

எனக்கு மாலையிலும் இரவு வேளைகளிலும் மட்டும் இடுப்பு மற்றும் பின் பக்கங்களில் அரிப்பும் தடிப்பும் ஏற்படுகின்றன. சில நேரம் உதடும் தடித்துவிடுகிறது. இது எதனால், டாக்டர்? தடுக்கும் வழிமுறை என்ன? - சத்தியமூர்த்தி, கும்பகோணம்.
உங்கள் அறிகுறிகள் ஒவ்வாமையின் விளைவாகத் தெரிகின்றன. பொதுவாக உணவு, உடை, சோப், க்ரீம், அழகுச் சாதனப்பொருள்கள் போன்றவற்றின் ஒவ்வாமைதான் காரணமாக இருக்கும். செயற்கை மணமூட்டிகள், நிறமூட்டிகள், சுவையூட்டிகள், பதப்படுத்த உதவும் வேதிப்பொருள்கள் போன்றவையும் இம்மாதிரியான அறிகுறிகளை ஏற்படுத்தும்.
கொசுக்கடியிலிருந்து சிலந்திக் கடி வரை பலதரப்பட்ட பூச்சிக்கடிகளும் இதற்குக் காரணமாகலாம். சில மருந்துகளும் இதற்கு விதிவிலக்கல்ல. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பும் தடிப்பும் ஏற்படலாம். சொத்தைப் பல், சிறுநீரக அழற்சி, தொண்டை அழற்சி, குடல் புழு எனத் தொற்றுகள் பலவும் இம்மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகளைக் காட்டும். உங்களுக்கு எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பது மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவரலாம். அந்தக் காரணத்தைக் களைந்தால் உங்களுக்கு அரிப்பிலிருந்தும் தடிப்பிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
ஆஸ்துமா உள்ள ஒன்பது வயதுச் சிறுவர்களுக்கு Levolin inhaler தொடர்ந்து கொடுப்பதில் பாதக அம்சங்கள் ஏதேனும் உள்ளனவா? - வீ. வெள்ளிங்கிரி, மேட்டுப்பாளையம்.
பொதுவாக இன்ஹேலர் மருந்து பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்து. இது ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டில் வைக்கும். நேரடியாக மூச்சுக்குழலுக்குள் சென்று அங்குள்ள மூச்சுத்தடையை விலக்கி, சுவாசம் சீராக நிகழ உதவும். நீங்கள் பயன்படுத்தும் ‘லிவோலின் இன்ஹேல’ரைச் சரியான அளவில் பயன்படுத்தினால் பாதகமாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது. அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் சில நேரம் படபடப்பு, விரல் நடுக்கம், குமட்டல், வாந்தி போன்ற சிறு சிறு தொல்லைகள் ஏற்படலாம்.
என் மகனுக்கு இரண்டரை வயது. அவன் அழும்போது மூச்சு நின்றுவிடுகிறது. முகத்தில் தண்ணீர் தெளித்துச் சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவன் கண் விழிக்கிறான். இது எதனால், டாக்டர்? - எம். முத்து, ராணிப்பேட்டை.
மூச்சு நின்றுவிடும் அளவுக்குக் குழந்தை அழுவதற்குத் தானியங்கி நரம்பு மண்டலத்தின் முதிர்ச்சியின்மைதான் அடிப்படைக் காரணம். பொதுவாக அடிபடுதல், வலி, ஏமாற்றம் போன்றவை இதற்குத் தூண்டும் காரணிகளாக அமையலாம். பரம்பரையில் பெற்றோருக்கு இது இருந்திருக்குமானால் குழந்தைக்கும் வரலாம்.
குழந்தைக்கு இதயத் துடிப்பில் மாறுதல் (Arrhythmia) இருந்தாலோ ரத்தசோகை இருந்தாலோ இது அடிக்கடி ஏற்படலாம். அப்போது இசிஜி, ரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படலாம். தானியங்கி நரம்புகள் நன்றாக வளர்ச்சி அடைந்த பிறகு இந்தப் பிரச்சினை தானாகவே சரியாகிவிடும். வழக்கத்தில் ஐந்து வயதுக்குப் பிறகு இது ஏற்படுவதில்லை. ஆகவே, பயம் தேவையில்லை.
தினமும் இரவுத் தூக்கத்தில் கனவுகள் ஓய்வதே இல்லை. விடியும் வரைகூட அது தொடர்கிறது. எனக்கு வயிற்றில் வாயுத் தொல்லை இருக்கிறது. வயிறு மனிதனுக்கு இரண்டாவது மூளை என்கிறார்கள் வயிற்று நல மருத்துவர்கள். வயிறு - மூளை - கனவு தொடர்பு என்ன டாக்டர்? - என். விஸ்வநாத்,கோவை.
வயிற்றில் உள்ள குடலுக்கும் மூளைக்கும் தொடர்பு உண்டு (Gut – Brain Axis). குடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது ‘சைட்டோகைன்’ எனும் வேதிப்பொருள் அங்கே சுரக்கப்படுகிறது. இது மூளைக்குச் சென்று உறக்கச் சுழற்சியைச் சிதைக்கும். அப்போது கனவுகள் உண்டாகும். உங்கள் வாயுத் தொல்லையைச் சரிப்படுத்துங்கள். கனவுகள் வருவது குறையலாம்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com