

மாலை நேரம் நண்பர்களுடன் விளையாடிப் புழுதியுடன் வீடு திரும்பும் குழந்தை களை இன்று காண முடிகிறதா?
“விளையாடியது போதும் வீட்டிற்குள் வா” எனப் பெற்றோர் குழந்தைகளை அழைத்த காலம் மாறி, “செல் போன் பார்த்துக்கொண்டே இருக்காதே வெளியே சென்று விளையாடு...’’ என அறிவுரை கூறும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். செல்போன், கம்ப்யூட்டர் என இணையத்தில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகள் கிட்டப்பார்வை (Myopia) குறைபாட்டினால் பாதிக்கப்படு கின்றனர்.
2010ஆம் ஆண்டில் கிட்டப் பார்வைக் குறைபாட்டால் உலக மக்கள்தொகையில் 28% பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். கரோனா காலத்திற்குப் பிறகு இந்தச் சதவீதம் இன்னும் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இதற்கிடையில் 2050ஆம் ஆண்டு கிட்டப்பார்வைக் குறைபாட்டினால் உலகில் உள்ள 50% மக்கள் பாதிக்கப்படச் சாத்திய முள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிட்டப்பார்வைக் குறைபாடு என்றால் என்ன?- பார்வையின் தொலைவுக்குள் இருக்கும் பொருள்கள் மங்கலாகவும், அருகில் உள்ள பொருள்கள் தெளி வாகவும் தெரியும். இதனைக் கிட்டப் பார்வைக் குறைபாடு என்கிறோம்.
எதனால் ஏற்படுகிறது? -குழந்தை வளரும்போது கண்ணின் விழிக் கோளத்தின் குறுக்களவு (Axial Length) சரியான விகிதத்தில் வளர்ந்தால்தான் தொலைவுப் பார்வையானது, கண்ணுள் ஒளியாக லென்ஸினுள் ஊடுருவி, அது குவிந்து நம் விழித்திரையை அடையும். அப்போதுதான் நமக்குப் பார்வை தெளிவாகத் தெரியும்.
ஆனால், விழிக்கோளக் குறுக்களவு அதிகமாக வளர்ச்சி அடையும்போது கண்ணுக்குள் செல்லும் ஒளியானது விழித்திரைக்குச் சற்று முன் விழும்.இதனால் தூரத்தில் இருப்பவை மங்கலாகத் தெரியும். இதுதான் கிட்டப்பார்வை என்கிற கண் நோய்.
இக்குறைபாட்டைப் போக்க, கண் முன் பகுதியில் மைனஸ் லென்ஸ் வில்லைகளைக் கண்ணாடியாகப் பயன்படுத்தும்போது ஒளியானது விழித்திரையில் சரியாகக் குவிந்து பார்வை தெளிவாகத் தெரியும்.
எப்படிக் கண்டறிவது? - கிட்டப்பார்வைக் குறைபாட்டினால் தூரத்தில் இருப்பவை குழந்தைகளுக்கு மங்கலாகத் தெரிந்தாலும், அதனைக் குறைபாடு என்பதை அவர்களால் அறிய இயலாது. குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வைக் குறைபாடு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆகையால் குழந்தை பிறந்தவுடன் ஒருமுறையும், பின் வருடம்தோறும் ஒரு முறையும் முழு கண் பரிசோதனை செய்து கொள்ள பெற்றோர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கிட்டப்பார்வையைக் கண்டறிய ஆலோசனைகள்
* குழந்தைகள் தொலைக் காட்சி பார்க்கும்போது மிக அருகில் அமர்ந்து பார்ப்பார்கள்.
* வகுப்பறையில் கரும் பலகையில் ஆசிரியர் எழுது வது நன்றாகத் தெரியாத காரணத்தால் அருகில் உள்ள மாணவனைப் பார்த்து எழுதுவார்கள். இந்த அறிகுறி கள் மூலம் கிட்டப்பார்வையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
* அறிகுறிகள் உறுதி செய்யப் பட்டால் உடனடியாகக் கண் மருத்து வரை அணுகி பரிசோதிப்பது அவசியம்
* பெற்றோருக்குக் கிட்டப்பார்வைக் குறைபாடு இருந்தால் குழந்தை களுக்கும் கிட்டப்பார்வைக் குறைபாடு வரச் சாத்தியம் உள்ளது.
* குறை மாதக் குழந்தைகள், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள், இரட்டைக் குழந்தைகள் ஆகியோருக்குக் கிட்டப்பார்வைக் குறைபாடு வரச் சாத்தியம் அதிகம்.
ஏன் கவலைகொள்ள வேண்டும்? - குழந்தைகளிடம் கிட்டப்பார்வை அதிகரிக்க செல்போன் பயன்பாடு காரணமாகிறது. சமீப காலமாகக் கிட்டப் பார்வை -6.00க்கு மேல் கண்ணாடி அணியும், உயர்க் கிட்டப்பார்வை பாதிப்பு (Pathological Myopia) குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது.
கிட்டப்பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குக் கண் புரை, கண் விழித்திரை விலகல், கண் நீர் அழுத்த நோய் வரவும் சாத்தியமுள்ளது.
கிட்டப்பார்வைக் குறைபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்
வழிமுறை 1: தினமும் புறவெளியில், வெயிலில் இரண்டு மணி நேரம் குழந்தைகள் விளையாடும்போது அவர்களிடையே கிட்டப்பார்வைக் குறைபாடு குறைவாகவே காணப்படு வதாக சீனாவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டிற்காகக் கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகள் மேலும் கிட்டப்பார்வைக் குறைபாடு அதிகம் ஆகாமல் இருக்க தினமும் இரண்டு மணி நேரம் விளையாட வேண்டும். குழந்தைகள் மீது சூரிய ஒளி தொடர்ந்து படும்போது அது கிட்டப்பார்வைக் குறைபாட்டைத் தடுக்க உதவுவது மட்டுமல்லாமல், அவர்களுடைய மன ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
வழிமுறை 2: செல்போன், டிவி, கணினி போன்றவற்றைத் தொடர்ச்சியாக, அதிக மணி நேரம் அருகில் (Curtail Near Work) பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் படிக்கும் இடத்தைச் சன்னல் அருகே அமைத்து, அவ்வப்போது சன்னல் வழியே தூரத்தில் இருக்கும் பொருள்களைப் பார்க்க அறிவுறுத்த வேண்டும். இதனைப் பயிற்சியாகவே தினமும் கடைபிடிக்க வேண்டும்.
இணைய வழி விளை யாட்டைத் தவிர்த்து வெளிப்புற விளையாட்டை ஊக்குவியுங்கள்
வழிமுறை 3: வகுப்பறை, வீட்டில் குழந்தைகள் படிக்கும்இடங்கள் நல்ல வெளிச்சமாக இருக்க வேண்டும். வெளிச்சம் குறைவான இடங்களில் அமர்ந்து கொண்டு படிக்கக் கூடாது .
சிகிச்சை முறைகள்
* கிட்டப்பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனடியாகக் கண் மருத்துவர் பரிந்துரைக்கும் கண்ணாடியை அணிந்துகொள்ள வேண்டும். வருடம் ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
* இருபது வயதுக்கு மேல் உங்கள் கண்ணாடி பவர், நிலையாக இருந்தால் நீங்கள் லேசர் அறுவை சிகிச்சை மூலம் கிட்டப்பார்வையைச் சரி செய்யலாம்.
* குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வைக் குறைபாடு அதிகரிக்காமல் இருக்க 0.01 % அட்ரோபின் (Low Dose Atropine 0.01%) கண் சொட்டு மருந்து களை மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு பயன்படுத்தலாம்.
* கிட்டப்பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்யவும், அதிகம் ஆகாமல் தடுக்கவும், ‘கிட்டப்பார்வை அதிகரிப்பு தடுப்பு கண் கண்ணாடி’ (Spectacles for controlling myopia progression in children) உலகம் முழுவதும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது 60 முதல் 70 சதவீதம் கிட்டப்பார்வையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இக்கண்ணாடி அனைத்துக் கண் மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.
விழிப்புணர்வு தேவை: தைவான் அரசு கடந்த பல ஆண்டு களாகப் பள்ளிக் குழந்தைகளிடையே இரண்டு மணி நேர வெளிப்புற விளையாட்டை வலியுறுத்தி ‘தினமும் 120’ (Daily 120) என்கிற தேசியக் கிட்டப்பார்வை தடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. இதன் காரணமாகக் கிட்டப்பார்வை விகிதம் குறைந்துள்ளதாகத் தற்போது தெரியவருகிறது. கரோனா காலத்தில் கூட அங்கு அதிகரிக்கவில்லை.
தமிழ்நாட்டிலும் இம்மாதிரியான திட்டத்தை அரசு உருவாக்கலாம். பள்ளிகள் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிட்டப்பார்வை விழிப்புணர்வு பகுதி (Myopia Awareness Corner) அமைக்க வேண்டும். அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் வருடம் ஒரு முறை கண் பரிசோதனை கட்டாயம் என்று அரசு ஆணையிட வேண்டும். பள்ளி மாணவர்களைப் பரிசோதிக்கப் போதுமான விழி பரிசோத கர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர், கண் மருத்துவர்.