சாறு ஆகியவற்றில் தேன் விட்டுக் காலையில் உண்டுவர ரத்த சோகை நிவர்த்தியாகும் என்கிறது.
இளம் முள்ளங்கிக் கீரையை அதாவது முள்ளங்கியிலிருந்து சில இலைகள் துளிர்விட்டவுடன் கைப்பிடி அளவு எடுத்துக் கொஞ்சம் சோற்றுப்பு அல்லது மருத்துவ உப்பு வகைகளைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்றவை விலகும். இது வெள்ளைப்படுதலுக்கான முக்கிய மருத்துவமும்கூட.
ஆய்வுக்களம்: உடற்கழிவுகளை முழுமையாக அகற்ற முள்ளங்கிக் கீரையின் நார்ச்சத்து உதவுகிறது. இதிலுள்ள இரும்புச் சத்து ரத்தசோகைக்கான மருந்தாக அமையும். உடலுக்குள் ஏற்படும் நுண்ணிய காயங்களைத் தடுக்க முள்ளங்கிக் கீரை உதவுகிறதாம். மறதி தொடர்பான நோய் நிலைகளில் முள்ளங்கிக் கீரை நற்பலன்களை அளிக்கும் என்கிறது ஆரம்ப நிலையிலான ஆய்வு.
குறை கலோரி உணவு ரகம் என்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சேர்க்க வேண்டிய கீரை. சுண்ணச்சத்து, பாஸ்பரஸ், விட்டமின்கள் என உடலுக்குத் தேவையான சத்துகளை வைத்திருக்கும் முள்ளங்கிக் கீரை உடல் சோர்வைப் போக்கும்.
முள்ளங்கியில் வெள்ளை, சிவப்பு என நிறத்தின் அடிப்படையிலும் பெரியது, சிறியது எனும் அளவின் அடிப்படையிலும் ரகங்கள் இருக்கின்றன. அவற்றின் கீரைகள் கொடுக்கும் பலன்கள் பெரும்பாலும் ஒன்றே. மூலபம், முள்ளாங்கி ஆகிய வேறு பெயர்களும் முள்ளங்கிக்கு உண்டு. Raphanus Sativus எனும் தாவரவியல் பெயர் கொண்ட இதன் குடும்பம் Brassicaceae.
நன்றாகக் கழுவிய பிறகு கீரையைப் பயன்படுத்துவது சிறப்பு. தனியாகக் கீரை வாங்குவதைவிட முள்ளங்கியோடு சேர்த்துக் கீரையை வாங்கி இரட்டைப் பலன்களை அடையலாம். முள்ளங்கிக் கீரையைச் சமைக்கும்போது மிளகு, சீரகம், சோம்பு போன்ற வாய்வு அகற்றிப் பொருள்களைச் சேர்ப்பது சிறப்பு.
முள்ளங்கிக் கீரை, பழகிக்கொள்ள வேண்டிய கீரை!
- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com