பச்சை வைரம் 16: நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்த பாலக் கீரை

பச்சை வைரம் 16: நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்த பாலக் கீரை
Updated on
2 min read

மலர்கள் இதழ்களை விரிப்பதைப் போல, கீரை ஒன்று பூமியிலிருந்து நேரடியாகத் தனது இலைகளை விரித்துப் பசுமையோடு நலத்தைப் பரப்பும்! சுவைமிக்க அக்கீரையின் பெயர் பாலக் கீரை! விவசாய நிலத்தில் பாலக் கீரை, முள்ளங்கிக் கீரையைத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது, ‘இரண்டும் ஒன்றுதானோ…’ எனும் சந்தேகம் துளிர்விட வாய்ப்பு அதிகம். பொது வெளியில் ‘பாலக்’ என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பாலக் கீரை பலத்தைக் கொடுக்கும் பயில்வான் வகையறா!

‘விருந்தாளி வரப் போறாங்க… அதனால இன்னைக்கு பாலக்கீரைக் கடையல்…’ எனக் கிராமங் களில் சமீபமாகச் சொல்லும் அளவுக்கு மவுசு மிக்க கீரையாக மாறி இருக்கிறது. தனித்துவமான சுவையாலும், வாசனையாலும் விருந்தாளிக்கு மகிழ்வைக் கொடுக்கும் கீரை ரகம் இது. ‘கீரையே பிடிக்காது’ என்று அடம்பிடிப்ப வர்களுக்கு, பாலக் கீரையோடு பருப்பு சேர்த்துக் கடைந்து நெய் ஊற்றிப் பிசைந்து கொடுக்க, அதன் சுவையில் மயங்கி பாலக் கீரைக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளராக மாறிவிடுவார்கள். குறிப்பாகக் குழந் தைகளுக்குச் சுவைமிக்க பாலக் கீரை உணவு வகைகளை அறிமுகப் படுத்த, கீரை உணவு வகைகளின் மீது விருப்பம் கொள்வார்கள்.

ஊட்டப் பற்றாக்குறை உடையவர்கள், இதர காய் ரகங்களோடு நறுக்கிய பாலக் கீரை, முளைக் கட்டிய தானி யங்களைச் சேர்த்துப் பச்சையாக சாலட் போலச் சாப்பிடலாம். தாய்ப்பால் சுரப்பை அதி கரிக்கப் பாலக் கீரையை வேகவைத்துப் பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடும் கிராமத்து வழக்கம் கைகொடுக்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் நம்பிக்கையுடன் பாலக் கீரையை முயன்று பார்க்கலாம். பருப்பு வகை களுடன் சேர்த்து பாலக் கீரையைக் கடையலாகச் செய்யும்போது, உணவின் சுவையைக் கூடுதலாக உணர்த்தி, ஊட்டத்தைப் பரிசளிக்கும்.

ஆய்வுக்களம்: நார்ச்சத்து மிக்க கீரை என்பதால், அதிகரித்த கொழுப்புச் சத்தின் அளவைக் குறைக்க இது பேருதவி புரியும். குறைவான கலோரிகளோடு நிறைவான ஊட்டத்தை வழங்குவதால், உடல் எடையைக் குறைக்க நினைப்ப வர்கள் பாலக் கீரை உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். தேவையான கலோரிகளைக் கொடுத்து, உணவு சாப்பிட்ட திருப்தியை (Feeling of Satiety) இது அளிக்கிறதாம்.

எலும்புகளுக்கு வலிமை அளிக்க பாலக் கீரையில் உள்ள சுண்ணச் சத்து உதவுகிறது. விட்டமின் – ஏ, மக்னீஷியம் போன்ற நுண்ணூட்டங் களும் பாலக் கீரையில் அதிகம். இதிலுள்ள எதிர்-ஆக்ஸிகரணிப் பொருள்கள் பல்வேறு நோய்களுக்கு முட்டுக்கட்டை போடும். நீரிழிவு நோயாளர்களுக்கும் உகந்த கீரை இது. சிறுநீர் எரிச்சலைக் குறைத்து, சிறுநீர்ப் பாதைத் தொற்றுகளைத் தடுக்க உதவும்.

பாலக் கீரையின் உதவியுடன் விதவிதமான உணவு ரகங்களைச் சமைக்கலாம் என்பதால், இயற்கை உணவகங்களில் சமீபமாக அதிகளவில் பாலக் கீரை சுவை பரப்புவதைப் பார்க்க முடிகிறது. பாலக் ரொட்டி, பாலக் பனீர், தால் பாலக், பாலக் பக்கோடா, பாலக் வெஜ் கறி, பாலக் புர்ஜி, பாலக் ராஜ்மா கறி எனப் பாலக் கீரையின் ஆதரவை உணவகங்கள் நாடத் தொடங்கி இருக்கின்றன. ஆனால், நம் வீட்டில் பாலக் கீரைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

பச்சை நிற தோசைகள்: பாலக் கீரை, சின்ன வெங் காயம், பூண்டு ஆகியவற்றை எண்ணெய்யில் பொன் நிறமாக வதக்கி, ஆறிய பின் அரைத்து, தோசை மாவுடன் கலந்து சுவைமிக்க தோசை களைச் சுட்டுச் சாப்பிடலாம். தோசை சுடும்போது அதில் நறுக்கிய பாலக் கீரையைத் தூவிச் சாப்பிட நொறுவைத்தன்மைமிக்க கீரை தோசைகள் பிறக்கும். ‘பச்சை தோசை’ என நிறத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, கீரைகளின் பக்கம் அவர்களைச் சுண்டி இழுக்கலாம். இதே முறையில் பாலக் சப்பாத்தி, பாலக் அடை என விதவிதமாகப் பிரமாதப்படுத்தலாம்.

முட்டையில் இருந்து கோழியா, கோழியில் இருந்து முட்டையா எனும் விவாதக் கேள்விபோல, பாலக் கீரை உடன் சேரும் பொருள்களால் உணவுக்கு ருசியா அல்லது பாலக் கீரையின் மகிமையால் மட்டும் ருசி உண்டாகிறதா என்பதை அறிய முடியாமல் உணவுப் பிரியர்கள் அல்லாடுவதும் ஓர் உணவு வேடிக்கைதான்.

பாலக் கீரையானது வட மாநிலங்களில் அதிகம் பயிராவதுடன், அவர்களது அன்றாடச் சமையலிலும் இடம்பிடிக்கிறது. நமது சூழலிலும் தாராளமாக வளரும். வருடம் முழுவதும் நமக்காக முளைத்து பலன் தரக்கூடியது. இருப்பினும் ஜூலை முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் கிடைக்கும் கீரையில் ஊட்டம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். பசளைக் கீரையும், பாலக் கீரையும் ஒன்றுதான் என்பது தவறான தகவல். பாலக் கீரை, பாலாக் கீரை என்றும் உச்சரிக்கப்படுகிறது. பாலக் கீரை, சுவைக்கு உத்தர வாதம்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in