டாக்டர் பதில்கள் 15 : தோள்பட்டை வலிக்குத் தீர்வு உண்டா?

டாக்டர் பதில்கள் 15 : தோள்பட்டை வலிக்குத் தீர்வு உண்டா?
Updated on
2 min read

எனக்குச் சர்க்கரை நோய் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இடது தோள்பட்டை வலிக்கிறது. கைவிரல்கள் வரை வலி பரவுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன, டாக்டர்? - வி. பாலகிருஷ்ணன், சென்னை.

தோள்பட்டை வலிப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம், கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய். முதலில் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துங்கள். உங்களுக்கு விரல்கள் வரை வலி பரவுவதால் கழுத்து எலும்புகளில் பிரச்சினை உள்ளதா என்பதை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். தோள்பட்டை வலிக்கு நரம்புப் பிரச்சினைதான் காரணமா என்பதை அறிய ‘நரம்புக் கடத்தல் பரிசோதனை’ (Nerve conduction study) உதவும்.

இடது தோள்பட்டையில் வலி என்பதால், இ.சி.ஜி./ட்ரெட் மில் பரிசோதனையும் தேவைப்படும். தோள் வலி ஆரம்பநிலையில் இருந்தால் வலி நிவாரணிகளும் களிம்புகளும் பரிந்துரை செய்யப்படும். தசை இறுக்கத்தைத் தளர்த்தும் மருந்துகளும் உறக்கம் கொடுக்கும் மருந்துகளும் தேவைக்கேற்ப தரப்படும். இயன்முறை சிகிச்சை (Physiotherapy) நல்ல நிவாரணம் தரும். வலி அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது ஸ்டீராய்டு ஊசிகளைத் தோள் மூட்டுக்குள் செலுத்துவதுண்டு.

இவற்றுக்கெல்லாம் வலி குறையவில்லை என்றால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தோளில் சில துளைகள் இட்டு ஆர்த்ராஸ்கோப் (Arthroscopy) கருவி கொண்டு கரடுமுரடாகிப்போன குருத்தெலும்பைச் சீர்படுத்துகிறார்கள்; நைந்துபோன தசைக்கொத்தைச் சரிப்படுத்துகிறார்கள்; கிழிந்த சவ்வை இணைக்கிறார்கள்; கால்சியம் படிகங்களை அகற்றுகிறார்கள்; தோள் மூட்டுவைச் சுத்தப்படுத்துகிறார்கள். இவற்றால் தோள்பட்டை வலி நிரந்தரமாகக் குணமாகிறது.

என் வயது 27. உயரம் 153 செ.மீ. எடை 38 கிலோ. இரு குழந்தைகள். எனக்கு இந்த எடை சரியா, டாக்டர்? எடை கூட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? - எஸ். பூங்கொடி, ஆனைமலை.

உங்கள் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ப உடல் எடை இல்லை. நீங்கள் குறைந்தது 50 கிலோ எடை இருக்க வேண்டும். எடை குறைவாக இருப்பதற்குப் பரம்பரை காரணமா, நோய் காரணமா, சீரற்ற உணவா, செரிமானப் பிரச்சினையா என்பது குறித்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். உணவுதான் காரணம் எனத் தெரிந்தால் அதைச் சரிப்படுத்துங்கள். உடலின் சீரான வளர்ச்சிக்குப் புரதச் சத்துதான் மிகவும் உதவுகிறது.

பால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி போன்றவற்றில் புரதம் மிகுந்துள்ளது. நிலக்கடலை, சோயா, பருப்பு, முந்திரிப் பருப்பு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், அவரை, துவரை, உளுந்து, மொச்சை, சுண்டல், முளைகட்டிய பயறுகள் போன்றவை புரதம் நிறைந்தவை. இவற்றை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றைத் தினமும் சாப்பிடலாம். காரணம், அசைவத்தில் கிடைக்கும் புரதம் மிகவும் நல்லது.

அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலும் ஓரளவு புரதம் உள்ளது. சைவ உணவுகளில் உளுந்தம் பருப்பில் புரதம் மிக அதிகம். ஆகவே, உளுந்தால் தயாரிக்கப்படும் களி, வடை, ஜிலேபி, இட்லிப் பொடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் எடை கூடும். தினமும் ஏதேனும் ஒருவகை பருப்புக் குழம்பு அல்லது பருப்பு சாம்பார், சிறுகீரை பருப்புக் கூட்டு அவசியம்.

மாலைச் சிற்றுண்டியில் பொரித்த முந்திரிப் பருப்பு, அவித்த வேர்க்கடலை, கடலைமிட்டாய், எள்ளுருண்டை, சுண்டல், பயறுகள், பாதாம் பருப்புகள் சாப்பிடுவது உடலை வளர்க்க உதவும். தினசரி உணவில் கீரைகளையும் பழங்களையும் காய்கறிகளையும் தேவைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். மன அழுத்தம் ஆகாது. தினமும் ஏதாவது ஓர் உடற்பயிற்சி, தியானம், யோகா செய்யுங்கள். குடல் புழு மாத்திரை சாப்பிடுங்கள். தினமும் அரை மணி நேரம் உங்கள் உடலில் வெயில் படவேண்டும். சரியான உறக்கம் முக்கியம்.

நான் அடிக்கடி சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மறந்துவிடுகிறேன். அதனால், ரத்தச் சர்க்கரை அதிகரித்துவிடுகிறது. அடுத்த வேளை அல்லது மறுநாள் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது இரண்டு டோஸ் மாத்திரைகளைச் சேர்த்து எடுத்துக்கொள்ளலாமா, டாக்டர்? - தீபன்குமார், மதுராந்தகம்.

நீங்கள் மாத்திரை சாப்பிட மறந்துவிட்ட சில மணி நேரத்துக்குள் அதை உணர்ந்தால், மறந்துவிட்ட மாத்திரையை உடனே எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், மாத்திரையைத் தவறவிட்டதை மிகவும் தாமதமாக உணர்ந்தால் அடுத்தபடியாக எப்போது மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டுமோ அப்போது, எப்போதும் எடுத்துக்கொள்ளும் அளவுக்குத்தான் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கமான மாத்திரையையும் தவறவிட்ட மாத்திரையையும் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in