

நான் சமீபத்தில் வியாபார விஷயமாக வெளியூருக்குச் சென்றுவந்தேன். ஊருக்குத் திரும்பியதிலிருந்து தொடை இடுக்குகள் சிவந்துள்ளன. அரிப்பும் இருக்கிறது. இது ஏன்? என்ன செய்யலாம், டாக்டர்? - ந. பத்மநாபன், தஞ்சாவூர்.
உங்களுக்கு வந்திருப்பது பூஞ்சைக் காளான் தொற்றாக (Fungal infection) இருக்கலாம். வெளியூர்ப் பயணங்களில் சுத்தமில்லாத பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது இம்மாதிரியான தொந்தரவு வருவது இயல்பு. இந்தத் தொற்றுக்கு வியர்க்கிற ஈரமான இடங்கள்தாம் பிடிக்கும் என்பதால், உங்கள் தொடை இடுக்குகளில் அது தொற்றியுள்ளது.
இதற்குப் பூஞ்சை எதிர் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். மாத்திரை, களிம்பு வடிவில் அவை கிடைக்கின்றன. தோல் மருத்துவரை ஆலோசித்து, போதுமான காலத்துக்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். அப்போதுதான் இது மறுபடியும் தலைகாட்டாது. இதற்குச் சுய மருத்துவம் வேண்டாம். காரணம், மருந்துக் கடைகளில் களிம்பு வாங்கினால் சமயங்களில் ஸ்டீராய்டு கலந்த களிம்பைக் கொடுத்துவிடுவார்கள். அந்தக் களிம்பால் தொற்று தீவிரமாகிவிடக்கூடும். அதனால்தான் இந்த எச்சரிக்கை.
என் உறவினருக்கு வயது 80. அவருக்கு ரத்தத்தில் சோடியம் அளவு குறைந்துவிட்டது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். சோடியம் அளவு குறைவதற்கு என்ன காரணம்? அதை எப்படித் தவிர்ப்பது? என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்வது? - க. துளசிதாசன், திருச்சி.
வயதான காலத்தில் சோடியம் குறைவதற்கு நீரிழப்பு ஒரு முக்கியமான காரணம். இவர்கள் தேவையான அளவுக் குத் தண்ணீர் அருந்த மாட்டார்கள். வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் சில வகை மருந்துகளின் பக்கவிளைவுகளும் காரணமாகலாம். குறிப்பாக, சிறுநீர்ப் பிரித்திகளைச் (Diuretics) சொல்லலாம். வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற வற்றின் விளைவாகவும் இது ஏற்படலாம்.
நாள்பட்ட சிறுநீரகப் பிரச்சினைகள், கல்லீரல் பிரச்சினைகள், குறை தைராய்டு போன்றவற்றின் தாக்குதல் காரணமாகவும் ரத்தத்தில் சோடியம் குறைவது (Hyponatremia) உண்டு. உங்கள் உறவினருக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை அளித்தால், பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
பொதுவாக, இந்த மாதிரியான பிரச்சினை உள்ளவர்கள் உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்போம். அதோடு தினசரி உணவில் சோடியம் மிகுந்துள்ள உணவை அதிகரித்துக்கொள்ளச் சொல்வோம். இளநீர், ஊறுகாய், உலர்ந்த பழங்கள், பிஸ்கட்டுகள், வறுத்த முந்திரிப்பருப்பு, பால், முட்டை, மீன், இறைச்சி, நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பீட்ரூட், கேரட், பசளைக்கீரை, முள்ளங்கி, அவரை, துவரை, உளுந்து, மக்காச்சோளம், தக்காளி கெச்சப் - சாஸ், உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்றவற்றில் சோடியம் அதிக அளவில் உள்ளது. சோடா உப்பு போட்டுத் தயாரித்த உணவு, பதப்படுத்தப் பட்ட உணவுப்பொருள்கள், துரித உணவு போன்றவற்றிலும் சோடியம் மிகுந்துள்ளது.
கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.
சளி, ஜலதோஷம் பிடித்திருக்கும்போது தயிர், மோர் சாப்பிடக் கூடாது என்கிறார்களே, ஏன்? - மாலதி, கடலூர்.
இது தவறான கருத்து. மருத்துவ அறிவியல் இதை ஒப்புக்கொள்வதில்லை. எல்லாருக்கும் இந்தக் கூற்று சரிப்படாது. காரணம், வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமிகள் உடலைத் தாக்கும்போது சளி, ஜலதோஷம் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. அல்லது ஒவ்வாமை காரணமாக ஜலதோஷம், தும்மல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஒருவருக்குத் தொற்றுக் கிருமிகளால் சளியோ ஜலதோஷமோ ஏற்பட்டிருந்தால் அவர் தயிர் சாப்பிடுவதில் தவறில்லை. ஒவ்வாமை காரணமாக அவருக்கு அந்தப் பிரச்சினை ஏற்பட்டிருந்தால் தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம். ஏனென்றால், ஒவ்வாமை தரும் உணவுப் பொருள்களில் முந்திகொண்டு வருபவை பாலும் பாலில் தயாரிக்கப்படும் தயிர், மோர் உள்ளிட்ட பிற பொருள்களும்தாம்.
- gganesan95@gmail.com