

உள்ளங்கையை விரித்ததைப் போன்ற பசுமையான இலைகள்! கவிதை பாடத் தூண்டும் செம்மலர்கள். முள்களைத் துளிர்க்கும் தண்டு. இது கல்யாண முருங்கைக்கான அறிமுகம். மரமாக வளரும் கல்யாண முருங்கையின் இலைகளில் பல நோய்களைப் போக்கும் மருத்துவக்கூறுகள் நிரம்பியிருக்கின்றன.
மிளகு மற்றும் வெற்றிலைக் கொடிகள் பற்றி ஏறுவதற்கு ஆதாரமாக வேலி களில் வளர்க்கப்படும் கல்யாண முருங்கை மரங்கள், நமது நலத்திற்கான ஆதாரமும்கூட. கைப்பு மற்றும் கார்ப்பு சுவையைத் தன்னகத்தே வைத்திருக்கும் கீரையைப் பருப்பு வகைகளோடு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட நற்பலன்களைச் சுவை குழைத்து வழங்கும்.
சித்த மருத்துவம்: ‘அக்கரமும் போக்கு மனல்வாய்வேக் காடகற்றும்…’ எனும் கல்யாண முருங்கை குறித்த சித்தர் பாடல், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றுக்கான மருந்தாகக் கல்யாண முருங்கையைக் குறிப்பிடுகிறது. வாந்தி ஏற்படும்போது நீர்த்துவமான உணவைக் கொடுத்து அதற்குத் தொடு உணவாகக் கல்யாண முருங்கையால் செய்த துவையலைக் கொடுக்க நலம் உண்டாகும்.
மருந்துகளால் ஏற்பட்ட வெப்பத்தைப் போக்க கல்யாண முருங்கை சிறந்த தேர்வு. மணத்தக்காளிக் கீரையோடு கல்யாண முருங்கைக் கீரையைச் சேர்த்துக் கடைந்து நெய் பிசைந்து சாப்பிட வயிற்றுப்புண்ணுக்கான மருந்தாக அமையும். ‘ஹெலிகோபாக்டர் பைலோரை’ பாக்டீரியத்தின் ஆதிக்கத்தைத் தடுக்க உதவும் கீரை ரகம் என்கிறது ஆய்வு.
இலக்கியங்களில்: ‘கார்அணி கூந்தல் கயல்கண் கவிர் இதழ்’ என உவமைப்படுத்த கல்யாண முருங்கை பரிபாடலில் பயன்பட்டிருக்கிறது. ‘கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி….’ எனும் பதிற்றுப்பத்துப் பாடல், கல்யாண முருங்கையை மலைகளில் வளரும் தாவரமாகக் குறிப்பிடுகிறது. மணமில்லாத மலராக இருப்பினும் செக்கச் சிவந்த நிறத்தின் அடிப்படையில் மனதைக் கவரக்கூடியது.
பெயர்க் காரணம்: கிஞ்சுகம், முள்முருக்கு, கவிர், புழகு, மலை எருக்கு, முள்முருங்கை போன்ற இலக்கியப் பெயர்களைத் தாங்கியது. மரத்தில் முள்கள் காணப்படுவதால் முள்முருங்கை எனும் காரணப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. கல்யாண முருங்கையின் தாவரவியல் பெயர் Erythrina variegata. இது Fabaceae குடும்பத்தைச் சேர்ந்தது. எரிசோனைன், கொலெரைன், ரெடிகுலைன் போன்ற வேதிப்பொருள்களைக் கொண்டிருக்கிறது.
இரட்டை முருங்கை அடை: கல்யாண முருங்கைக் கீரையோடு முருங்கைக் கீரையைச் சேர்த்துக் கேழ்வரகு மாவில் கலந்து ‘இரட்டை முருங்கை’ அடையைச் சுட்டுச் சாப்பிட உடலுக்கு இரட்டிப்பு வலிமை உண்டாகும். ரத்த சோகையைத் தடுக்கும் உணவும்கூட. ‘உண்ணுங் கலியாண முருக்கிலையு மிளகரிசி வெண்ணெயி லடை சுட்டிடு’ எனும் மூலிகைக் குறள், கீரையோடு மிளகு, அரிசியைச் சேர்த்து அரைத்து அடை சுட்டு, சுடச் சுட வெண்ணெய் அல்லது நெய்யில் தோய்த்துச் சாப்பிட இருமல், இரைப்பு தீரும் என்று குறிப்பிடுகிறது.
பெண்களுக்கான கீரை: தாய்மார் களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கக் கீரையைத் தேங்காய் எண்ணெய்யில் சமைத்துச் சாப்பிடலாம். குழந்தை ஈன்ற பின் கருப்பையில் உள்ள செத்தைகளை முழுமையாக வெளியேற்றவும் உடலை மீண்டும் இயல்பு நிலைக்கு விரைவாகக் கொண்டு வரவும் கல்யாண முருங்கைக் கீரையை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் கிராமங்களில் உண்டு.
பெண்களுக்குச் சினைப்பைக் கட்டி பிரச்சினை இருக்கும்போது எடுக்கும் மருத்துவ உணவுப் பட்டியலில் கட்டாயம் இடம்பிடிக்க வேண்டிய கீரை இது. மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் அதிக ரத்தப் போக்கு, வலியுடன் கூடிய மாதவிடாய் போன்ற பிரச்சினைகளுக்குக் கல்யாண முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட லாம். திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள் சாப்பிட வேண்டிய கீரை இது.
மாலை வேளைகளில் முருங்கை சூப் தயாரித்துப் பருகுவதைப் போலக் கல்யாண முருங்கைக் கீரையைக் கத்தரித்து, பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் பதத்தில் சூடாக எடுத்துக்கொள்ளலாம். சிறுநீர் எரிச்சலைக் குறைக்க கல்யாண முருங்கைக் கீரை உதவும். உணவாக மட்டுமன்றி ஒற்றடமிட உதவும் மூலிகைக் கருவியாகவும் கல்யாண முருங்கைக் கீரை பயன்படுகிறது.
ஆய்வுத்தேடல்: குடற்புழுக்களை வெளியேற்றும் வகையிலான செயல்பாடு கீரைக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறது ஆய்வு. ‘ஓரியண்டனால் - B’ எனும் வேதிப்பொருளுக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. உணவுப் பொருள்களின் மூலம் கிடைக்கும் சர்க்கரையை ஒருவித அமிலமாக மாற்றிப் பற்களின் மேற்பரப்பைச் சிதைக்கும் காரியோ ஜெனிக் பாக்டீரியத்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறதாம் கீரையிலுள்ள ‘எரிகிரிஸ்டாகாலின்’. எதிர்-ஆக்ஸிகரணி தன்மை நிறைந்திருப்பதால் பல நோய்களுக்குக் கல்யாண முருங்கைக் கீரை எதிரியாகத் திகழும்.
குறைவான அளவிலேயே நிறைவான பலன்களைக் கொடுக்கும் கீரையின் நடு நரம்பை நீக்கிப் பயன்படுத்த வேண்டும். முருங்கைக் கீரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கல்யாண முருங்கைக்கும் கொடுப்பது அவசியம்.
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com