டாக்டர் பதில்கள் 12: வாந்தி தனிப்பட்ட நோயல்ல

டாக்டர் பதில்கள் 12: வாந்தி தனிப்பட்ட நோயல்ல
Updated on
2 min read

நான் 25 ஆண்டுகளாக நீரிழிவுக்கு மாத்திரை, இன்சுலின் எடுத்துக்கொண்டு வருகிறேன். சமீப காலமாக வலது காலில் தொடைவரை மூன்று இடங்களில் சிறிய அடைப்பு உள்ளது. (DVT). Blood Thinner மாத்திரை எடுத்துவந்தேன். இப்போது எக்கோஸ்பிரின் 75 மி.கி உட்கொள்கிறேன். பாத வீக்கம் பரவாயில்லை. பிரச்சினை என்னவென்றால், தூங்கும்போது அடிக்கடி கால் மாற்றிக் கால் மாற்றித் தசைப் பிடிப்பு வலி (Muscle cramps) ஏற்படுகிறது. சில நொடிகளுக்கு வலி நீடித்த பிறகு பிடிப்புவிடுகிறது. இதற்கு என்ன செய்ய டாக்டர்? - என். விஸ்வநாத், கோயம்புத்தூர்.

நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் கெண்டைக்கால் தசைப்பிடிப்பு முக்கியமானது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதபோது இந்தப் பிரச்சினை தலைதூக்கும். இது தவிர, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களின் குறைபாடு, வைட்டமின் - பி12 குறைபாடு, வைட்டமின் - E குறைபாடு, எல் கார்னிட்டின் (L-carnitine) குறைபாடு, சில மருந்துகளின் பக்கவிளைவு, முக்கியமாக, ஸ்டாடின் மாத்திரைகள், சிறுநீர்ப் பிரித்திகள் (Diuretics), தைராய்டு பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை, கல்லீரல் பிரச்சினை, ஹார்மோன் பிரச்சினை போன்ற காரணங்களாலும் இது ஏற்படலாம். முதலில் நீங்கள் மின் தசைப் பரிசோதனை (Electromyography -EMG) செய்துகொள்ளுங்கள். இதில் உங்கள் தசைகளின் செயல்பாடு தெரிந்துவிடும்.

அதோடு சில ரத்தப் பரிசோதனைகளும் தேவைப்படும். அவற்றில் உங்கள் தசைப்பிடிப்புக்கான காரணம் தெரிந்துவிடும். அதற்கேற்ப உங்களுக்குச் சிகிச்சை வழங்கப்படும். தசைப்பிடிப்பைத் தவிர்க்க முதலில் உங்கள் ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்துங்கள். பால் சாப்பிடுங்கள். இதில் கால்சியம் உள்ளது. முட்டைகோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, ஓட்ஸ், இளநீர், மீன் உணவில் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் அதிக அளவில் உள்ளன. இறைச்சியைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின்-பி12 கிடைத்துவிடும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இருந்தால் கைவிடுங்கள். நீண்ட நேரம் நிற்பது, அதிக தொலைவு நடப்பது போன்றவற்றைத் தவிருங்கள். இரவில் உறங்கச்செல்லும் முன்பு காலுக்கான சின்ன சின்ன பயிற்சிகளை (Static stretches) மேற்கொள்ளுங்கள்.

எனக்கு ஒரு வருடமாக வாந்தி வருகிறது, டாக்டர். இதற்கு என்ன தீர்வு? - தனசேகர், மின்னஞ்சல்.

வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; ஏதோ ஒரு நோயின் அறிகுறி. வாந்தியில் இரண்டு வகை உண்டு. இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், குடல் புழுக்கள், குடல் நோய்கள், கல்லீரல், கணையம், சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளால் வரும் வாந்தி ஒரு வகை; மூளை, காது, கர்ப்பம் போன்ற மற்ற உறுப்புப் பிரச்சினைகளால் வரும் வாந்தி அடுத்த வகை. சில நேரம் வேறு காரணங்களுக்காக நாம் உட்கொள்ளும் மாத்திரைகளும் சில சிகிச்சைகளுக்கு வழங்கப்படும் ஊசி மருந்துகளும் வாந்தியைத் தூண்டும். சிலருக்கு உளவியல் காரணங்களாலும் வாந்தி வரும்.

பார்வை, நுகர்தல், தொடுதல்கூட வாந்தியை வரவழைக்கும். பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லாருக்கும் வாந்தி வருவது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும் போது பல்துலக்கி தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். உங்களுக்கு என்ன காரணத்தால் வாந்தி வருகிறது என்பதை அறிந்து சிகிச்சைபெற்றால் தீர்வு கிடைக்கும்.

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in