பச்சை வைரம் 10: காதலைப் பெருக்கும் பசளை

பச்சை வைரம் 10: காதலைப் பெருக்கும் பசளை
Updated on
3 min read

வளைந்து நெளிந்து கொடியேறும் பசளைக் கீரையின் பார்வை மட்டும் போதும், கண்களுக்குக் குளிர்ச்சியை வாரி வழங்க! கொடியில் உறவாடும் இலைகளை உணவாகப் பயன்படுத்த உடல் வெப்பத்தைப் போக்கி, உடல் தேடும் குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கும்! கொடிப் பசளைக்கு குளிர்ச்சியைப் பரிசளிக்கும் ‘குளுகுளு கீரை’ என்று சில்லெனப் பெயர் சூட்டலாம்.

உலகளாவிய உணவு: பசளைக் கீரையைப் பயன்படுத்தி செய்யப்படும் ‘மூலிகை பகோடா’ குஜராத்தில் பிரபலம். பூசணிக்காயோடு பசளைக் கீரையைச் சேர்த்து சமைக்கப்படும் உணவு, வங்கத்தின் உணவு சிறப்புகளுள் ஒன்று. மங்களூரு உணவில் புகழ்பெற்ற நீர்தோசைக்குத் தொடு உணவாக ‘பசளை-தேங்காய்க் குழம்பு’, வட கர்நாடகத்தின் பல இடங்களில் வாசனை பரப்புகிறது. கிழங்கு வகைகளுடன் பசளைக் கீரையைச் சேர்த்து சமைக்கும் வழக்கம் ஆந்திரப் பகுதிகளில் தொடர்கிறது.

சித்த மருத்துவம்: பசளைக் கீரை உணவுப் பொருள்களில் சிறப்பானது என்று மேன்மைப்படுத்தி கூறுகிறது சித்த மருத்துவம். உடலுக்குப் பொலிவையும் பலத்தையும் கொடுக்கும் அதன் குணத்தை மையப்படுத்தி உயர்வாகக் கூறப்பட்டிருக்கலாம். இரும்புச் சத்து, சுண்ணச்சத்து, விட்டமின் ஏ, மாங்கனீஸ், அமினோ அமிலங்கள் எனப் பசளையில் நுண்ணூட்டங்கள் நிறைவாக இருக்கின்றன. இனிப்புச் சுவையைக் கொடுத்து, உடல் வெப்பத்தைத் தணித்து, ரத்த சிவப்பணுக்களைக் கூட்டி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தடைபட்ட சிறுநீரைப் பெருக்கி, மலத்தை முறையாக வெளியேற்ற உதவும் கீரை இது. வெள்ளைப்படுதல், கருப்பை சார்ந்த சிக்கல்கள், சிறுநீர்ப் பாதைத் தொற்று போன்றவை இருந்தால் பசளைக் கீரையைப் பெண்கள் அடிக்கடி உணவாகப் பயன்படுத்தலாம்.

உணவியல் நுணுக்கங்கள்: உணவாகப் பசளையின் ருசியை அதிகரிக்க பருப்பு ரகங்களுடன் சமைத்துச் சாப்பிடலாம். கீரையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து மிளகு, சீரகம் சேர்த்து உணவின் சுவையை உயர்த்தலாம். பசளைக் கீரையை உணவு வகைகளில் அவ்வப்போது சேர்த்துவந்தால் தேகத்திற்குப் பிரகாசத்தைக் கொடுக்கும். பசளைக் கீரையைத் தொடு உணவாகப் பயன்படுத்துவது மட்டுமன்றி, அடைதோசை போன்றவற்றிலும் தூவி தோசையின் சுவை, மருத்துவக் குணத்தைக் கூட்டலாம்.

மலம் முறையாக வெளியேற: பசளைக் கீரையைத் தனித்தனியாக எடுத்து, பருப்பு சேர்த்துக் கடைந்து வாரம் இருமுறை மதிய வேளையில் சாப்பிட்டு வர மலக்கட்டு பிரச்சினை நிவர்த்தியாவது மட்டுமன்றிப் பல்வேறு நோய்களுக்குத் தடுப்பாகவும் அமையும் என்கிறது சித்த மருத்துவம். பசளைக் கீரையுடன் துத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்துக் கடைந்த கடைசலைத் தொடர்ந்து சாப்பிட்டுவர மூலநோய் அறிகுறிகள் படிப்படியாகக் குறையும்.

பசலை, பசலி, பசலை, பசரை, வசளை, கொடிப்பயலை, கொடிலை, கொடிவசலை, கொடியலை போன்ற எண்ணற்ற பெயர்கள் பசளைக் கீரைக்கு உண்டு. Basellaceae குடும்பத்தைச் சார்ந்த பசளைக் கீரையில் சிவப்பு, பச்சை என இரண்டு வகைகள் உள்ளன. பசுமையான பசளைக் கீரையின் தாவரவியல் பெயர் Basella alba. சிவந்திருக்கும் பசளைக் கீரையின் தாவரவியல் பெயர் Basella rubra. பசளையில்தான் எத்தனை எத்தனை விதங்கள்! வெள்ளைப் பசளை, சிவப்புப் பசளை, வறுக்கைப் பசளை, குத்துப் பசளை, நற்பசளை, ஆற்றுப் பசளை என விரியும் பசளை ரகங்கள் ஒவ்வொன்றுமே சிறப்பான மருத்துவக் குணம் பெற்றவை.

காதலுக்கான கீரை: ‘போகம் மிகக்கொடுக்கும் போர்செய் கபம்பெருக்கும்…’ எனத் தொடங்கும் பசளைக் கீரைக்கான அகத்தியர் குணவாகடப் பாடல், போகத்தைப் பெருக்கும் கீரை இது என்பதை உறுதியாகச் சொல்கிறது. ‘தாளி முருங்கைத் தூதுளம்பசளை…’ எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடலும் பசளையை இன்பம் விளைவிக்கும் கீரையாகச் சுட்டிக்காட்டுகிறது. இயந்திரமயமான வாழ்வில் காதலை அதிகரிக்கக் கொடிப்பசளை நம்பகமான ‘காதல் தூதுவன்’. ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோனின் அளவுகளைப் பசளை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. பசளைக் கீரையுடன் தூதுவளை, முருங்கை, அரைக்கீரை, பயத்தம்பருப்பு, தக்காளி, சின்ன வெங்காயம், கொஞ்சம் மிளகு, தேவையான கல் உப்பு சேர்த்துச் சமைத்து மதிய வேளையில் சுடு சோற்றில் பிசைந்து சாப்பிட, கடுமையாகச் சோர்வுற்ற உடலும் சுறுசுறுப்பாகும்.

கெட்டியான சூப்புக்கு: வீட்டிலேயே தயாரிக்கப்படும் சூப் ரகங்களுக்குக் கொஞ்சம் கொழகொழப்புத் தன்மை கிடைக்க, பசளைக் கீரையைப் பயன்படுத்தலாம். இயற்கையான ‘சூப் திக்ன’ராகப் பசளைக் கீரை செயல்படும். பசளைக் கீரையின் சாறை வடிகட்டி அதில் தேவைக்கு ஏற்ப விதவிதமான மூலிகைப் பொருள்களைக் கொண்டு சூப் தயாரித்துப் பருகலாம். கீரையை இடித்துச் சாறெடுத்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்துப் பானமாகப் பருக, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்கும்.

ஆய்வுக்களம்: வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும் தன்மை இருப்பதால் (Gastro protective activity), இதன் இலைச்சாறு ஒரு ஸ்பூனோடு சிறிது வெண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். பசளைக் கீரையைச் சமைத்து அதில் நெய் விட்டு அவ்வப்போது சாப்பிட, எதிர் ஆக்ஸிகரணிப் பொருள்களின் செயல்பாடு அதிகரிக்கும். குடல் புற்றுநோய் சார்ந்த ஆய்வுகளில் பசளையின் சாரங்கள் சிறப்பான முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன. இரும்புச் சத்தை நிறைத்து வைத்திருப்பதால் ரத்த சோகைக்கான மருந்தாகவும் பசளையைச் சமைத்து உண்ணலாம். அதிகுருதியழுத்தத்தைக் கட்டுப் படுத்த நைஜீரியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் பசளை முக்கியப் பங்கு வகிக்கிறது.

வெளிமருந்தாக: இதன் இலைகளைத் தலையில் வைத்து வெப்பத்தைத் தணித்துக்கொள்ளும் முறை முற்காலங்களில் இருந்திருக்கிறது. சூரியனின் ஆதிக்கம் மிகுந்த பகல் வேளையில் நடைப் பயணம் மேற்கொள்வோர், பசளைக் கீரையைக் கசக்கி தலைப்பாகைக்குள் வைத்துக்கொண்டு நடைபோடுவார்களாம். இந்தக் கொழ கொழப்புப் பசையை வெப்பமும் வலியுமுள்ள வீக்கங்களில் தடவ வலி விரைவில் குறையும். வேனிற்கால உணவுத் திட்டத்தில் தவறாமல் இடம்பெற வேண்டிய கீரை பசளை! மழைக்காலங்களில் கீரையின் இலைகளை உலர்த்தி, வெந்நீரில் கொதிக்க வைத்துத் தேநீர் போலப் பருகலாம். கொடியில் காய்கள் காய்க்கும் பருவத்தில் கீரையில் லேசாக கசப்புச் சுவை அதிகரிக்கும் என்பதால் முன்பே கீரையைப் பயன்படுத்துவது சிறப்பு. கொடிப் பசளைக் கீரை, ஒவ்வொரு வீட்டிலும் கொடியேற வேண்டிய மூலிகை அழகி!

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in