பச்சை வைரம் 17: கல்லீரல் கவசம் கரிசலாங்கண்ணி

பச்சை வைரம் 17: கல்லீரல் கவசம் கரிசலாங்கண்ணி
Updated on
2 min read

வெட்டிய தண்டு களை மண்ணில் புதைக்க, நிலம் முழுவதும் விரிந்து பரவி நிலத்திற்குப் பசுமைப் போர்வை அமைத்து, இரும்புச் சத்துப் பெட்டகமாகக் காட்சியளிக்கும் கீரை கரிசலாங்கண்ணி. ‘வாக்குண்டாம்… நல்ல மன முண்டாம்…’ எனத் தொடங்கும் ஔவையின் செய்யுள் கரிசலாங்கண்ணிக் கீரையின் சிறப்பை உணர்த்தும்.

ஜாவா, பாலித் தீவுகளில் கரிசலாங் கண்ணிக் கீரையை உணவாகப் பயன் படுத்தும் வழக்கம் இருக்கிறது. பூண்டு, மிளகாய் உதவியுடன் செய்யப்படும் காரமிக்க ‘செம்பல் டெராசி’ எனும் சாஸ் போன்ற தொடு உணவில் கரிசலாங்கண்ணி மற்றும் சில காய் ரகங்களைத் தொட்டுச் சாப்பிடுவது இந்தோனேஷியர் களின் வழக்கம். மொத்தமாக இந்த உணவின் பெயர் ‘லலாப்’.

சித்த மருத்துவம்: ‘குரற்கம்மல் காமாலை குட்டமொடு சோபை…’ எனும் கரிசாலை குறித்த அகத்தியர் குணவாகடப் பாடல், குரல்வளையில் ஏற்படும் பாதிப்புகள், தோல் நோய்கள், வீக்கம், காமாலை ஆகியவற்றுக்கான மருந்தாகக் கரிசலாங்கண்ணியைக் குறிப்பிடுகிறது. கைப்புச் சுவையுடைய கீரையாக இருப்பினும் நளபாகச் சமையல் மூலம் சுவைமிக்க உணவைத் தயாரிக்கலாம்.

பொன்னாங்கண்ணி, கரிசலாங் கண்ணியை வேகவைத்துத் தண்ணீர் வடித்து, மீண்டும் ஒரு முறை வேகவைத்து, மிளகுத் தூள், சீரகம் சேர்த்து நெய் விட்டு வதக்கிச் சாப்பிட மெலிந்திருக்கும் தேகம் சதை பிடிக்கும் என்பது வள்ளலார் குறிப்பு. வள்ளல் பேகனுக்கு நிகராகக் கரிசலாங்கண்ணியைப் பெருமைப்படுத்தலாம்.

ஏன் தெரியுமா? - இரும்புச் சத்துக் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு ஊட்டச்சத்துப் போர்வையை ஆதரவாக வழங்கும். சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் கரிசலாங்கண்ணி, தூதுவளை, முசுமுசுக்கை ஆகியவற்றைக் கலவைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

பெயர்க் காரணம்: கைவீசி இலை, கரிப்பான் கீரை, கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரசனாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) போன்ற வேறு பெயர்களை உடையது. கருமை நிறத்திலான சாயத்தைக் கொண்ட கீரை (கரிசல் ஆம் காண் நீ) என்கிற பொருளில் கரிசலாங்கண்ணி என்று பெயர்.

கரிசாலைக் கீரையோடு பூண்டு, மிளகு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட செரிமானக் கருவிகள் உற்சாகமடையும். கீரையோடு பருப்பு சேர்த்துக் கடைந்து, மணத்தக்காளி வற்றல் தூவி சாப்பிட வயிற்றுப் புண்ணுக்கான மருந்தாக அமையும். கூர்மையான பார்வையை விரும்புபவர்கள் உணவில் சேர்க்க வேண்டிய கீரை ரகம் இது.

‘கையான்சார் சோகைக்குக் காலமே யேற்றிடு’ எனும் மூலிகைக் குறள், உடலில் ஏற்படும் வீக்கத்துக்கான உணவாகக் கரிசாலைக் கீரையைச் சுட்டுகிறது. கூர்ந்து நோக்கினால், கல்லீரலின் செயல்பாட்டை அதிகரித்து, கல்லீரலுக்கான பாதுகாப்புக் கவசமாக கரிசாலைக் கீரை செயல்படும்.

கரிசாலை லேகியம், கரிசாலை சூரணம், கரிசாலை மை, கரிசாலை எண்ணெய், கரிசாலை கற்ப மாத்திரை, கரிசாலை நெய், கரிசாலை மடக்குத் தைலம், அயபிருங்கராஜ கற்பம் எனக் கரிசாலைக் கீரையால் முதன்மைப் பெயர் பெறும் சித்த மருந்துகள் எண்ணிக்கையில் அதிகம். சித்த மருந்துகளின் தயாரிப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கீரை ரகம் கரிசாலைதான்!

பித்தம் போக்கும்: வெயில் காலத்தில் கரிசாலையையும் கீழாநெல்லிக் கீரையையும் அரைத்து மோரில் கலந்து உடலைக் குளிர் விக்கும் பானமாகப் பருகலாம். கரிசாலைக் கீரையோடு அம்மான் பச்சரிசி, தும்பை சேர்த்து வேகவைத்துச் சாப்பிட, உடலில் அதிகரித்திருக்கும் பித்தம் சாந்தமடையும்.

கரிசாலை, கறிவேப்பிலை, மருதாணி, செம்பரத்தை, நெல்லிக்காய் ஆகியவற்றை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி தலை முழுகும் எண்ணெய்யாகப் பயன்படுத்த, உடல் குளிர்ச்சியடைவதோடு தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இயற்கையான தலைமுடி சாயம் தயாரிப்பதற்கு வெள்ளைக் கரிசாலை பயன்படுத்தப்படுகிறது.

ஆய்வுக்களம்: கரிசாலைக் கீரையை உணவாகத் தொடர்ந்து சாப்பிட, அறிவின் தெளிவு உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். இதை உறுதிப்படுத்தும் விதமாக மூளை செல்களைப் புத்துணர்வுடன் வைத்திருக்கக் கரிசாலைக் கீரையில் உள்ள வேதிப்பொருள்கள் உதவும் என்கிறது ஆய்வு. கீரையை உணவாக எடுத்துக்கொள்ள, உடல் வலுவடைந்து இரும்பு போல பலமாகும் எனும் குறிப்பைக் கரிசாலையின் எதிர்-ஆக்ஸிகரணி செயல்பாட்டோடு பொருத்திப் பார்க்கலாம்.

பித்த நீர் வெளியேற்றத்தை முறைப்படுத்தி சில வகையான காமாலைக்கு மருந்தாக அமையும். ‘அஸ்டிரேசியே’ (Asteraceae) குடும்பத்தைச் சார்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா புரோஸ்ட்ரேட்டா’ (Eclipta prostrata). இதிலுள்ள ‘விடெலோலாக்டோன்’ எனும் வேதிப்பொருளுக்கு பாக்டீரியாவை அழிக்கும் வன்மை இருக்கிறது.

கவனம்: பூங்காக்களில் பெரிய இலை களுடன் மஞ்சள் நிறப் பூக்களுடன் அழகுத் தாவரமாக காட்சி அளிப்பது உண்மையான கரிசாலை அல்ல. சற்றே நீண்ட இலைகளுடன் நீர்வரத்து இருக்கும் இடங்களில் முளைத்திருப்பதே கரிசாலை!

கரிசாலை, ஆயுள் அதிகரிக்கும் காயகற்பக் கீரை!

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in