

அழகு சாதனப் பொருள்கள், காலணிகள், அணிகலன்கள் என அனைத்திலும் ஜிகினாவை இன்றைய இளம்பெண்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். நம் வீடு தேடி வரும் திருமண அழைப்பிதழிலும் ஜிகினா மினுமினுப்பு நம் முன்னே மிளிர்கிறது. திருமணத்தில் மணமகளை ஒப்பனை செய்து அழகூட்டுவதற்கு ஜிகினா முதன்மையாக உபயோகப்படுத்தப்படுகிறது. இவை மட்டுமல்ல; பெயின்ட், சோப்பு, உதட்டுச்சாயம், காகித அட்டைகள், கிரீம், ஷாம்பூ, பசை, பச்சை குத்துதல், ஸ்பிரே கேன்கள், பொம்மைகள், ஆடைகள், கைப்பேசி, பிற எழுதுபொருள்கள், மை, பாத்திரங்கள், குழந்தைகளுக்கான பாட்டில்கள், விளையாட்டுப் பொருட்கள் என ஜிகினா இல்லாத பொருள்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஜிகினா பயன்பாடு அதிகரித்துள்ளது. சில பேக்கரிகளில் கேக்கில்கூட ஜிகினா பயன்படுத்தப்படுகிறது. விருந்து, விழா, பண்டிகை என எல்லாக் கொண்டாட்டங்களிலும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பார்க்கப்படும் ஜிகினாவின் பின்னால் இருக்கும் ஆபத்துக்களை அறிவது அவசியம்.
ஜிகினா ஏன் தவிர்க்கப்பட வேண்டும்? - ஜிகினாவில் நுண்ஞெகிழி, உலோகம் ஆகியவை கலந்திருப்பதால் சுற்றுச்சூழலையும் ஆரோக்கியத்தையும் இது பாதிக்கும். 5 மைக்ரான் அளவுக்கும் சிறிதாக ஜிகினா தயாரிக்கப்படும்போது இதை மற்ற கழிவு, குப்பையில் இருந்து எவ்வாறு பிரித்தெடுக்க முடியும்? ஜிகினாவை எளிதில் சிதைக்க முடியாது. அழிக்கவும் இயலாது. மறுசுழற்சி செய்வதற்கும் இவை ஏற்றதாக இல்லை. 2019ஆம் ஆண்டு கடல் மாசு அறிக்கையின்படி, ஜிகினா பொருள்களும் சுற்றுச்சூழல் கெடுவதற்கான முக்கியமான நுண் ஞெகிழிப் பொருள்களாக இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் சேரும் குப்பையில் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தும் ஜிகினாவும் முக்கியப் பங்கை வகிக்கிறது என்று தேசியக் கடல் - வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீர்நிலைகளையும் கடலையும் இவை சென்றடைவதால் அங்குள்ள உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, மீன்கள் இவற்றை உண்ணும்போது இறக்க நேரிடலாம். ஏற்கெனவே, கடல் உணவு வகைகளில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்போது இது போன்ற நுண்ஞெகிழிப் பொருள்களும் அதிகரித்துவருவது மிகப் பெரிய சுகாதாரச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.
இவை எல்லாம் சுற்றுச்சூழல் பிரச்சினையை இரட்டிப்பாக்கிவிட்டன. ஜிகினாவை நீக்குவது என்பது சிக்கலான பிரச்சினையாக இருப்பதால் இது உலகளாவிய சுற்றுச்சூழல் சீர்கேடாக மாறிவருகிறது. உயிரினங்கள் மட்டுமல்லாமல், மண்ணும் காற்றும் நீரும் என மொத்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுவிடும். இவற்றை உண்ணும் மனிதனுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஜிகினாவால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள்:
தோல் பாதிப்புகள்: ஜிகினாவால் தோலில் எரிச்சல் ஏற்படலாம். சிலருக்குத் தோல் அழற்சி, ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம்.
கண் பாதிப்புகள்: இவை கண்களில் சிராய்ப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாகக் கருவிழிப்படலம் கீறல்களால் பாதிக்கப்படும் போது, பார்வை பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
சுவாச மண்டலம் - நுரையீரல் பிரச்சினை: ஜிகினாவில் உள்ள துகள்களைச் சுவாசிக்கும் போது, இவை சுவாச மண்டலத்தைப் பாதித்து, நுரையீரல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
ஜீரண மண்டலப் பாதிப்புகள்: ஜிகினா பயன் படுத்தப்பட்ட கேக் வகைகள், இனிப்புகளைச் சாப்பிடும்போது இவை ஜீரண மண்டலத்தைப் பாதிக்கின்றன. மேலும் இதிலுள்ள மிக நுண்ணிய துகள்கள் ரத்த ஓட்டத்தை அடைந்து ரத்தத்தில் நுண்ஞெகிழி அளவை அதிகரிக்கின்றன. ரத்தத்தில் இவற்றின் அளவு அதிகரிக்கும்போது பிற உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
புற்றுநோய்: ஜிகினாவில் உள்ள நுண்ஞெகிழி, மனித உடலின் திசுக்களிலும் மூளையிலும் சேர்வது சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப் பட்டுள்ளது. இதனால் அழற்சி, வீக்கம் போன்ற திசு பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக உடல் செல்களின் மரபணுக்கள் சிதைக்கப்படலாம். இது மரபணுப் பிறழ்வு, புற்றுநோய் போன்றவை ஏற்பட வழிவகுக்கும். மேலும், செல்களில் ஏற்படும் செல் தன்மடிவு, செல் சிதைவு ஆகிய காரணங்களால் புற்றுநோய் மட்டுமல்லாமல் இதய, ரத்த நாளப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
குழந்தை நோய்கள்: சமீபத்திய சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்றில் குழந்தைகளின் மல மாதிரிகளில் காணப்படும் நுண்ஞெகிழியின் அளவானது, பெரியவர்களைவிடப் பல மடங்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாம் விழித்துக் கொள்ளக்கூடிய எச்சரிக்கை மணியாகவே இது பார்க்கப்படுகிறது.
இதற்கு மாற்று என்ன? - விவசாயத்தில் வேதி உரங்களைத் தவிர்த்து இயற்கை உரத்திற்கு எப்படி மாறிவருகிறோமோ, அதேபோன்று பளபளப்பு, மினுமினுப்பு, பிளாஸ்டிக் அல்லாத இயற்கைப் பொருள்களுக்கு மாற வேண்டும். இயற்கைப் பொருள்களில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களை எளிதாக மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும்.
யூகலிப்டஸ் போன்ற மரங்களின் செல்லுலோஸைப் பயன்படுத்தி ஜிகினா தன்மையுள்ள மினுமினுப்பான பொருள்களைத் தயாரிக்கலாம். இவற்றிலுள்ள ‘நானோ கிரிஸ்டல்கள்' அத்தகைய பண்பைக் கொண்டவை.
எனவே, இதுபோன்ற மாற்று முறைகளின் மூலம் ஜிகினா பயன்பாட்டை மெல்லக் குறைக்க முடியும். ஐரோப்பிய ஒன்றியம் பிளாஸ்டிக் அலங்காரப் பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. நாமும் இதற்கான முன்னெடுப்புகளைச் செய்வதுடன் உற்பத்தி, விற்பனை ஆகியவை குறித்துப் புதிய சட்டங்களைக் கொண்டுவந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மினுமினுப்பு, பளபளப்பு ஆகியவற்றை மக்கள் கைவிடத் தயாராக வேண்டும். ஜிகினா அளிக்கும் பிரகாசம் நம் வாழ்வைப் பரிகாசம் செய்ய அனுமதிக்கக் கூடாது.
ஜிகினா எதனால் ஆனது? - பாலி எதிலீன் டெரெப்தாலேட் (PETE), அலுமினியத்தால் ஆனது ஜிகினா. பளபளப்பு, மினுமினுப்பு ஏற்படத்தான் அலுமினியம் இதில் சேர்க்கப்படுகிறது. இதுவும் ஒரு நுண்ஞெகிழி (மைக்ரோ பிளாஸ்டிக்) வகைதான்.
பாலி வினைல் குளோரைடு என்கிற பிளாஸ்டிக் பொருளாலும் ஜிகினா உருவாக்கப்படலாம். டைட்டானியம் டை ஆக்சைடு, இரும்பு ஆக்சைடு, ஸ்டைரீன் அக்ரிலேட் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் கூறுகளும் இதில் உள்ளன. இவை தவிர பாலிமர் வகைகள், மைகா போன்ற கனிமங்களும் இதில் சேர்க்கப்படலாம்.
- கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்; சு.முத்துச் செல்லக்குமார்