

எனக்கு வயது 40. எனக்கு, என் கணவர், மகள் மூவருக்குமே உடல் சோர்வு அதிகமாக உள்ளது. வெளியில் சென்றாலோ வேலை செய்தாலோ சீக்கிரத்தில் சோர்வாகிவிடுகிறோம். என்ன காரணம்? இதற்கு என்ன மாதிரியான உணவு எடுத்துக்கொள்ளலாம், டாக்டர்? - ரேவதி, மின்னஞ்சல்.
உடல் களைப்புக்கு உடல் சார்ந்த காரணங்களும் உண்டு; உள்ளம் சார்ந்த காரணங்களும் உண்டு. உடலுக்குத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் கிடைக்காதபோது களைப்பு ஏற்படும். குறிப்பாக இரும்புச் சத்து, விட்டமின் - பி12, விட்டமின்- டி, போலிக் அமிலம் போன்றவை குறைய ஆரம்பித்ததும் களைப்பு தலைகாட்டும். அதேவேளையில் மேற்கத்திய உணவையும் பதப்படுத்தப்பட்ட உணவையும் அடிக்கடி சாப்பிட்டால் களைப்பு உண்டாகலாம்.
இரவில் போதுமான தூக்கம் இல்லாத நிலையில் பகலில் களைப்பு ஏற்படுவது இயல்பு. ரத்தசோகை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், தைராய்டு சுரப்புக் குறைவு, மூட்டழற்சி, நார்த்திசு அழற்சி (Fibromyalgia), குறட்டை, தூக்கத் தடை (Obstructive Sleep Apnea) போன்ற சில நோய்களும் களைப்புக்குக் காரணமாகலாம். ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம், பிற தாதுக்களின் அளவு குறையும்போதும் களைப்பு ஏற்படுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம், மனப்பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் களைப்பு உண்டாகிறது.
தேவையான பரிசோதனைகளைச் செய்து காரணம் தெரிந்து சிகிச்சை பெறுங்கள். களைப்பு கலைந்துவிடும். களைப்பைப் போக்கும் உணவு தொடர்பாக மட்டும் நீங்கள் கேட்டிருப்பதால், அது குறித்த குறிப்புகள் இவை: முழுதானிய உணவையும் சிறுதானிய உணவையும் எடுத்துக்கொள்ளுங்கள். தினமும் இரண்டு வகைக் காய்கறிகளையும் உங்களுக்குப் பிடித்த பழங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
புரதம் நிறைந்த காளான், இறைச்சி, ஈரல், பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், பட்டாணி, அவரை, துவரை, சுண்டல், முளைகட்டிய பயறு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பாதாம் பருப்பு, வாதுமை, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகளும் உதவும்.
நான் நாள்பட்ட சுவாசத்தடை நோய் (COPD), உயர் ரத்த அழுத்தம், பார்கின்சன் நோய், குடலிறக்கம் ஆகியவற்றுக்கு அலோபதி மாத்திரைகள் எடுத்துவருகிறேன். மலச்சிக்கல் போன்ற சாதாரண பிரச்சினைகளுக்கு ஆயுர்வேத மாத்திரைகள் எடுத்துக்கொள்ள லாமா? ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுமா? - ஏ. காந்திமதிநாதன், பழனி.
அலோபதி மருந்துகளுடன் ஆயுர்வேத மருந்து களை எடுத்துக்கொள்ளும்போது அவ்வளவாகப் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஆனாலும், உங்கள் குடும்ப மருத்துவரின் ஒப்புதலுடன் அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் சரியாக இருக்கும்.
காய்கறி, கீரைகளின் விளைச்சலுக்கு இப்போது அதிக அளவில் வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இம்மாதிரி விளைவிக்கப்பட்ட காய்கறி, கீரைகளைச் சாப்பிடுவது ஆபத்தில்லையா? - மைத்ரேயி, விழுப்புரம்.
ஆபத்து உண்டுதான். காய்கறிகளையும் கீரைகளையும் நன்றாகத் தண்ணீரில் பல முறை அலசிச் சுத்தப்படுத்திவிட்டுச் சமையலுக்குப் பயன்படுத்துங்கள். நீங்கள் அச்சப்படும் ஆபத்துகள் குறையும். அல்லது வீட்டில் இடம் இருந்தால் வீட்டுத் தோட்டமோ மாடித்தோட்டமோ போட்டு, உங்களுக்குத் தேவையான காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுங்கள். பிரச்சினை வராது.
எனக்குச் சில மாதங்களாக ஒவ்வொரு வேளை உணவு சாப்பிட்ட பிறகும் அசௌகரியம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. அடிக்கடி ஏப்பம் வருவது, வாயு பிரிவது போன்ற அறிகுறிகளும் உள்ளன. இதற்கு என்ன தீர்வு? - லஷ்மிஸ்ரீ, சென்னை.
நெஞ்செரிச்சலுக்கு இரைப்பையில் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் அமிலத்தைச் சமன் செய்யும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் இரைப்பை அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கும் மருந்துகளும் வாந்தித் தடுப்பு மருந்துகளும் உதவுகின்றன. இவை தவிர, நெஞ்செரிச்சலை வரவேற்கும் உணவைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாகக் காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய பன்னாட்டு உணவு வகைகளை ஒதுக்குங்கள்.
ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. கவலையாக இருக்கும்போதோ கோபமாக இருக்கும்போதோ சாப்பிட வேண்டாம். அதுபோல் பேசிக்கொண்டே சாப்பிட வேண்டாம். காபி/தேநீர் அடிக்கடி வேண்டாம். காற்றடைத்த செயற்கைப் பானங்கள், குளிர்பானங்கள், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். மோரும் இளநீரும் நல்லது. சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள்.
குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூடப் படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஓர் அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது. இடது பக்கமாகப் புரண்டு படுப்பதுதான் சிறந்தது. உடற்பருமன் இருந்தால் அதைக் குறைக்க வழி பாருங்கள். அப்போதுதான் நெஞ்செரிச்சல் தொல்லை நிரந்தரமாகத் தீரும்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com