

என் அம்மாவுக்கு வயது 48. ஆஸ்துமா முதல்நிலையில் உள்ளது. பகலில் அவ்வளவாக இருமல், இளைப்பு இருப்பதில்லை. இரவில் தான் அதிகத் தொந்தரவு. மருந்துகள் எடுத்துக்கொண்டு சமாளித்து வருகிறார். அம்மாவுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் கூற முடியுமா, டாக்டர்?
- ஜமுனா சேகர், மின்னஞ்சல்.
உணவு ஒவ்வாமை ஆஸ்துமாவைத் தூண்டும் என்பது உண்மைதான். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவு ஒவ்வாமை உள்ளது. ஒருவருக்குப் பாயசமாக இருப்பது, அடுத்தவருக்கு விஷம் போலிருக்கலாம். எனவே, பொதுவான பரிந்துரைகள் எல்லாருக்கும் பொருந்துவதில்லை. ஒருவருக்கு ஒருமுறை ஓர் உணவு ஒவ்வாமை ஆகிறது என்றால், அந்த உணவை அவர் அடுத்தமுறை சாப்பிடக் கூடாது என்பதுதான் ஒவ்வாமையைத் தடுக்கும் பொதுவான விதி. ஒவ்வாமை ஆகிற ‘டாப்-டென்’ உணவு வரிசையில் முதலிடம் பிடிப்பவை பாலும் தயிரும் என்பது அநேகருக்கும் தெரியாது. அதற்கு அடுத்ததாக வரும் ஒவ்வாமை உணவு வகைகள் இவை: முட்டை, வேர்க்கடலை, இறைச்சி, கடல் மீன்கள், இறால், நண்டு, கருவாடு, கத்தரிக்காய், தக்காளி, எலுமிச்சை, பயறு, உருளைக்கிழங்கு, செர்ரி பழம், சாக்லெட், கோதுமை, கொட்டை வகைகள், செயற்கைக் குளிர்பானங்கள். மேலும், அதிகமாக வண்ணம் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், செயற்கை நறுமணம் கலந்த உணவு வகைகள் போன்றவற்றில் ஒவ்வாமையைத் தூண்டும் வேதிப்பொருள்கள் இருக்கும். உதாரணத்துக்கு, சீன உணவு வகைகளில் ‘அஜினோமோட்டா’ உப்பு சேர்க்கப்படுவது உண்டு. இதிலுள்ள ‘மோனோசோடியம் குளுட்டமேட்’ எனும் வேதிப்பொருளுக்கு அலர்ஜியை உண்டாக்கும் தன்மை அதிகம்.
என் வயது 16. முடி உதிர்தல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும், டாக்டர்?
-இர. வர்ஷிதா, ஆனைமலை.
முடி உதிர்வதற்கு ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு குறைவாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்பது உண்மைதான். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. சீவும் சீப்பில் தொடங்கி உடலைத் தாக்கும் நோய்கள் வரை அநேகக் காரணிகள் அதற்கு உண்டு. ஆளுக்கு ஆள் அந்தக் காரணி மாறும். அக்காவுக்கு பிளாஸ்டிக் சீப்பு பிரச்சினை செய்கிறது என்றால், தங்கைக்கு ஹேர் டிரையர்தான் தலைமுடிக்குச் ‘சூடு’ போடும். அம்மாவுக்குத் தரம் குறைந்த தலைச்சாயம் எதிரியாக இருக்கும். அத்தைக்கு முடியை இறுக்கமாகக் கட்டுவது காரணம் எனில், சித்திக்கு ஈரத்துடன் தலை வாருவது காரணமாக இருக்கும். சித்தப்பாவுக்கு அடிக்கடி சோப்பு/ஷாம்பு மாற்றும் பழக்கம் இருக்கும். அதுதான் அவருக்குத் தலைமுடி உதிரக் காரணமாக இருக்கும். பாப்பாவுக்கு முடி கொட்ட அவளை அறியாமலேயே முடியைப் பிடுங்கும் பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம். தலையில் ஈறு, பேன், பொடுகு, படைகள் இருந்தாலும் இதே நிலைமைதான்.
பெண்களுக்கு நீண்ட கூந்தலை அள்ளிக் கொடுப்பது ஹார்மோன் கெமிஸ்ட்ரி. அதே நேரத்தில், சில பெண்களுக்குத் தலையில் சொட்டை விழவைப்பது அதே கெமிஸ்ட்ரி செய்யும் அட்டகாசம்தான். ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டிரோன் என்னும் இரண்டு ஹார்மோன்கள் பெண்கள் பருவமடையும்போது, மாதச் சுழற்சியின்போது, கருத்தரிக்கும்போது, பிரசவத்தின்போது, மாதவிலக்கு நிற்கும்போது என வாழ்வின் பல பருவங்களில் இசைக்கு நடனமாடும் நீரூற்றுகள்போலத் தங்கள் சுரப்பைஇஷ்டத்துக்குக் கூட்டிக்குறைத்து வேடிக்கை காட்டும். அப்போதெல்லாம் அவர்களுக்குத் தலைமுடி உதிரும். தைராய்டு சுரப்பி பிரச்சினை செய்வதும், சினைப் பையில் நீர்க்கட்டிகள் பிறப்பெடுப்பதும் முடி உதிர்தல் பிரச்சினைக்குத் தூபம் போடும். உங்களுக்கு என்ன காரணத்தால் முடி உதிர்கிறது என்பதை அறிந்து சிகிச்சை பெறுங்கள். முடி உதிர்வது நிற்கும்.
எனது இடது கை ஆள்காட்டி விரலில் நகம் கருமையாக மாறியுள்ளது. இது உடலின் வேறு ஏதாவது நோயின் அறிகுறியா? இதனைத் தீர்க்கும் வழி உள்ளதா, டாக்டர்?
- க.ராஜேந்திரன், உளுந்தூர்பேட்டை
நகம் கறுப்பாக மாறுவதற்கு (Melanonychia) முக்கியக் காரணம், கிருமித் தொற்று. அதிலும் குறிப்பாகக் காளான் தொற்று (Fungus). அடுத்தபடியாக, புரதச்சத்துக் குறைபாட்டையும் விட்டமின் பி12, விட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகளின் குறைபாட்டையும் சொல்லலாம்.
சில ஹார்மோன் குறைபாடுகளும், இதய நோய், சோரியாசிஸ் உள்ளிட்ட சில நோய்களும், தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்படும் சில மருந்துகளும் காரணமாகலாம். முன்பு எப்போதாவது நகத்தில் அடிபட்டிருந்தாலும் இந்தப் பிரச்சினை வரலாம். மருத்துவரைச் சந்தித்து காரணம் தெரிந்து சிகிச்சை எடுங்கள். உங்கள் நகம் இயல்பாகிவிடும்.
கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.