பச்சை வைரம் 14: கல்லீரல் பாதுகாப்புக்கு பருப்புக் கீரை

பச்சை வைரம் 14: கல்லீரல் பாதுகாப்புக்கு பருப்புக் கீரை
Updated on
2 min read

தன்னுடைய சிறிய இலைகளில் தனித்துவமான நுண்ணூட்டங்களை வைத்திருக்கும் கீரை ரகம் பருப்புக் கீரை! இதன் இலைகள் பறவையின் இறக்கைகள் போன்ற தோற்றத்தில் சற்றுத் தடிமனாகத் தண்டுகளிலிருந்து கிளர்ந்து எழும். தண்டின் உச்சி முனையில் பூக்கள் பூக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையைத் தகுந்த கலவையில் வழங்கும் குளிர்ச்சி மிக்க கீரை இது. கீரையில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம், மெல்லிய புளிப்புச் சுவைக்குக் காரணமாகிறது.

உலகளாவிய உணவியல்: பாலாடைக் கட்டியோடு பருப்புக் கீரை, தக்காளி, பூண்டு, வெங்காயம் சேர்த்துச் செய்யப்படும் ‘ஃபெடா’ உணவு ரகம் கிரேக்க நாடுகளில் பிரபலம். போர்ச்சுகல் நாட்டில் தயாரிக்கப்படும் பாரம்பரிய சூப் வகையில் பருப்புக் கீரை இடம்பிடிக்கிறது. கீரைக்குச் சற்று குழகுழப்புத் தன்மை இருப்பதால், பல்வேறு நாட்டு சூப் ரகங்களிலும் சாலட்களிலிலும் சேர்க்கப்படுகிறது.

Portulaca oleracea எனும் தாவரவியல் பெயர்கொண்ட பருப்புக்கீரை Portulacaceae குடும்பத்தில் அங்கம் வகிக்கிறது. வயலை, வசளை போன்ற பெயர்களும் பருப்புக் கீரைக்கு உண்டு. விட்டமின் – சி, இ, சுண்ணச் சத்து, துத்தநாகச் சத்து, பொட்டாசியம் போன்ற நுண்ணூட்டங்களைக் கொண்டிருக்கிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தவும் உடலுக்கு ஊட்டமளிக்கவும் கீரையுடன் பாசிப்பருப்பு, பூண்டு சேர்த்து வேகவைத்து, சீரகம் தூவி நன்றாகக் கடைந்து ‘பருப்புக் கீரை – பருப்புக் கடையல்’ செய்து சாப்பிடலாம். வேகவைத்த பருப்பு வகைகளுடன் சேர்ந்து உணவுக்கு ருசி ஏற்றும் ‘பசுமை மாயாவி’ பருப்புக்கீரை.

மற்ற கீரை வகைகளைப் பருப்பே சேர்க்காமல் புளி, தக்காளி சேர்த்து உணவாக்கி கீரையின் ருசியைப் பெற முடியும். ஆனால், பருப்புக் கீரையைப் பருப்பு இல்லாமல் சமைத்தால் உணவில் நளினம் சற்று பிசகியது போன்ற ருசிப் பிழையை ஏற்படுத்தும். அதனால்தான் இந்தக் கீரைக்கு முன் ‘பருப்பு’ என முன்னொட்டு சேர்ந்துகொண்டதோ என்னவோ!

‘பிள்ளைப் பருப்பிலைக்குப் பித்தமறுங்…’ எனும் அகத்தியர் பாடல், பித்தத்தைக் குறைக்கும் கீரையாகப் பருப்புக் கீரையைச் சுட்டுகிறது. குடற்பகுதியில் உள்ள நலம் கொடுக்கும் நுண்ணுயிரிகளை அதிகரித்து, உடலுக்குப் பேருதவி புரியும் என்கிறது ஆய்வு. ‘குடல் சார்ந்த நோய்களைப் போக்கும்’ எனும் சித்த மருத்துவப் பாடல் குறிப்பை ஆய்வு முடிவோடு உற்று நோக்கலாம்.

கீரை மோர்க்கறி: ‘வசளை மோர்க்கறி செய்துண்ண நன்றாகும்…’ எனும் தேரன் காப்பியம் பாடல், பருப்புக் கீரையைச் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, மோர் சேர்த்து தாளித்துப் பொரியல் போலச் செய்து சாப்பிட்டு வர உடலுக்கு மிகுந்த பலம் உண்டாகும் எனக் குறிப்பிடுகிறது.

உடலின் கழிவை அகற்றி, செரி மானத்தை முறைப்படுத்தி, சாப்பிடும் உணவுப் பொருள் களின் சத்துகளை முழுமையாக உள்கிரகிக்கும் வகையில் செரிமானக் கருவிகளின் திறனை மேம்படுத்தும் இந்தக் கீரைக்கறி.

மலத்தைக் கடினமின்றி வெளியேற்றுவது மட்டுமன்றி சிறுநீர் தாரை சார்ந்த பிரச்சினைகளையும் சரிசெய்யும் கீரை ரகம் இது. வறட்சியை அகற்றி உடலுக்குத் தேவைப்படும் நீர்த்துவத்தை வழங்க உதவும் என்பதால் முதியவர்கள் வேனிற் காலங்களில் அடிக்கடி பயன்படுத்தலாம்.

ஆய்வுக்களம்: வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் கழிவை வெளியேற்றும் தன்மை பருப்புக் கீரைக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறது ஆய்வு. நலம் பயக்கும் ஆல்பா லினோலெனிக் அமிலம் எனும் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நிறைவாய் வைத்திருக்கும் பருப்புக் கீரை, புற்றுசெல்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் மிக்கது.

கல்லீரலுக்கு உண்டாகும் நுண்ணிய பாதிப்புகளைத் தடுத்து, கல்லீரல் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. நோய்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட தசைகளை இளக்கும் தன்மையும் இந்தக் கீரைக்கு உண்டு.

புற மருத்துவத்தில் பருப்புக் கீரை: ‘ஹெர்பஸ் ஜோஸ்டர்’ வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் அக்கி நோய் தணிந்த பிறகு, பாதிக்கப்பட்ட பகுதியில் ஏற்படும் வலி, எரிச்சலுக்குப் பருப்புக் கீரையைக் கடையலாகக் கொடுத்து, கீரையை அரைத்து அக்கி பாதிக்கப்பட்ட பகுதியில் பற்றுப்போடும் முறை இன்றும் தொடர்கிறது.

நீர்த்துவம் குறைவதால் ஏற்படும் தலைவலிக்குக் கீரையை அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல், வேனிற்கொப்புளம், சிரங்கு போன்றவற்றுக்குக் கீரையோடு சேர்த்துத் தண்டையும் அரைத்துத் தடவலாம்.

கீரையின் மேல் இயற்கையான மெல்லிய மெழுகுப் படலம் காணப்படுவதால் கீரை வகைகளில் பூச்சிகளின் தாக்குதலுக்கு குறைவாக ஆள்படக்கூடிய கீரை இது. அப்போது பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்குதலுக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் அச்சமின்றிச் சாப்பிடலாம்.

பருப்புக் கீரை, அமிர்தக் கீரை.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in