தலைமுடி பராமரிப்பும் ஊட்டச்சத்தும்

தலைமுடி பராமரிப்பும் ஊட்டச்சத்தும்
Updated on
3 min read

ஆரோக்கியமான தலைமுடி உடல் ஆரோக்கியத்தின் அடையாளம். இன்றைய அவசர உலகில் முடி உதிர்தல், பொடுகு, முடிப்பிளவு போன்ற பிரச்சினைகளை மக்கள் அதிக அளவில் சந்திக்கின்றனர். அடர்த்தியான, வலிமையான கூந்தல் வேண்டும் என்பதற்காகப் பல வேதிப்பொருள்கள் கலந்த கூந்தல் பராமரிப்புப் பொருள்கள் சந்தையை வியாபித்துள்ள சூழலில், சில எளிய பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வலிமையான, அழகான தலைமுடியைப் பெற இயலும். தலைமுடியை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சீராகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

கூந்தல் பராமரிப்பு குறித்து பொதுவாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை:

* விட்டமின்களின் குறைபாடு தோல், கூந்தலைப் பாதிக்கும். விட்டமின் ஏ, டி, இ, துத்தநாகம், செலினியம், புரதம், இரும்புச் சத்து, கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் ஆகியவை தலைமுடி ஆரோக்கியத்திற்கு அவசியம்.

* வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்குக் குளிக்க வேண்டும். சல்ஃபேட், பாரபென் இல்லாத ஷாம்புகளைத் தேர்வுசெய்வது முக்கியம்.

* பளபளப்பை அதிகரிக்கக்கூடிய வேதிப் பொருள்கள் குறைவாக உள்ள ஷாம்புகள், கண்டிஷனர்களைப் பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

* தலைக்குக் குளித்த பின் முடியை அழுத்தித் துடைக்காமல் லேசாகத் துடைக்க வேண்டும். அதிக அளவு அழுத்தத்தைத் தருவது முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்யும்.

* வாரம் ஒரு முறை தலைக்கு மசாஜ் செய்வதால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துவதோடு முடி வளர உதவும்

* ஹேர் டிரையர், ஸ்ட்ரெய்ட்னர் போன்ற கருவிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம். அதிக வெப்பத்தைத் தரும் கருவிகளைப் பயன்படுத்துவது முடியையும் தலையையும் சேதப்படுத்தும்.

* உடல் ஆரோக்கியம் - தலைமுடி பராமரிப்புக்குத் தினசரி 6 - 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.

* தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்திற்கு உதவுவதோடு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வைச் சீராக்குகிறது. அது மன அழுத்தத்தை நீக்கி, தலைமுடி வளர்ச்சியை உறுதிசெய்கிறது.

கூந்தல் பராமரிப்புக்கான ஊட்டச்சத்துகள்: விட்டமின்கள், தாதுக்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் முக்கியமானவை. முடி அமைப்பு, முடி வளர்ச்சி இரண்டையும் ஊட்டச்சத்து குறைபாடு பாதிக்கும்.

துத்தநாகம்: துத்தநாகம் முடிச் சுருக்கத்தைத் தடுத்து முடி வளர உதவுகிறது. இது முடி வேர்களை மீட்டெடுப்பதை ஊக்குவிக்கிறது. துத்தநாகம் நிறைந்த உணவு வகைகளான பாதாம், சணல் விதைகள், பூசணி விதைகள், கொண்டைக்கடலை, மீன், இறைச்சி, காளான், முட்டை போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

செலினியம்: பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை அகற்றுவதன் மூலம் செலினியம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கூந்தல் நுண்ணறைத் தூண்டுதலைக் கட்டுப்படுத்தி முடியைப் பலப்படுத்தும். நரை முடி வராமல் செலினியம் தடுக்கிறது. கணவாய் மீன், இறால், முட்டை, கோழி இறைச்சி, சூரியகாந்தி விதை, எள் விதை போன்றவற்றில் செலினியம் அதிகம் உள்ளது.

இரும்புச்சத்து: இரும்புச்சத்து குறைபாடு முடி வளர்ச்சிக்கு அவசியமான ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தடுக்கிறது. எனவே, முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினைகள் வரலாம். இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரை, காய்கறிகள், பழங்கள், கம்பு, கேழ்வரகு, ராஜ்மா, கொண்டைக்கடலை, சோயா, எள், கோழி இறைச்சி போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுவதால் குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கொழுப்பு அமிலங்கள்: ஒமேகா 3 கொழுப்புச் சத்து முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது முடி வலிமையை அதிகரிப்பதுடன் நீரேற்றத்தையும் அளிக்கிறது. மேலும், முடி உதிர்வைக் குறைக்கிறது. மீன், ஆளி விதை, சியா விதை, சணல் விதை, வால்நட், வெந்தயம், சோயாபீன்ஸ், உளுந்து, அவகாடோ போன்றவற்றில் ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ளது.

ஃபோலேட்: பருப்பு, கீரை வகைகள், பிராக்கோலி, சூரியகாந்தி விதை, பீட்ரூட், ஆரஞ்சு, பப்பாளி, பச்சைப் பட்டாணி போன்ற ஃபோலேட் நிறைந்த உணவு வகைகளைத் தினமும் சாப்பிடுவதால் முடியின் அடர்த்தியும் நீளமும் அதிகரிக்கும். மேலும் ஃபோலேட் குறைபாடு இருப்பவர்களுக்கு நரைத்தல், முடி உதிர்தல் போன்றவற்றோடு முடியின் அடர்த்தியும் குறையும்.

பயோட்டின்: பயோட்டின், கெரட்டின் உற்பத்திக்கு உதவும் ஒரு முக்கியமான விட்டமின். கெரட்டின் என்பது முடியின் முக்கியக் கட்டமைப்புக் கூறுகளை உருவாக்கும் புரதம். முட்டை, ஆளி விதை, பனீர், வால்நட், குங்குமப்பூ விதை, காளான், பாதாம், வெந்தயக் கீரை, இறைச்சி போன்ற பயோட்டின் நிறைந்தவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

விட்டமின் ஏ: விட்டமின் ஏ ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, அதை வலுவாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகிறது. விட்டமின் ஏ, முடியை நீரேற்றமாக வைப்பதுடன் முடி உடையும் தன்மையைக் குறைக்கிறது. முருங்கைக் கீரை, முளைக்கீரை, கேரட், கறிவேப்பிலை, பிராக்கோலி, தக்காளி, கிழங்கு, முட்டை, மீன், பால், பூசணி போன்ற உணவு வகைகளில் விட்டமின் ஏ உள்ளது.

விட்டமின் டி: விட்டமின் டி, முடி வளர்ச்சியிலும் முடி வேர்கள் ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. போதுமான அளவு விட்டமின் டி சேர்க்காவிட்டால் அது முடி உதிர்வு, பொடுகு போன்றவற்றை அதிகரிக்கும். பால், சோயாபீன்ஸ், மீன், பாதாம், முட்டையின் மஞ்சள் கரு, தயிர், காளான் போன்ற விட்டமின் டி நிறைந்த உணவு வகைகளைச் சேர்த்துகொள்ளுங்கள். தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடம் சூரிய ஒளியில் இருப்பது அவசியம்.

விட்டமின் இ: விட்டமின் இ, ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ், முடி வேரை உடையவைக்கும் ஃபிரீ ரேடிக்கல்களைக் குறைக்கிறது. முடியின் பொலிவையும் அதிகரிக்கிறது. விட்டமின் இ உள்ள பாதாம், சூரியகாந்தி விதை, ஆளி விதை, பசலைக்கீரை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.

புரதம்: முடி ஆரோக்கியத்திற்குப் புரதம் முக்கியமானது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஏனெனில் முடி வேர்கள் புரதத்தால் ஆனவை. புரதக் குறைபாடு முடி உதிர்வை ஏற்படுத்தும். புரதம் நிறைந்த உணவு வகைகளான பருப்பு, பயறு வகைகள், இறைச்சி, மீன், முட்டை, பனீர், தயிர், விதைகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முடி ஆரோக்கியத்திற்குச் சிறந்த ஐந்து உணவு வகைகள்:

முருங்கைக் கீரை: முருங்கை இலையில் பாக்டீரியாவையும் பூஞ்சையையும் எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இது பொடுகு, தலையில் அரிப்பு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. இதில் விட்டமின் ஏ, விட்டமின் சி, இரும்புச் சத்து, துத்தநாகம், பயோட்டின் ஆகியவை இருப்ப தால் முடி நரைப்பதைத் தடுக்கும், வழுக்கைப் பகுதிகளில் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

வெந்தயம்: வெந்தயத்தில் புரதம், இரும்பு, கோலின், பி விட்டமின் இருப்பதால் முடி கொட்டுவதைத் தடுத்து முடியின் அடர்த்தியை அதிகரிக்கும். மேலும் தலையில் எரிச்சல், பொடுகு, அரிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். கொட்டைகள், விதைகள்: பாதாம், வால்நட், வேர்க்கடலை, பூசணி விதை, ஆளி விதை, சூரியகாந்தி விதை, எள் போன்றவற்றில் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், பயோட்டின், விட்டமின் இ அதிகம் உள்ளன. எனவே, இது முடி உதிர்வதைக் குறைத்து, புதிய முடி உருவாவதையும் தூண்டுகிறது.

முட்டை: முட்டையில் முடி ஆரோக்கியத்திற்குத் தேவை யான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அவை முடி வளர்ச்சியைத் தூண்டு கின்றன. முடியின் அளவையும் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன. முடியை வேர்களில் இருந்து பலப்படுத்தி, சேதமடைந்த முடிகளை முட்டையின் சத்து குணப்படுத்தும்.

கறிவேப்பிலை: இதில் இரும்புச் சத்து, விட்டமின் பி, விட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளதால் இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவித்து, சேதமடைந்த முடிகளைச் சரிசெய்கிறது.

- கட்டுரையாளர், ஊட்டச்சத்து நிபுணர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in