

59 வயதாகும் நான், உயர் ரத்த அழுத்தத்துக்குக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மாத்திரை உட்கொண்டு வருகிறேன். எனது ரத்த அழுத்தத்தை ஒவ்வொரு முறை சோதிக்கும்போதும் அது நார்மல் என்றே வருகிறது. நான் தொடர்ந்து மாத்திரை எடுத்துவர வேண்டுமா? இது தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - முனி பாரதி, மதுரை.
உயர் ரத்த அழுத்தத்துக்குத் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மாதம் ஒருமுறை உங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். தற்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையைத் தொடருங்கள். தேவைப்படும்போது உங்கள் மருத்துவர் மாத்திரையின் அளவைக் குறைப்பார் அல்லது கூட்டுவார். சிலநேரம் மாத்திரையை மாற்றுவார். வயதாக ஆக உயர் ரத்த அழுத்தம் உங்கள் உடலில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து மாத்திரையைப் பரிந்துரைப்பார். பொதுவாக, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உடலியல் இயக்கநுட்பம் (Physiological mechanism) செயலிழந்துவிடுவதால்தான் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இந்தச் செயலிழப்பு நிரந்தரமானது. இதை ஈடுசெய்யவே ரத்த அழுத்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை நிறுத்தினால், இதுவரை மாத்திரைகளால் கட்டுப்பட்டிருந்த ரத்த அழுத்தம் மறுபடியும் அதிகரித்துவிடும். நான்கு சக்கர வாகனத்தில் டயர் பங்சர் ஆகிவிட்டால் ‘ஸ்டெப்னி’ மாட்டி வாகனத்தை ஓட்டுகிறோம் அல்லவா? அது மாதிரிதான் இதுவும். சிறிய வித்தியாசம் என்னவென்றால் வாகனத்தில், பங்சரைச் சரிசெய்துவிடலாம். நம் உடலில் பங்க்சராகிப்போன ரத்த அழுத்த இயக்கநுட்பத்தைச் சரிசெய்ய முடியாது. கடைசி வரைக்கும் ரத்த அழுத்த மாத்திரை எனும் ‘ஸ்டெப்னி’தான் உதவும்.
ஆசிரியர்களுக்கு ஏற்படும் தொண்டை வலி, தொண்டைக் கட்டுதல், குரலில் மாற்றம் ஆகியவற்றுக்கான தீர்வு என்ன, டாக்டர்? - சித்ரா ராஜகுமார், ராஜபாளையம்.
ஆசிரியர்கள் தொடர்ந்து பாடம் நடத்தும்போதும் அதிக சத்தத்தில் பாடம் நடத்தும்போதும் இசை ஆசிரியர்கள் அடித்தொண்டையில் பாடும்போதும் மூக்கு, வாய், தொண்டை ஆகிய பகுதிகளில் ஈரப்பதம் நீங்கிவிடுகிறது. இதனால், தொண்டை உலர்ந்து கண்ணுக்குத் தெரியாத அளவில் அழற்சி அல்லது வெடிப்புகள் உண்டாகின்றன. இதனால்தான் ஆசிரியர்களுக்கு அடிக்கடி தொண்டைக் கட்டுதல், தொண்டை வலி போன்றவை ஏற்படுகின்றன. இந்த அழற்சி குரல்நாண்களைப் பாதித்தால் குரலில் மாற்றம் ஏற்படுகிறது.
தைராய்டு பிரச்சினை, நீரிழிவு, சாக்பீஸ் ஒவ்வாமை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை இருந்தால் தொண்டைக் கட்டுவது, கரகரப்பான குரல் ஆகியவை இயல்பாகிவிடலாம். இரைப்பை - உணவுக்குழாய் - அமிலப் பின்னொழுக்கு நோய் (GERD) இருப்பவர்களுக்கு இம்மாதிரியான தொண்டைப் பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படலாம். காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், இவற்றுக்குத் தீர்வு கிடைக்கும். தினமும் தேவைக்குத் தண்ணீர் அருந்துவது, ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் தண்ணீர் அருந்துவது, 200 மி.லி. இளம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து தினமும் 3 முறை தொண்டையைக் கொப்பளிப்பது, நீராவி பிடிப்பது, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் மௌனம் காப்பது (Voice Rest), அழற்சி அமர்த்திகளை (Lozenges) வாய்க்குள் ஒதுக்குவது போன்ற முதலுதவி முறைகளும் உதவும்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com
மருத்துவர் கணேசனுக்கு லண்டன் விருது: இங்கிலாந்து பாராளு மன்றத்தில் ஹவுஸ் ஆப் காமன்ஸ் (House of commons) அரங்கத்தில் உலகத் தமிழ்ச் சங்கம் சார்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் கு. கணேசனுக்கு வாழ்நாள் மருத்துவச் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திர சர்மா, டாக்டர் கணேசனுக்கு விருது வழங்கினார். நிகழ்வில் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் அஜய் அகர்வால், மருத்துவர், அமெஸ்பெரி மேயருமான மோனிகா தேவேந்திரன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.