

மெல்லிய கொடியொன்று பிளவுபட்ட இலைகளைத் தாங்கிக்கொண்டு பற்றுக் கம்பிகளின் உதவியுடன் வாய்ப்பிருக்கும் இடங்களைப் பற்றி ஏறுவதைக் கிராமங்களில் புழங்கியவர்கள் கண்டிப்பாக ரசித்திருப்பார்கள். இப்போதைய நகரத்து விவசாயச் சந்தைகளின் முகப்புகளிலும் விற்பனையாவதற்காகக் காத்துக்கிடக்கிறது அந்தக் கொடி வகையிலான கீரை! பிரசித்திபெற்ற அந்தக் கீரையின் பெயர் முடக்கறுத்தான்.
இலக்கியங்களில்... ‘உழிஞை’ என்கிற பெயரோடு சங்க இலக்கியங் களில் வலம்வருகிறது முடக்கறுத்தான் கீரை! ‘பொலங்கொடி உழிஞையன்’ எனத் தொடங்கும் பதிற்றுப்பத்து பாடலும், ‘பொலங்குழை உழிஞை யொடு பொலியச் சூட்டி’ என்கிற புறநானூற்றுப் பாடலும் முடக்கறுத்தானின் நெடுங்காலப் பயன்பாட்டுக்குச் சான்றாக அமைகின்றன.
திசையெட்டும் பரவிய முடக்கறுத்தான்: கேரளக் கடற்கரை மாவட்டங்களில் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு முடக்கறுத்தான் பானத்தை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். நைஜீரிய நாட்டுப் பாரம்பரிய மருத்துவத்தில் தோல் நோய்களைக் குணமாக்கும் மூலிகைக் கருவியாக முடக்கறுத்தான் செயல்படுகிறது. தசபுஷ்பம் எனும் மூலிகைத் தொகுப்பில் முடக்கறுத்தான் மலருக்கும் இடமுண்டு.
சித்த மருத்துவம் - ‘சூலைப்பிடிப்பு… சொறி சிரங்கு… காலைத் தொடுவாய்வு…’ எனும் அகத்தியர் குணவாகடப் பாடல், வாத நோய்களுக்கும் தோல் நோய்களுக்கும் முடக்கறுத்தான் கீரை சிறப்பு மருந்து என்பதை உறுதிப்படுத்துகிறது. பல்வேறு காரணங்களால் குறைந்திருக்கும் பசியை அதிகரிக்கவும் சோர்ந்திருக்கும் உடலை உரமாக்கும் மருந்தாகவும் முடக்கறுத்தான் கீரை பயன்படும். வாதம் தொடர்பாக ஏற்படும் முடக்குகளை அறுக்கும் திறன் உடையதால் முடக்கறுத்தான் என்று பெயர் பெற்றிருக்கிறது. கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை போன்ற பல்வேறு பெயர்கள் முடக்கறுத்தான் சார்பாக வழக்கத்தில் இருக்கின்றன.
முதியோர்களின் நண்பன்: முதியவர்களின் துயரை நீக்கப் பிறப்பெடுத்த பிரத்யேகக் கீரையாக முடக்கறுத்தான் கீரையைக் குறிப்பிடலாம். வயோதிகத்தால் ஏற்படும் மூட்டுவலியின் தீவிரத்தைக் குறைக்கும் இயற்கையான வலி நிவாரணியாக முடக்கறுத்தான் கீரை செயல்படும். உலர்ந்த முடக்கறுத்தான் கீரையின் பொடியை வெந்நீரில் கலந்து பருக, உடல் வலி சட்டென மறையும். கற்றாழை பானத்தோடு சிறிது முடக்கறுத்தான் இலைகளை மேற்தூவிப் பருக, கருப்பைக்குப் பலம் கிடைக்கும். முடக்கறுத்தான் கீரையைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, கொஞ்சம் விளக்கெண்ணெய் கலந்து குடிக்க மூல நோயின் தீவிரம் குறையும். சளி, இருமலோடு உடல் சோர்வுற்று இருப்பவர்கள், முடக்கறுத்தான் கீரையோடு தூதுவளைக் கீரையையும் சேர்த்துக் குழம்பு தயாரித்துச் சாப்பிடலாம்.
ஆய்வுக் களம்: தசைப்பிடிப்புகளை இளக்கும் தன்மை முடக்கறுத்தானுக்கு இருப்பதாக ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. இலங்கையின் பாரம்பரிய என்பு முறிவு மருத்துவத்தில் முடக்கறுத்தான் நீக்கமற நிறைந்திருக்கிறது. நீரிழிவு நோயில் இதன் தாக்கம் சார்ந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது. மனதைச் சாந்தப்படுத்தும் தன்மையும் உடலில் ஏற்படும் நுண்ணிய வீக்கங்களைக் கட்டுப்படுத்தும் திறனும் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும் வன்மையும் வலிநிவாரணி குணமும் முடக்கறுத்தானுக்கு இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அராகிடிக் அமிலம், லினோலிக் அமிலம், பீட்டா-சைரோஸ்டீரால் என எண்ணற்ற வேதிப் பொருள்கள், முடக்கறுத்தானின் மருத்துவக் குணத்திற்குக் காரணமாகின்றன.
வெளிப் பயன்பாட்டுக்கு... முடக்கறுத்தான் இலைகளை உலர்த்திப் பொடித்து, முட்டை வெண் கருவோடு குழப்பி, வீக்கமுள்ள மூட்டுப் பகுதிகளில் பற்றுப் போட நிவாரணம் கிடைக்கும். முடக்கறுத்தான் கீரையை நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெய்யை அடிபட்ட வீக்கங்கள் மற்றும் சுளுக்குப் பிடிப்புகளில் தடவலாம்.
குறைவே நலம்: மற்ற கீரை வகைகளைப் போல ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டாம். மிக மிகக் குறைந்த அளவில் சூப், துவையல் / சட்னி ரகங்கள்... தோசை / இட்லி வகையறாக்களில் சேர்த்தாலே எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும். முடக்கறுத்தான் சூப் அருந்த காலை அல்லது மாலை நேரம் ஏற்றது. துவையல், சட்னி வகைகள் மதிய உணவில் இடம்பெறட்டும். முடக்கறுத்தான் கீரைக்குக் கசப்புத் தன்மை சற்றே அதிகம் என்பதால், தேவை இருப்பின் கொஞ்சம் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
வீட்டுத் தோட்டத்தில்... முடக்கறுத்தான் விதைகளைத் தூவிவிட்டு, ஒரு வேலி அமைத்தால் அதன் மீது பின்னிப் பிணைந்துகொள்ளும் கொடியாக மேலேறும். குறிப்பிட்ட பருவத்தில் உலர்ந்தாலும் காற்றடைத்த பை போலத் தோற்றமளிக்கும் முடக்கறுத்தானின் வித்தியாசமான உலர் கனிகளின் உதவியுடன் மீண்டும் மீண்டும் வேலிகளைப் பற்றி ஏறும். வீட்டில் வளர்க்க இடம் இல்லாதவர்கள் உழவர் சந்தைகளை நாடலாம். அங்கு வாகாகச் சுருட்டிவைத்த முடக்கறுத்தான் கொடிகள் விற்பனைக்குக் கிடைக்கும். வாத நோய்களின் கடும் தாக்குதலால் முடக்கிப்போடும் காரணிகளைக் களைந்து, மீண்டும் ஆரோக்கிய நடை போட வைக்கும் முடக்கறுத்தான், கீரைகளின் மகிமைக்குச் சிறந்த சான்று.
முடக்கறுத்தான் தோசை: தோசைக்கு மாவு அரைக்கும்போதே கொஞ்சம் முடக்கறுத்தான் இலைகளையும் சேர்த்து அரைத்துத் தோசை செய்யலாம். அல்லது முடக்கறுத்தான் கொடியிலிருந்து தண்டுகளை நீக்கிவிட்டு ஒரு கப் அளவு இலைகளை மட்டும் பறித்து நன்றாகக் கழுவிய பின்னர் அரைத்து சாறு எடுத்து, அந்தச் சாற்றுடன் ஐந்து கப் அளவில் ஏற்கெனவே புளிக்கவைத்த கல்லுப்பு கலந்த தோசை மாவைச் சேருங்கள். ஒரு வாணலியில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தோல் நீக்கி நசுக்கிய பூண்டு பத்து பற்கள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் அரை கப், மிளகு, சீரகம் தலா கால் தேக்கரண்டியை வரிசைக் கிரமமாகச் சேர்த்து வதக்குங்கள்.
இதைத் தோசை மாவில் கலந்து தோசையாக வார்த்தால் மூலிகை வாசனையுடன் மூட்டு வலிகளைப் போக்கும் உணவு தயார். முடக்கறுத்தான் தோசைக்கு முடக்கறுத்தான் சட்னி/துவையலைத் தொடு உணவாகத் தேர்ந்தெடுக்கலாம். முடக்கறுத்தான் தோசையின் பச்சை நிறம் நாவின் சுவை உணர்வைப் பல மடங்கு அதிகரிக்கும். தோல் நோய் உடையவர்கள் முடக்கறுத்தான் அடை ரகங்களை அடிக்கடிச் சாப்பிடலாம். இது சுவையின்மை பிரச்சினையைச் சரிசெய்யும் அற்புதமான தொடு உணவு.
முடக்கறுத்தான் ரசம்: மழைக்காலத்தில் முடக்கறுத்தான் கீரையை நறுக்கி, தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து சூடான பானமாகப் பருக, குளிருக்கு இதமான வெப்பம் உடலுக்குள் பரவும். முடக்கறுத்தான் கீரை, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘முடக்கறுத்தான் - மிளகு ரசம்’, உடல் வலியை நீக்குவதோடு சரிந்த செரிமானத்தையும் மீட்டெடுக்கும்.
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com