

எனக்கு வயது 61. எனது உடலில் 2004ஆம் வருடம் முதல் வெண்புள்ளிகள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டேன். நோய் கட்டுப்பாட்டில் இருந்தது. நான் கடந்த ஏழு மாதங்களாகச் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. அதனால், தற்போது மீண்டும் வெண்புள்ளிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. நீண்டகாலச் சிகிச்சையாக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளலாமா? வெண்புள்ளிகள் மேலும் பரவாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? என் உடலில் 10% அளவுக்குத்தான் வெண்புள்ளிகள் உள்ளன. தகுந்த ஆலோசனை வழங்கவும். - நாராயணன் தன்ராஜ்.
நவீன மருத்துவத்தில் ‘லூக்கோடெர்மா’ (Leucoderma) என்றும் ‘விட்டிலைகோ’ (Vitiligo) என்றும் இரண்டு பெயர்களில் அழைக்கப்படும் வெண்புள்ளிகள் கிருமிகளால் ஏற்படும் நோயல்ல; தொட்டால் ஒட்டிக்கொள்ளும் தொற்றுநோயுமல்ல. இது ஒரு ‘தன்தடுப்பாற்றல் நோய்’ (Autoimmune disease). அதாவது, உடலில் இயங்கும் தடுப்பாற்றல் மண்டலம் தடுமாறும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. தோலுக்கு நிறம் அளிக்கும் ‘மெலனோசைட்’ எனும் செல்களை நம் தடுப்பாற்றல் மண்டலமே அழித்துவிடுவதால் இது ஏற்படுகிறது. இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே. இது அறிவியல் ரீதியாகத் தீர்க்கக்கூடியது. நவீன மருத்துவத்தில் மட்டுமல்லாமல் மாற்று மருத்துவத்திலும் இதற்குத் தீர்வு உண்டு. எந்த மருத்துவத்தைக் கடைப்பிடித்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். தொடர் கவனிப்பு ஒன்றுதான் தோலின் நிறத்தை முழுமையாகப் பெற உதவும்.
சிகிச்சையை நிறுத்தினால், மீண்டும் வெண்புள்ளிகள் தோன்றலாம். பொதுவாக, தடுப்பாற்றல் மண்டலம் தடுமாறுவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. தைராய்டு குறைபாடு, நீரிழிவு, பரம்பரை அம்சம், மன அழுத்தம், வேதிப்பொருள்கள் மிகுந்த துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், அழகுசாதனப் பொருள்கள், செயற்கைப் பானங்கள், மருந்துகள் என இந்தப் பட்டியல் பட்டாசுச் சரம்போல் நீளும். ஒவ்வொருவருக்கும் இந்தக் காரணிகள் மாறும். இந்தக் காரணிகளை ஆரம்பத்திலேயே சரியாகக் கணித்து, அவற்றைத் தவிர்த்தால், உணவுக்கட்டுப்பாடு உள்ளிட்ட சில தடுப்புமுறைகளைப் பின்பற்றினால் வெண்புள்ளிகள் பரவாமல் தடுக்கலாம்.
எனது விரைகளில் ஒன்று வீங்கிப் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன செய்வது, டாக்டர்? - மு. முருகேசன்.
விரையைச் சுற்றி இருக்கும் சவ்வுப் பையில் திரவம் தேங்கும்போது அது வீங்கும். இதை ‘விரை வீக்கம்’ (Hydrocele) என்கிறோம். நோய்த்தொற்று, அடிபடுதல், நசுக்குதல் போன்ற காரணங்களால் விரை வீக்கம் ஏற்படலாம். விரை வீக்கத்தை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் உறுதி செய்துகொண்டு அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் சிறந்த வழி.
PSA TEST எதற்குச் செய்யப்படுகிறது, டாக்டர்? எனக்கு அதன் அளவு 1.5 என்று வந்திருக்கிறது. இது சரியான அளவா?
- எம். குழந்தைச்சாமி, திருவெற்றியூர்.
PSA பரிசோதனை (Prostate-Specific Antigen - PSA) என்பது ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் புற்றுநோய் முன்னறிதல் பரிசோதனை. இதன் இயல்பு அளவு 1.0 - 1.5 ng/ml. இது சற்றே அதிகமென்றால், புராஸ்டேட் சுரப்பியில் அழற்சி இருக்கலாம். அளவு மிகவும் அதிகம் என்றால் புராஸ்டேட் புற்றுநோயாக இருக்க அதிகச் சாத்தியம் இருக்கிறது. பொதுவாக, 40 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை மேற்கொண்டால், புராஸ்டேட் புற்றுநோய் வருவதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். உங்களுக்கு PSA அளவு இயல்பாகவே இருக்கிறது. பயப்பட வேண்டாம்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com