

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருப்பது அன்னபிரசன்னம். இதைத் தமிழில் ‘சோறு ஊட்டும் சடங்கு’ எனக் கூறுவார்கள். பெரும்பாலும் இது குழந்தைகளின் ஆறாம் மாதத்தில் அவர்களது குலதெய்வக் கோயில்களில் அல்லது வீடுகளில் வைத்தே கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஆறு மாதங்களில் இந்தச் சோறு ஊட்டல் ஏன் கடைபிடிக்கப்படுகிறது எனத் தெரிந்துகொள்வோம்.
குழந்தை பிறந்ததில் இருந்து தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே போதுமானதாகும். குழந்தைக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தாய்ப் பாலிலேயே அடங்கியுள்ளன. ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊட்டச்சத்துகளை உணவின் மூலமாக வழங்கவேண்டியுள்ளது.
குழந்தையின் செரிமான மண்டலம்: குழந்தையின் சிறுகுடல் பகுதிகள் அனைத்தும் நோய்க்கிருமிகளுக்கும் பெரிய அளவிலான உணவுப் பொருள்கள் ரத்தத்தில் கலக்காமல் இருக்கவும் ஒரு தடுப்புச் சுவர் போலச் செயல்படும். இந்தச் சிறுகுடலில் உள்ள செல்கள் நன்கு வளர்ச்சியடைந்த பின்பே செல்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்து அவற்றுக்கான பணியை லகுவாகச் செய்ய முடியும்.
இங்கு உள்ள செல்கள் உணவுப் பொருள்களைச் செரிமானம் செய்ய மட்டுமன்றி ரத்தத்தில் சத்துகளை உறிஞ்சவும் நோய்த்தடுப்பாற்றலை அதிகரிக்கவும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு குழந்தைகளுக்குச் செரிமான மண்டலம், சிறுகுடல் பகுதிகள் நன்கு செயல்பட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும்.
அத்துடன் உணவு செரிப்பதற்குத் தேவையான செரிமான சுரப்பிகள் போதுமான அளவில் உற்பத்தியாவதில்லை. ஆறேழு மாதங்களுக்குப் பிறகே குழந்தையால் உணவைச் செரிமான அமிலங்கள் கொண்டு நன்கு ஜீரணிக்க முடிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே திட உணவுப் பொருள்களைக் குழந்தைகளுக்குத் தருவதால் செரிமானக் கோளாறு, உணவுப் பொருள்களைச் செரிப்பதில் சிரமம், செரிமானமாகாத உணவுப் பொருள்களை உறிஞ்சுவதில் சிரமம் போன்றவை ஏற்படுகின்றன.
இதனால் வயிற்றில் உப்புசம், வயிற்று வலி, வாந்தி, கழிச்சல் ஆகிய தொந்தரவுகள் ஏற்படலாம். வயிற்றுக் கோளாறுகள் குழந்தையின் மனநிலையையும் பாதிக்கலாம்.
வயிற்றின் நுண்ணுயிரிக்கட்டு: நமது வயிற்றில் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் காணப் படுகின்றன. அவற்றில் Bifidobacterium, Lactobacillus, staphylococcus, streptococcus, Prevotella Sneathia spp.. போன்றவை அதிக அளவில் இருக்கும். பிறந்த குழந்தையின் வயிற்றிலேயே காணப்படும் இந்த நுண்ணுயிரிகள் சுகப்பிரசவத்தின்போது கருப்பை வாயிலிருந்து பெறப்படுகின்றன. இரண்டாவதாக, தாய்ப்பால் ஊட்டலில் பால் சுரப்புக் குழாய்களி லிருந்து பெறப்படுகின்றன.
நுண்ணுயிர்கள் என்றாலே நோய்த் தொற்றை ஏற்படுத்தும் என்கிற அடையாளத்திலிருந்து விலகி இந்நுண்ணுயிரிகள் குழந்தை பிறந்த திலிருந்து இறுதிவரை வயிற்றுக்கு நன்மை செய்கின்றன.
பயன்கள்: குழந்தைப் பருவத்திலிருந்து நுண்ணுயிரிகளின் அளவு சீராக அமைந்தால் இளமைப் பருவத் திற்குத் தேவைப்படும் நோய் எதிர்ப் பாற்றலுக்கான கட்டமைப்பு மிகவும் வலுவான முறையில் அமையும்.
நுண்ணுயிரிகள் நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத்திற்கு மிகவும் முக்கியம். வளர்சிதை மாற்றக் கோளாறுகளில் ஏற்படும் குறைபாடுகளின் அளவையும் இந்நுண்ணுயிரிகள் குறைக்கின்றன.
வளர்சிதைமாற்றக் குறைபாடுகள்: வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மாறும்போது அது குழந்தைக்கு உடல் பருமனை ஏற்படுத்துகிறது. கொழுப்பு அமிலங்கள் அதிகரிக்கும் போதும், நோய்த்தடுப்பாற்றல் குறையும்போதும் உடல் பருமன் உண்டாகலாம். அறுவைசிகிச்சை முறையில் குழந்தை பிறப்பது, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது, மிக விரைவாகத் திட உணவுப் பொருள்களைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்துதல் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
நுண்ணுயிரிகளின் அளவும் தன்மையும் மாறும்போது அதிலிருந்து உற்பத்தியாகும் பியூட்ரிக் அமிலச் சுரப்பு குறைகிறது. இதனால், ஒவ்வாமை ஏற்படுகிறது. இது ஆட்டோ இம்யூன் நோய்க்கும் அடிப்படையாக அமைகிறது.
நுண்ணுயிரிகளின் ஏற்ற இறக்கம் வயிற்றில் உள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அதிகரித்து குடல் மற்றும் கல்லீரலில் வீக்கத்தையும் சீழ்க்கட்டிகளையும் உண்டாக்குகிறது. மேலும், சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையைப் பாதித்து நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும். இந்த மாற்றம் கல்லீரலில் இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை அழிக்கிறது. இதனால், நீரிழிவு நோயின் முதல் வகையால் பாதிப்பு உண்டாகிறது.
மேற்கண்ட நுண்ணுயிரிகளுக்கும் ஆறு மாதக் குழந்தையின் ஆரம்பகட்ட உணவிற்கும் அதிக அளவிலான ஒற்றுமை உள்ளது. இந்த உணவுப் பொருள்களே உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அழிக்காமல் பாதுகாக்கக்கூடியவை. இவ்வாறு செரிமான மண்டலத்தைச் சீரமைப்பதால் வேகஸ் நரம்பு, ரத்தச் சுற்றோட்டப் பாதை, நோய் எதிர்ப்பு ஆற்றல், வயிற்றில் உள்ள ஹார்மோன் போன்றவற்றில் இருந்து கடத்தப்படும் நரம்புக் கடத்திகள் மூளையைப் பாதுகாக்கும்.
குழந்தையின் வளர்ச்சி நிலைக்கு ஊக்கமளிக்கும். மேலும், ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையிலான காலகட்டத்தில்தான் குழந்தைகளுக்கு 90% வரை மூளை வளர்ச்சி பெறும். எனவே, இப்பருவத்தில் நாம் அளிக்கும் உணவு வயிறு மற்றும் மூளையின் செயல்பாடுகளைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உணவுப் பட்டியல்: ஆறு மாதக் குழந்தைக்குக் கொடுக்கும் முதல் உணவு கூழ் வடிவில் அல்லது மசித்த உணவாக இருப்பதே சிறந்தது. இது உணவைக் குழந்தை விழுங்குவதற்கு ஏதுவாக அமையும். உணவைக் கொடுக்கும்போது பெரியவர்களின் மேற்பார்வையில் வழங்குவது சிறந்தது.
குழந்தைகளுக்குக் கேழ்வரகுக் கூழ், கேழ்வரகுக் களி ஆகியவற்றை வழங்கும்போது குடல் பகுதிகளில் வீக்கம் ஏற்படுவதை நல்ல நுண்ணுயிரிகள் தடுக்கின்றன.
உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், அவகேடோ, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் இயற்கையாகவே உள்ள இனிப்பு நல்ல நுண்ணுயிரிகளின் பெருக்கத்திற்கும் வயிற்றின் செரி மானத்திற்கும் சிறந்ததாக அமையும்.
திரவ வடிவிலான உணவுப் பொருள் களான பருப்புக் கஞ்சி, அரிசிக் கஞ்சி, சூப் போன்றவை குழந்தைகளுக்கு அதிக புரதம் மற்றும் நார்ச் சத்தைத் தரும். இது தேவையற்ற கொழுப்புச் சத்தை கரைக்கும்.
குழந்தைகளுக்கு அதிக அளவிலான நீர்ச்சத்து உடலில் இருப்பது அவசியம். இந்தத் திரவ வடிவிலான உணவு வகைகள் அதைச் சமன் செய்யும்.
திணை, வரகு, கம்பு, குதிரைவாலி போன்ற பொருள்களைக் கொண்டு செய்யப்படும் சத்து மாவினால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே தனித்தனி பொருளாகக் கொண்டு செய்யப்படும் மாவுப் பொருளே குழந்தைக்குச் சிறந்தது. இது கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
சுரைக்காய், மஞ்சள் பூசணிக்காய் உணவு குழந்தைக்கு வயிற்றில் உண்டாகும் கிருமித் தொந்தரவை நீக்கும். இவற்றில் உள்ள அதிகளவு நீர்ச்சத்து வயிற்றில் செரிமானத்தை அதிகப்படுத்தும்.
பழங்களில் உணவாக மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா அகிய வற்றின் கூழ் செரிமானத்தை அதிகப் படுத்துவதோடு உணவில் உள்ள சத்துப் பொருள்களை உறிஞ்சவும் பயன்படுகின்றன.
குழந்தை தானாக விரல்களால் எடுத்துச் சாப்பிடும்போது (9 மாதத்திற்கு மேல்) அசைவ உணவு கொடுப்பது நல்லது. செரிமானம் செய்ய ஏதுவாக அமையும்.
தவிர்க்க வேண்டியவை:
l வேர்க்கடலை, முட்டை, பால் பொருள்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இது குழந்தைகளுக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம்.
l பதப்படுத்தப்படாத உணவு, பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் இருக்கலாம்.
l வேகவைக்காத முட்டை,
வேகவைக்காத பயறு, தானி யங்கள் ஆகியவை குழந்தைக்குச் செரிமானம் ஆகாமல் அஜீரணத்தை உண்டாக்கலாம்.
l தற்காலத்தில் அதிக அளவிலான துரித உணவு மற்றும் மசாலாப் பொருள்கள் கலந்த உணவு வகைகள் காணப்படுகின்றன. அவற்றை இரண்டு வயது வரை குழந்தைக்கு வழங்காமல் இருப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; gayathri6vivek@gmail.com