

சற்றே நீண்ட இலைகள், அவற்றின் ஓரத்தில் உளி கொண்டு செதுக்கியது போன்ற மெலிதான வெட்டுப் பற்கள், இலைகள் முழுவதும் நலக்கூறுகள். காசினிக் கீரைக்கான முன்னோட்டம் இது. கசப்புச் சுவையின் மருத்துவப் பலன்களை அச்சுப்பிசகாமல் வழங்கும் கீரை காசினி!
வட ஆர்க்காடு மாவட்டத் தில் காசினிக் கீரை என்கிற பெயரைவிட ‘போண்டா கீரை’ என்கிற பெயரால் இக்கீரையை மக்கள் நன்கறிவார்கள். அங்குப் புகழ்பெற்ற கீரை போண்டாவில் கீரையின் பெயரைத் தூக்கி நிறுத்துவது காசினிக் கீரைதான். வட மாவட்டத் தேநீர்க் கடைகளின் பிற்பகல் பொழுதுகளில் சுடச்சுட விற்பனையாகும் காசினி போண்டாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். போண்டா கீரையாக மட்டுமே அறியப்பட்ட இந்தக் கீரை கல்லீரல் செல்களைப் புதுப்பிக்கும் கீரை மருத்துவர்.
உலகளாவிய உணவில்: 1930களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின்போது இக்கீரை பலரின் பசியைத் தீர்த்திருக்கிறது. காசினிக் கீரையை ஆவியில் வேக வைத்து ஆலிவ் எண்ணெயில் வதக்கிச் சாப்பிடும் உணவுப் பழக்கம் அல்பேனியர்களுக்கு உண்டு. பல்வேறு உலக நாடுகளில் காபித் தூளுக்கு மாற்றாக இதன் வறுத்த வேர் பயன்படுத்தப்படுகிறது. கிரேக்க, துருக்கிய காபி ரகங்களில் சுவையைக் கூட்ட இதன் வேர் உதவுகிறதாம். நம் நாட்டு ஃபில்டர் காபியில்கூட இதன் வேர்ப் பொடி இடம்பிடிப்பதைப் பார்க்கலாம்.
Asteraceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த காசினிக் கீரையின் தாவரவியல் பெயர் Cichorium intybus. பீட்டா கரோட்டின் நிறைந்த கீரை ரகம். விட்டமின் – ஏ, பி, கே போன்றவற்றுக்கு ஆதாரமாக இருப்பதால் விட்டமின்களின் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். சிறுநீரைப் பெருக்கி உடற் கழிவுகளை முறை யாக வெளியேற்றும். உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்த வேண்டிய கீரை காசினி.
காசினிக் கீரை சூப் காசினிக் கீரையையும் வெற்றிலையையும் நறுக்கி, மிளகு, சீரகம் சேர்த்துத் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து சூப் தயாரித்துச் சூடாகப் பருக, மலம் இளகலாகும். காசினிக்கீரை, கீழாநெல்லியை அரைத்து மோரில் கலந்து காலை பானமாக வேனிற்காலங்களில் குடித்துவர, செரிமான மண்டலம் பலமடைவதோடு உடலுக்குள் குளிர்ச்சியும் விரவிப் பரவும்.
காசினிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, மூக்கிரட்டை கீரை மூன்றையும் சம அளவு எடுத்துப் பாசிப் பருப்புடன் வேகவைத்துக் கடைந்து உணவில் வாரம் இரண்டுமுறை சேர்த்துவர, பாதிக்கப்பட்ட கல்லீரலுக்கான மருந்தாக இருக்கும். கல்லீரல், சிறுநீரக உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுதல், ரணங்களை ஆற்றுதல், காம உணர்வைத் தூண்டுதல், வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் அறிகுறிகளைத் தணித்தல் எனப் பல்வேறு பலன்களை வழங்கும் கீரை இது.
மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்குக் காசினிக் கீரையால் செய்த உணவை மருந்தாகக் கொடுக்க, சீரழிந்த உள் உறுப்புகளின் செயல்பாடுகள் மேம்படும். காசினிக் கீரையோடு சோம்பு, தனியா விதைகளைச் சேர்த்து தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்த குடிநீரை, மது அருந்துவதால் உண்டாகும் நஞ்சுக்கு முறிவாக வழங்கலாம்.
ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால் நீரிழிவு நோயாளர்கள் காசினிக் கீரையோடு நெருங்கிய நட்பு கொள்ளலாம். இதிலுள்ள ஆந்தோசயனின்கள் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும். சுரத்தைக் குறைக்க கீரையையும் அதன் வேரையும் குடிநீரிலிட்டுப் பருகலாம்.
ஆய்வுக்களம்: எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கல்லீரலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைக் காசினிக் கீரையின் சாரங்கள் தடுப்பதாகத் தெரியவருகிறது. கல்லீரல் பாதிக்கப்படும்போது அதிகரிக்கும் என்சைம் களை விரைவாகத் தன்னிலைக்குக் கொண்டுவர காசினிக் கீரை உதவுகிறது. இதிலிருக்கும் ஷிகிமிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது. கீரையிலுள்ள செஸ்குய்டெர்பீன்கள் குடற்பகுதியில் மையமிடத் துடிக்கும் புழுக்களின் ஆதிக்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்கிறதாம்.
கல்லீரலுக்கு வலிமை அளிக்கக்கூடிய சித்த மருந்துகளில் காசினிக் கீரை நீக்கமற இடம்பிடிக்கிறது. கல்லீரலைப் பலப்படுத்தும் மூலிகைகள் வரிசையில் கரிசாலை, கீழாநெல்லியோடு காசினிக் கீரைக்கும் இடமுண்டு. உலர்ந்த காசினிக் கீரையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, கீரைக் கொதிநீராகத் தயாரித்து, கிரீன் டீ சாயலில் கல்லீரலுக்கான மருந்தாக ஆப்பிரிக்க நாடுகளில் பருகுகின்றனர்.
கீரைக் குறிப்பு: முதிர்ந்த காசினிக் கீரையில் கூடுதல் கசப்புச் சுவை இருக்கும் என்பதால் இளம் கீரையைப் பயன்படுத்துவது சிறப்பு. காசினிக் கீரையின் தகுந்த சுவையைப் பெற, கீரையை வேகவைத்து பூண்டு சேர்த்து வதக்கிய பின் உபயோகிக்கலாம். ஈரப்பசை நிறைந்த நிலத்தில் விதைகளைத் தூவ, செழித்து வளரும்.
காசினி, நலத்துக்கான அச்சாணி!
- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com