பச்சை வைரம் 19: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முசுமுசுக்கை

பச்சை வைரம் 19: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முசுமுசுக்கை
Updated on
2 min read

சுணைகளுடன் கூடிய கொடி வகை. முக்கோண வடிவத்தில் பிளவுகளுடன் காணப்படும் இலைகள், மஞ்சள் நிற மலர்கள், பழங்களுக்கோ செம்மை நிறம்… இந்த அடையாளங்களைக் கொண்ட கீரையின் பெயர் முசுமுசுக்கை. மருத்துவ குணமிக்க துவர்ப்புச் சுவையைக் கொடுக்கும் வெகுசில கீரைகளுள் முசுமுசுக்கையும் ஒன்று. வேலிகளில் சர்வ சாதாரணமாகத் தென்படும் கொடி வகைக் கீரை இது.

உலக அளவில் கல்லீரலைப் பலப்படுத்து வதற்காக முசுமுசுக்கையை உணவில் சேர்க்கும் வழக்கத்தை இலங்கையில் காணலாம். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா போன்ற நாடுகளில் பாரம்பரிய மருத்துவம் உயிர்ப்போடு இருக்கும் இடங்களில் முசுமுசுக்கையின் பயன்பாடு தொடர்கிறது.

இதன் பழங்களை முக்கிய மருந்தாக ‘ஜவ்ஹர்’ இன மக்கள் பயன்படுத்துகின்றனர். மேற்கு மலைத்தொடர் மலைவாழ் மக்கள், மேற்கு இமாலயப் பகுதி மக்கள் இதன் இலைகளை நோய் போக்கும் மருத்துவக் கீரையாகக் கருதுகின்றனர்.

சித்த மருத்துவம் ‘இருமலுட னீளை யிரைப்பு புகைச்சல்…’ எனும் அகத்தியர் குணவாகடப் பாடல், இருமல், இரைப்பு (ஆஸ்துமா), மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற நிலைகளில் முசுமுசுக்கையை மருத்துவக் கீரையாகப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிவிக்கிறது. நாற்றத்துடன் கெட்டிப்பட்ட கோழையையும் (சளியும்) இளக்கி வெளியேற்ற முசுமுசுக்கைக் கீரைக்கு இருக்கும் காரம் உதவும் எனப் பதிவிடுகிறது ‘கந்தம்பரவு களிச்சளியும்…’ எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல்.

முசுமுசுக்கை அடை பாரம்பரிய அரிசி ரகங்களுடன் முசுமுசுக்கைக் கீரையைச் சேர்த்தரைத்து, தேவைக்கு உப்பு கூட்டிக் கீரை அடையாகச் சுட்டுச் சாப்பிடக் கப நோய் களுக்கான மருந்தாக அமையும்.

சுரம் அதிகமின்றி சளி, இருமல் தலைதூக்கும்போது, முசுமுசுக்கை அடையைச் சாப்பிட உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சளி, இருமல் காரணமாகச் சுவை உணர்வு குறைந்திருந்தாலும் முசுமுசுக்கை அடைக்கு, முசுமுசுக்கைக் கீரை காரக் குழம்பைத் தொடு உணவாகச் சாப்பிட அறிகுறிகள் குறைந்து சுவை குணம் மேலோங்கும்.

முசுமுசுக்கைத் தேநீர் மூக்கில் நீர் ஒழுகி, தும்மலுக்கான அறிகுறிகள் தோன்றும்போது முசுமுசுக்கை, தூது வளைக் கீரை இரண்டையும் சிறிது சிறிதாக நறுக்கி, சின்ன வெங்காயம், மிளகு சேர்த்துக் கொதிக்கவைத்து சூடான பானமாகப் பருகலாம். சர்க்கரை சேர்க்கப்பட்ட தேநீருக்கு மாற்றாக இந்த முசுமுசுக்கைத் தேநீரை உங்கள் பானப் பட்டியலில் நம்பிக்கையுடன் இணைக்கலாம்.

கீரைப் பொடி முசுமுசுக்கைக் கீரையை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். தொண்டைக் கரகரப்பு, இருமல் இருக்கும்போது இந்தக் கீரைப் பொடி, கொஞ்சம் மிளகுத் தூள், பனைவெல்லம் சேர்த்துப் பாலில் கலந்து பருகச் சட்டென நிவாரணம் கிடைக்கும்.

இந்தக் கீரைப் பொடியைச் சாதத்தில் போட்டு, சிறிது நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து குளிர்காலத்தில் சாப்பிடலாம். பசுமையாகக் கீரை கிடைக்காத காலங்களில், கீரையின் பலன்களைப் பெறுவதற்காக உலர்த்திப் பயன்படுத்தும் மூலிகை உத்தி இது!

கீரையை நல்லெண்ணெயில் வதக்கி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்துத் துவையலாக்கிச் சாப்பிட, நுரையீரல் பாதை தெளிவடையும். அதிகமான உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்த முசுமுசுக்கைக் கீரையை உணவாகச் சாப்பிட்டு, கீரையைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து சீரகம் சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். வயோதிகத்தில் உண்டாகும் சுரப்பிகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு முசுமுசுக்கைக் கீரை நிச்சயம் துணை இருக்கும்.

பெயர்க் காரணம் கீரையைத் தடவும்போது அதிலுள்ள ரோம வளரிகள் மென்மையான உணர்வைக் கொடுப்பதன் காரணமாக முசுமுசுக்கை, மொசுமொசுக்கை போன்ற பெயர்கள் உருவாகியிருக்கலாம். அயிலேயம், முசுக்கை, இருகுரங்கின் கை போன்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

Cucurbitaceae குடும்பத்தைச் சேர்ந்த முசுமுசுக்கையின் தாவரவியல் பெயர் Mukia maderaspatana. நார்ச்சத்து, டானின்கள், சபோனின்கள், யுஜெனால் ஆகிய மருத்துவக் குணங்களை வெளிப்படுத்தும் வேதிப்பொருள்களை உள்ளடக்கிய கீரை இது.

ஆய்வுக்களம் ரத்தக் குழாய்களை மெலிதாக விரிவடையச் செய்வதால், உயர் ரத்த அழுத்த நோயாளர்களுக்கான மருந்தாக இக்கீரை அமையும். நுரையீரல் பாதையை விரிவடையச் செய்து ஆஸ்துமா நோய் அறிகுறியின் தீவிரத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.

செரிமானப் பாதையில் கிருமித்தொற்று ஏற்படுவதை முசுமுசுக்கையின் சாரங்கள் குறைப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. இதிலுள்ள பீனாலிக் பொருள்கள், சர்க்கரைச் சத்தின் புதிய உற்பத்தியைக் குறைப்பதால் நீரிழிவு நோயாளர்கள் எடுக்க வேண்டிய கீரைப் பட்டியலுக்குள் முசுமுசுக்கையைச் சேர்த்துக்கொள்ளலாம்.

கண்களுக்கு மருந்தாகப் பயன்படும் சித்த மருந்தான ‘நீலாஞ்சன மை’ தயாரிப்பில் முசுமுசுக்கையின் சாறும் பயன்படுகிறது. கீரையை மையப் பொருளாக வைத்துத் தயாரிக்கப்படும் சித்த மருத்துவ எண்ணெயைக் கொண்டு தலைமுழுக, உடலில் அதிகரித்துள்ள பித்தம் குறையும்.

- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in