

“எந்த ஒரு மனிதனும் தொடர்பே இல்லாத தனித் தீவாக மாட்டான். அவன் என்றுமே நிலத்தின் ஒரு பகுதிதான்”
- ஜான் டான்
என் நண்பர் ஒருவர் அருமையாக வயலின் வாசிப்பார். ‘வான் நிலா நிலா அல்ல’ என்று வயலின் இழைகளால் அவர் இழைத்தால் மனம் உருகிவிடும். முதன்முறையாக ஒரு நிகழ்ச்சியில் வாசிக்க அவரை அழைத்தார்கள். ஒலிபெருக்கி முன் நின்றதும் வயலின் கம்பிகளைவிட அவரது கைகள் அதிகமாக நடுங்கி வயலின் இசை ‘வயலன்ஸ் இசை' ஆகிவிட்டது. அதன்பின் எந்த நிகழ்ச்சிக்கும் அவர் பார்வையாளராகக்கூடச் செல்ல அஞ்சுகிறார்.
தனியாக இருக்கும்போது வராத தயக்கமும் பயமும் கூட்டத்தைக் கண்டதும் வருவது ஏன்?
மனித இனம் ஒரு சமூக உயிரினம். உயிரினங்கள் கூட்டமாக வாழ்வது பாதுகாப்புக்காகவும் பரஸ்பர உதவிக்காகவும் உருவான ஒரு நடவடிக்கை. தனியாக இருக்கும்போது இயலாத பல செயல்களை கூட்டமாகச் சேரும்போது செய்ய வசதியாக அமைந்துள்ளதால்தான், மனித இனம் கூட்டமாக வாழ்வதையே விரும்புகிறது. உயிரினங்களிலேயே பலம் வாய்ந்த யானைகள்கூடக் கூட்டமாக இருப்பதற்கு விரும்புகின்றன என்றால், மனிதர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இன்னொருவருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற உந்துதலே மொழி பிறக்கக் காரணமாக அமைந்தது. மொழியும் மொழியைத் தொடர்ந்து சிந்தனை, பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவை உருவாகக் காரணமாக அமைந்தது, தனிமனிதன் சமூகமயமாக மாறியதால்தான்.
சமூகமயமாக்கல் மனிதனுக்குப் பல நன்மைகளைத் தந்தது. தீமைகளும் விளைந்தன. என்னென்ன என்பதைப் பார்க்கலாம். முன்னரே கூறியதுபோல் தனியாக இருக்கும்போது கிடைக்காத பாதுகாப்பு உணர்வும் நிம்மதியும் ‘கூட்டத்தில் ஒருவனாய்' இருக்கும்போது கிடைக்கிறது. இதன் காரணமாகவே சமூகத்தில் ஒருவனாக அங்கீகரிகக்கப்பட வேண்டும் என்கிற உந்துதல் மனிதனுக்கு ஆதி காலம் தொட்டே இருந்து வருகிறது. சமூகத்தில் ஒருவனாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கான விழைவே சாதி, மதம், இனம், மொழி, தேசம் போன்ற ஏதோ ஒரு குழுவுடன் அவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான்.
அக்குழுவின் மற்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெற பெரிதும் விழைகிறான். இவன் போன்றே அக்குழுவில் இணைந்துள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் இவனுக்கும் இடையே ஒன்று சரி, மற்றொன்று தவறு எனப் பல விஷயங்களில் ஒரு பொதுப் புரிதலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு உடன்படிக்கையும் ஏற்படுகின்றன.
சமூக அங்கீகாரம் பெறவேண்டும் என்னும் விழைவு , அது கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தை உருவாக்குகிறது. எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னாலும் அது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட வைக்கிறது. நல்ல உடை, கார் போன்றவை வாங்க வேண்டுமென்றால்கூட நமக்குப் பிடித்தபடி வாங்காமல் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைக் குறித்தே பெரிதும் கவலைப்படுகிறோம்.
குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றில்கூட அவர்களது திறமை, விருப்பத்தைவிடச் சமூக அங்கீகரிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விளைவு நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்காகப் பல செயல்களைச் செய்யத் தொடங்குகிறோம்.
ஒரு முறை ஒரு தகப்பனும் மகனும் குதிரை வாங்கிக்கொண்டு வந்தனர். இருவரும் நடந்து வந்துகொண்டிருந்தபோது ஒருவர் ‘குதிரையை வைத்துக்கொண்டு நடந்து செல்கிறார்களே முட்டாள்கள்’ எனச் சொன்னார். உடனே தந்தை குதிரையில் அமர, மகன் நடந்துவந்தான். அப்போது வழியில் பார்த்த இன்னொருவர் ‘மகனை நடக்க வைத்துத் தகப்பன் சுகமாக வருகிறானே’ எனக் கிண்டல் செய்ய, மகனையும் குதிரையில் அமர்த்தி இருவரும் குதிரை மீது வந்தனர். அப்போது இன்னொருவர் ‘பாவம் குதிரை. இப்படியா இரண்டு பேர் அதன்மீது உட்கார்ந்து கொடுமைப்படுத்துவது’ எனக் கூறினார்.
இப்போது கீழே இறங்கிக் குதிரையை இருவருமாகச் சேர்ந்து தூக்கிக்கொண்டு சென்றனர். வழியில் வந்த ஒருவர் ‘இவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. ஏன் இரண்டு பேரும் குதிரையைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்’ எனக் கேட்க இருவரும் ‘எங்களுக்குக் குதிரையே வேண்டாம்’ என வெறுத்துக் குதிரையை விட்டுவிட்டு நடந்தே வீடு திரும்பினார்களாம். இந்தக் கதையைப் போலத்தான் நமது செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சமூகம் எல்லாவிதமாகவும் பேசும். அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது எந்த ஆக்கப்பூர்வ விளைவையும் தராது.
பிறர் நம் மீது கொண்டிருக்கும் மதிப்பு குறித்து அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவது நம்மைக் குறைவாக மதிப்பிட்டுத் தாழ்வுமனப்பான்மைக்கு வழிவகுக்கிறது. அதன் விளைவாகப் பிறர்முன் செயல்படும்போது பதற்றம் ஏற்படுகிறது. அதனால்தான் சாதாரணப் போட்டிகளில் கோலி மாதிரி விளையாடும் பலரும், முக்கியப் போட்டிகளில் கோழி மாதிரி முட்டை ரன் இடுகிறார்கள்.
இந்தப் பதற்றம் அதீதமாகும்போது அது ‘சமூகப் பதற்ற பாதிப்பு’ என அழைக்கப்படுகிறது. பொது இடங்களுக்குச் செல்ல அஞ்சுவது, பொதுக் கூட்டங்களில் பேச அஞ்சுவது, கைகால் தந்தியடிப்பது, இதயம் படபடப்பது, வியர்ப்பது என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தனியாக இருக்கும்போது 'மனோகரா' திரைப்படம் போல் பக்கம் பக்கமாகப் பேசுபவர்கள், பொது இடத்தில் மணிரத்னம் வசனம் அளவுக்குக்கூடப் பேச வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இதனால்தான்.
நம்மைப் பற்றித் தாழ்வாக நினைக்காமல் இருப்பது, பிறருடைய கருத்துக்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது ஆகிய இரண்டும்தான் இதற்கான தீர்வுகள்.
சமூகத்துடன் இணைவது அவசியம்தான். அதேநேரம் அதற்காக அளவுக்கு அதிகமாகச் சமூகத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். இரண்டுக்குமான சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com