

ஒருமுறை காதுக்கு அருகில் அதிக பட்டாசு வெடித்த காரணத்தால் எனக்குக் காது இரைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதற்குத் தீர்வு என்ன? - எம். தனுஷ், மின்னஞ்சல்.
இன்றைய தினம் ஒலி மாசு இல்லாத இடத்தைப் பார்ப்பது அரிது. பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாம் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சத்தத்தைத் தொடர்ந்து எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால் அது காதைக் கட்டாயம் பாதிக்கும். உள்காதில் உள்ள ‘காக்ளியா’ எனும் நத்தை எலும்பில் ஒலி அதிர்வுகளை மூளைக்குக் கொண்டுசெல்கிற நரம்பிழைகள் ஏராளமாக உள்ளன.
காதுக்குள் நுழைகிற பலத்த ஒலிகள் இந்த நரம்பிழைகளைச் சிதைத்துவிடுகின்றன. அப்போது இவை அசாதாரண ஒலிகளை உண்டாக்குகின்றன. இவற்றின் விளைவு, காது இரைச்சல். முக்கியமாக, பலத்த சத்தத்துடன் இயங்குகிற இயந்திரங்களுக்கு நடுவில் வேலை செய்பவர்கள், ‘ராக்’ இசை போன்ற வடிவங்களில் இசைக்கருவிகளை இயக்குபவர்கள், விமான நிலையத்திற்கு அருகில் குடியிருப்பவர்கள், ‘வாக்மேனை’ அதிக நேரம் பயன்படுத்துபவர்கள், அடிக்கடி வெடிச்சத்தம் கேட்பவர்கள் ஆகியோருக்கு இம்மாதிரியான நரம்புப் பிரச்சினை வந்து காதுக்குள் இரைச்சல் ஏற்படும்.
காது இரைச்சலுக்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. உங்களுக்குப் பட்டாசு வெடித்த காரணத்தால் காதில் இரைச்சல் கேட்கிறது என்கிறீர்கள். காது – மூக்கு – தொண்டை மருத்துவரைச் சந்தித்து ஆடியோகிராம், ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் உங்கள் காது இரைச்சலுக்கு என்ன காரணம், என்ன பாதிப்பு என்று தெரிந்து சிகிச்சைபெற்றால் தீர்வு கிடைக்கும்.
மனிதனுக்கு உணவில் உப்பு தேவையா? வெண் சர்க்கரை, பால், உப்பு எனும் ‘மூன்று வெள்ளைகள்' நலக்கேடு கொண்டவை என்பது சரிதானா, டாக்டர்? - என். விஸ்வநாத், கோவை.
மனிதருக்கு உப்பு தேவைதான். நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பின் அளவு உணவில் அதிகரித்தால் உடல்நலனுக்குக் கேடு. உடலில் உப்பு அதிகமாகச் சேரும்போது ரத்தத்தின் கன அளவு அதிகரிக்கும். அப்போது ரத்தக் குழாய்களின் மீதான அழுத்தம் அதிகரிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம் பிரச்சினை செய்யும். அதைத் தொடர்ந்து சிறுநீரகம் பாதிக்கப்படும்.
அடுத்து, இதய பாதிப்பு, பக்கவாதம் என்று உடல் நலம் கெடும். ஆகவே, உப்பின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அடுத்ததாக, வெண் சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது சர்க்கரை நோயைக் கொண்டுவருகிறது. ம
ரபுவழியில் புற்றுநோய் வந்தவர்களின் வாரிசுகள் வெண் சர்க்கரையை அதிகமாகப் பயன்படுத்தினால், புற்றுநோய் வரும் சாத்தியம் அவர்களுக்கு அதிகரிக்கிறது என்கிறது அமெரிக்கப் புற்றுநோய் ஆய்வு மையம். அடுத்து, பால் அத்தியாவசிய உணவா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல முடியும்.
வளர்ந்த குழந்தைகளும் பெரியவர்களும் நாளொன்றுக்கு அதிக பட்சமாக 200 மி.லி. பால் அருந்தலாம். அதற்கு மேல் தேவையில்லை. பாலில் கிடைக்கக்கூடிய எல்லாச் சத்துகளும் நமக்கு மற்ற உணவு வகைகள் மூலம் கிடைத்துவிடுகின்றன. அடுத்து, பாலில் உள்ள புரதங் களால் ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
பாலை அருந்தியதும் குடலைப் புரட்டுகிறது, வயிறு பொருமுகிறது, வாயு பிரிகிறது, ஏப்பம் வருகிறது என்றால், ‘லாக்டோஸ் இன்டாலரன்ஸ்’ (Lactose Intolerance) எனும் பால் ஒத்தியலாமை இருக்கிறது என்று பொருள். இவர்கள் பாலை முடிந்த அளவுக்குக் குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் தேவை என்று எல்லா மருத்துவர்களும் கூறுகிறார்கள். என்ன காரணம்? - கணபதி மாரியம்மாள், குளித்தலை.
இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் உடலில் ‘இன்சுலின் எதிர்ப்புத் தன்மை’ (Insulin resistance) அதிகரிப்பதுதான். இதைத் தவிர்க்க மாவுச்சத்துள்ள உணவு வகைகளை, குறிப்பாக அரிசி உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதச் சத்துள்ள உணவைக் கூட்ட வேண்டும்.
தேவையான அளவுக்குக் கொழுப்பு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து தினமும் ஓர் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அவசியம் என்பார்கள். நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள உதவும். இதன் பலனால், சர்க்கரை நோய் கட்டுப்படும்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com