

உடலுக்குள் ஒரு ராணுவம்; டாக்டர் கு.கணேசன் l இந்து தமிழ் திசை வெளியீடு:
மருத்துவம் சார்ந்த தகவல்களை எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தொடர்ந்து எழுதிவருபவர் மருத்துவர் கு. கணேசன். ராணுவம்போல் நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலை எவ்வாறு பாதுகாக்கிறது, மனிதனின் ஆயுள்காலத்தை அதிகரித்ததில் தடுப்பூசிகளின் பங்கு எத்தகையது போன்றவற்றைச் சான்றுகளுடன் ‘உடலுக்குள் ஒரு ராணுவம்’ நூல் விளக்குகிறது. தடுப்பாற்றல் மண்டலம், தடுப்பூசி வரலாறு குறித்துத் தமிழில் வெளிவந்துள்ள முழுமையான முதல் நூல் இது.
ஆரோக்கியம் ஒரு பிளேட்; டாக்டர் அருண்குமார் l விகடன் பிரசுரம்:
நகரமயமாக்கல் வளர்ச்சி, உணவு சார்ந்த கண்ணோட்டத்தை மக்களிடம் மாற்றியிருக்கிறது. தேவைக்கு உணவு உண்ட காலம் மாறி விளம்பரத்திற்காக உணவு உண்ணும் கலாச்சாரம் பெருகிவிட்டது. இதனால், உடல் பருமன், நீரிழிவு நோய், அதீத ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
காரணம், நாம் உண்ணும் உணவு குறித்த புரிதல் பலருக்கு இல்லை. நோய்களுக்கும் உணவுக்கும் நேரடிச் சம்பந்தம் இருக்கிறது. அந்த வகையில் உணவு உடலுக்குத் தரும் நன்மை, தீமைகளை இந்த நூல் விளக்குகிறது. நவீன உணவு மட்டுமல்ல, பாரம்பரிய உணவு வகைகள் குறித்த சாதக பாதகங்களையும் இந்நூலில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.
கோவிட்-19; டாக்டர் சு.முத்துச் செல்லக் குமார் l ஏகம் பதிப்பகம்:
கரோனா வைரஸ் குறித்து அறிவியல்பூர்வமான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தவர் டாக்டர் சு.முத்துச் செல்லக் குமார். இவர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ‘கோவிட் 19’ என்கிற மருத்துவ நூலாக வெளிவந்துள்ளது. கரோனா குறித்து அனைவரும் அறியவேண்டிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
66 தலைப்புகளில் நோய் அறிகுறிகள், பரவுதல், உடலில் ஏற்படும் பாதிப்புகள், தீவிர சிகிச்சைகள், தடுப்பூசிகள் போன்றவை குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. கரோனா குறித்த பல்வேறு தவறான தகவல்களைச் சுட்டிக்காட்டுவதோடு வருங்காலத்தில் இது போன்ற பாதிப்புகளை எப்படி எதிர்நோக்குவது என்கிற முன்னெச்சரிக்கைகளையும் இந்நூல் வழங்குகிறது.
வாண்டுகளுக்கான மூலிகைகள்; டாக்டர் வி. விக்ரம்குமார் l காக்கைக்கூடு வெளியீடு:
பள்ளி மாணவர்களுக்கு மூலிகைகளை அறிமுகப் படுத்தும் நோக்கில் ‘வாண்டுகளுக்கான மூலிகைகள்’ என்கிற நூலை டாக்டர் வி. விக்ரம்குமார் எழுதியுள்ளார். நம்மைச் சுற்றியுள்ள காய்கள், பழங்களில் எத்தகைய சத்துகள் நிறைந் துள்ளன என்பதை மிக எளிமையாக இந்நூல் விளக்குகிறது. அடுத்த தலைமுறைக்கு மூலிகைகள் சார்ந்த விஷயங்களைப் பகிரும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம்; டாக்டர்.எஸ். அகிலாண்ட பாரதி l சந்தியா பதிப்பகம்:
மருத்துவத் துறை சார்ந்து எவ்வித ஒப்பனையும் இல்லாமல் நிஜத்தைப் பேசுகிறது டாக்டர்.எஸ். அகிலாண்ட பாரதியின் ‘கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம்’ என்கிற நூல்.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மருத்துவக் கட்டுரையும் நிச்சயம் வாசகர்களைப் புதிய அனுபவத்துக்கு அழைத்துச் செல்லும். மேலும், வாசகர்களுக்கு எழும் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தனது யதார்த்தமான நடையின் மூலம் எளிமையான, விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறார் நூலின் ஆசிரியர்.
தாய்ப்பால் பள்ளிக்கூடம் – 2; டாக்டர் இடங்கர் பாவலன் l பாரதி புத்தகாலயம்
தாய்ப்பாலே பிறந்த குழந்தைக்கு முழுமுதல் உணவாக வழங்கப்படுகிறது. குழந்தைக்கு உயிர்ச் சத்தாக இருக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து அறிவியல்பூர்வமான விளக்கத்தை அளித்திருக்கிறார் நூலின் ஆசிரியர் டாக்டர் இடங்கர் பாவலன். தாய்ப்பால் பற்றிய அனைத்துத் தகவலும் அடங்கிய இந்நூல் நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை; சஜன் சிங் யாதவ் l இந்து தமிழ் திசை வெளியீடு:
உலக அளவில் நவீன மருத்துவம் பயன்படுத்தும் பலதரப்பட்ட தடுப்பூசிகளின் பரிணாம வளர்ச்சியின் பல நூற்றாண்டுப் பயணத்தை இந்நூல் விவரிக்கிறது. தடுப்பூசிகளுக்காக முன்பு வெளிநாடுகளை நம்பியிருந்த இந்தியாவில் தடுப்பூசித் தயாரிப்பு எப்போது, எப்படித் தோன்றியது, எப்படி வளர்ந்தது என்பதை விரிவாக விவரிக்கிறது இந்த நூல்.
மக்களின் ஆரோக்கியம் காக்கும் தடுப்பூசிக்கு உலக அளவில் மக்களிடம் காணப்படும் தயக்கம், எதிர்ப்பு குறித்தும் நவீன மருத்துவம் அவற்றைச் சமாளிக்கும்விதம் பற்றியும் நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு | அறிவியல் | பண்பாடு; மயிலை சீனி வேங்கடசாமி l சீர்மை வெளியீடு:
ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு உணவு முறை முக்கியமானது. அத்தகைய உணவு முறையையும் உடல் நலத்தையும் பற்றி மயிலை சீனி வேங்கடசாமியின் ‘உணவு - அறிவியல் - பண்பாடு’ புத்தகம் பேசுகிறது. நவீன மருத்துவ அறிவியலில் உண்டாகிவரும் மாற்றங்களுக்கு ஏற்பத் தமிழர்கள் உணவு முறை, உடல் நலம் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டியாக இப்புத்தகம் இருக்கும்.
வாக்சின் அறிவியலும் - அரசியலும்; அரீட் செந்தில் l வானவில் புத்தகாலயம்:
மருத்துவ உலகில் நிலவும் அரசியலை மிக நேர்மையாக விளக்குகிறது அரீட் செந்தில் எழுதிய ‘வாக்சின் அறிவியலும் - அரசியலும்’ புத்தகம். ஆன்டிபயாடிக் - தடுப்பூசி இடையேயான வேறுபாடு என்ன என்பதைப் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் ஆசிரியர் இந்நூலில் எழுதியுள்ளார். தடுப்பூசிக்குக் காப்புரிமை பெறுவதில் நிலவும் அரசியலையும் இந்நூல் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
நலக் கண்ணாடி: வாழ்வியல் கிளினிக்; டாக்டர் வி.விக்ரம்குமார் l இந்து தமிழ் திசை வெளியீடு:
கிராம வாழ்க்கையின் மேன்மைகள், பயணங்களால் விளையும் நன்மைகள், இயற்கை உணவு வகைகள், மருந்துகளுக்குள் மறைந்திருக்கும் அரசியல், குழந்தைகளையும் பாதிக்கும் மன அழுத்தம், எண்ணெய்க் குளியல், நடைப்பயிற்சியின் அவசியம், தூக்கத்தின் முக்கியத்துவம், அதீதத் தூக்கத்தின் கேடுகள், காற்று மாசு என இன்றைய உலகின் பிரச்சினைகளை அலசுகிறது டாக்டர் வி.விக்ரம்குமாரின் ‘நலக்கண்ணாடி - வாழ்வியல் கிளினிக்’ புத்தகம். உடல் நலம் சார்ந்து நாம் அவசியமாக அறிய வேண்டிய தகவல்களை இந்நூலில் ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
- தொகுப்பு: எல்னாரா