பச்சை வைரம் 12: நோய்களைத் தகர்க்கும் தங்கத் தக்காளி

பச்சை வைரம் 12: நோய்களைத் தகர்க்கும் தங்கத் தக்காளி
Updated on
2 min read

விதையிலிருந்து துளிர்த்து எழும்போதே மருந்தாக முளைத்து நலம் கொடுக்கும் கீரையின் பெயர் மணத்தக்காளி. அதாவது கீரையின் ஒவ்வோர் உறுப்பும் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. கிராமத்து வயல்களில் கறுப்பு மணியாகக் காட்சிக்கொடுத்து, பலரது நாவைச் சுவையூட்டும் மணத்தக்காளி கீரைக்குச் சொந்தமான அழகான பழங்களை யாராலும் மறக்க முடியாது. பஞ்ச காலங்களில் உதவிய உணவுப் பொருள்களைப் பட்டியலிட்டால், மணத்தக்காளி கீரைக்கு முதல் வரிசையில் இடம் கிடைப்பது உறுதி. உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி, ஊட்டச்சத்து தேவையையும் பூர்த்தி செய்யும் கீரை ரகம். ‘மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி’ எனும் மூலிகைக் குறளை இங்கு பொருத்திப் பார்க்கலாம். குளிர்ச்சியோடு கூடிய இனிப்புச் சுவையை உடலுக்கு வழங்கும் சுவைமிக்க கீரை மணத்தக்காளி. வியர்வையைப் பெருக்கிக் கழிவுகளை வெளியேற்றும் தனித்துவமான கீரையும்கூட.

உலகளாவிய உணவியல்: ‘ஹோர்டா’ எனப்படும் கீரைகளைக் கொண்டு சமைக்கப்படும் கிரேக்க உணவு ரகத்தில் மணத்தக்காளி கீரை சேர்க்கப்படுகிறது. ஆப்ரிக்க நாடுகளில் இதன் பழங்களைக் கொண்டு சுவையான ‘ஜாம்’ தயாரிக்கப்படுகிறது. மெக்சிகோ நாட்டுப் பாரம்பரிய மருத்துவத்தில் மணத்தக்காளியின் பங்கு இருக்கிறது. மணத்தக்காளிப் பழங்களை ஊறுகாயாகச் செய்து சாப்பிடும் வழக்கமும் நமது மருத்துவ உணவியலில் இருந்திருக்கிறது.

பெயர்களும் குடும்பமும்: உலகமாதா, மணித்தக்காளி, விடைக்கந்தம், வாயசம், காகமாசீ, மிளகுத் தக்காளி போன்ற பெயர்களையும் சொந்தம் கொண்டாடுகிறது மணத்தக்காளி. தக்காளி குடும்பத்தில் அங்கம் வகித்து, வாசனை நிறைந்த பழங்களை உடையதால், ‘மணத்தக்காளி’ என்கிற பெயர் உருவானது. மணத்தக்காளியின் தாவரவியல் பெயர் Solanum nigrum. இது Solanaceae குடும்பத்தில் அங்கம் வகிக்கிறது.

சித்த மருத்துவம்: ‘மணத்தக்காளி யெனவுடல்வாழ வுயிர்நல்கு…’ எனும் தேரையர் யமகப் பாடல், மணத்தக்காளியை வாழ்நாள் அதிகரிக்கும் கீரையாகக் குறிப்பிடுகிறது. மணத்தக்காளி கீரையோடு பருப்பு சேர்த்துக் கடைந்து, அதன் பழ வற்றலையே தூவி, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட ரத்தக்குறைவு, வயிற்றுப் புண், உடற்சோர்வு நீங்கும். கோடைக் காலத்திற்கான உணவியலில் மணத்தக்காளி, பசளைக் கீரை சேர்த்து செய்யப்படும் கடைசல் வாரம் இரண்டு முறையாவது இடம்பெறட்டும்.

கலவைக் கீரை பானம்: மணத்தக்காளி கீரை, பசளைக்கீரை, கொத்தமல்லி கீரை ஆகியவற்றை அரைத்துச் சாறெடுத்து, கற்றாழைச் சோறு கொஞ்சம் சேர்த்து அரை டம்ளர் மோர் விட்டு அடித்துத் தயாரிக்கப்படும் பானத்தைக் காலையில் குடித்துவர வயிற்றுப்புண்ணுக்கான மருந்தாக அமையும். கீரையைப் பிழிந்து சாறு எடுத்து, 15.மி.லி. நீரில் கலந்து கொடுக்க வாய்ப்புண், வயிற்றுப் புண்களின் தீவிரம் குறையும். இதையே வாய்ப்புண் இருக்கும்போது கொப்பளிக்கும் நீராகவும் உபயோகிக்கலாம். ‘வயித்துப் புண்ணா… அந்த மணத்தக்காளி கீரையக் கடஞ்சி சாப்பிட்டா போதும்…’ எனும் குரல் சென்ற தலைமுறையில் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது.

மருந்தாக: ‘மகிழ்ச்சியைக் கொடுக்கும் கீரை’ என்று சித்த மருத்துவம் சொல்வதிலிருந்து, மனதை உற்சாகப்படுத்தும் உடல் ஊக்கிகளை மணத்தக்காளி சுரக்கச் செய்கிறதா என்கிற ஆய்வுக் கோணத்திலும் சிந்திக்க வேண்டும். புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் மணத்தக்காளி கீரை சிறப்பு வாய்ந்தது என்கின்றன ஆய்வுகள். குறிப்பாக, அண்மையில் அதிகரித்துவரும் குடல்புற்று நோயைத் தடுக்க மணத்தக்காளி நிச்சயம் உதவும்.

மணத்தக்காளி வற்றல்: சித்த மருத்துவம் நோயாளர்களுக்குப் பரிந்துரைக்கும் பத்திய உணவுகளுள் மணத்தக்காளியின் வற்றல் முக்கியமானது. நோய்நிலை காரணமாக இழந்த நாவின் சுவை, பசி ஆகியவற்றை மீட்டெடுக்கும் திறன் இதன் வற்றலுக்கு உண்டு. நுரையீரல் பாதையில் உண்டாகும் சில பிரச்சினைகளைத் தீர்க்கவும் இதன் வற்றலைப் பயன்படுத்தலாம். சிறுநீர்ப்பாதையை நோயில்லாத பாதையாக மாற்றும் வல்லமை மணத்தக்காளி வற்றலுக்கு உண்டு. வற்றலை நெய்யில் லேசாக வதக்கிய பின்பு பயன்படுத்துவது சிறப்பு.

கீரைக் குறிப்பு: கோடைக்காலத்தில் உடல் உள் உறுப்பு களைக் குளிர்ச்சிபெற வைக்கும் கீரையை, மழைக்காலத்தில் பயன்படுத்தும்போது வெங்காய வடகம் சேர்த்துப் பயன்படுத்தலாம். கீரையைப் பயன்படுத்தும் முன்பு, உப்பு கலந்த நீரில் போட்டு நன்றாக அலச வேண்டும். அதன் இலைகளின் பின்புறத்தில் சிறுசிறு பூச்சிகள், முட்டைகள் இருக்கலாம். பிறகு தண்டிலிருந்து கீரையைப் பறித்து, மறுபடியும் நன்றாகத் தண்ணீரில் அலச வேண்டும். மெல்லியத் தண்டுகளையும் சிறிது சிறிதாக நறுக்கி சமைக்கப் பயன்படுத்தலாம். பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் இல்லாமல் மணத்தக்காளி கீரையைச் சாப்பிட, இப்போதே உங்கள் வீட்டுத் தொட்டிகளில் மணத்தக்காளியின் முத்தான கறுப்புப் பழங்களைத் தூவிடுங்கள். மணத்தக்காளி, நோய்களைத் தகர்க்கும் தங்கத் தக்காளி!

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in