

எனக்குக் குறட்டை விடும் பழக்கம் உள்ளது. இது ஏன் ஏற்படுகிறது? இது ஆபத்தானதா? இதற்கு என்ன தீர்வு? ஆலோசனை தாருங்கள், டாக்டர். - எம். முருகேசன், திண்டுக்கல்.
உறங்கும்போது தொண்டையில் மூச்சுக் குழல் தசைகள் தளர்ந்துவிடும். அப்போது சுவாசப்பாதையின் அளவு குறுகிவிடும். இப்படிக் குறுகிய பாதை வழியாகச் சுவாசக் காற்று பயணிக்கும்போது சத்தம் எழுகிறது. இதுதான் குறட்டை. இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்த இயல்புநிலைதான். சில வேளை, மல்லாந்து உறங்கும்போது, தளர்வுநிலையில் உள்ள நாக்கும் சிறிது உள்வாங்கி தொண்டைக்கு வந்துவிடும். இதனாலும் குறட்டை வரும். கீழ்த்தாடை சிறிது உள்வாங்கி இருந்தாலும் குறட்டை வரக்கூடும். உடற்பருமன், தைராய்டு பிரச்சினை, சைனஸ் தொல்லை, சளி, ஜலதோஷத்துடன் கூடிய மூக்கடைப்பு, டான்சில் அழற்சி, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை குறட்டைக்குப் பாதை போடும்.
இவற்றைத் தவிர்த்தால் குறட்டை ‘குட்பை’ சொல்லிவிடும். குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், கூடிக்குறைவதோடு திடீரென்று அறவே சத்தமில்லாமல் போவதை ‘உறக்க மூச்சின்மை’ (Sleep Apnea) என்கிறோம். இதுதான் ஆபத்தானது. இதை உறுதிசெய்ய ‘உறக்கப் பரிசோதனை’ (Sleep study) இருக்கிறது. குறட்டையினால் சுவாசம் தடைபடுகிறதா, ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா, இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறதா என்பது போன்ற விவரங்களை இது தெரிவிக்கிறது. உறக்க மூச்சின்மை ஆரம்பக்கட்டத்தில் இருந்தால், லேசர் அறுவை சிகிச்சையில் குணப்படுத்திவிடலாம்.
பாதிப்பு தீவிரமாக இருந்தால், ‘சிபாப்’ (Continuous Positive Airway Pressure - CPAP) எனும் முகமூடியை உறங்கும்போது அணிந்துகொள்வதுதான் சிறந்த வழி. தண்ணீர்க் குழாயில் அடைப்பு ஏற்படும்போது பலத்த காற்றைச் செலுத்தினால் அடைப்பு விலகிவிடுகிறது அல்லவா? இந்த இயற்பியல் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது, சிபாப் கருவி. இதிலிருந்து வெளிப்படும் காற்று தேவைக்கேற்ற அழுத்தத்துடன் மூச்சுப்பாதைக்குள் செல்வதால், குறட்டை விலகிவிடுகிறது.
எனக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் ஸ்ட்ரோக் வந்தது. அதனால் உயிர் வாழும் வரை மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கூறினார். அதன்படி Metopro xl 25, Rozolet 10 mg ஆகியவற்றை மூன்று ஆண்டுகளாக எடுத்துக்கொண்டு வருகிறேன். இப்போது நான் நலமாக உள்ளேன். என் வயது 62. தொடர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா, டாக்டர்? - என். கந்தசாமி, மின்னஞ்சல் வழி.
நீங்கள் இப்போது பயன்படுத்தும் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்குப் பக்கவாதம் (Stroke) ஏற்பட்டதற்குக் காரணம், உங்கள் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டிருக்க வேண்டும். இது இரு வழிகளில் ஏற்பட்டிருக்கலாம். ஒன்று, உயர் ரத்த அழுத்தம். அடுத்தது, கொலஸ்ட்ரால் அடைப்பு. இந்தப் பாதிப்புகள் மீண்டும் தலைதூக்கக்கூடும். அப்போது மறுபடியும் பக்கவாதம் அல்லது மாரடைப்பு வரலாம். இந்தப் பிரச்சினைகளைத் தடுப்பதற்காகவே உங்கள் மருத்துவர் இரண்டு வகை மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார். அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் நலம் தொடர அவை உதவும்.
எனக்கு வயது 72. மூட்டு முடக்குவாத (Rheumatoid arthritis) நோயால் அவதிப்படுகிறேன். இந்த வியாதி குணமாகுமா? இல்லை, கடைசி வரை இந்த வியாதியுடனேதான் இருக்க வேண்டி வருமா? - மோகன் ராஜ், மின்னஞ்சல் வழி.
மூட்டு முடக்குவாத நோய்க்கு நவீன மருத்துவத்தில் நிரந்தத் தீர்வு எதுவும் இல்லை. தொடர் பரிசோதனைகளையும் மருந்து சிகிச்சைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதும் அவசியம். இவற்றின் மூலம் நோயைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். சிகிச்சையில் முன்னேற்றம் என்பது தனிப்பட்ட நோயாளி ஒருவரது நோய்நிலை, உடல் நலநிலை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பொறுத்தது. நம்பிக்கையுடன் சிகிச்சை எடுங்கள்.
எனக்கு 77 வயது. முழு உடல் தகுதியுடன் உள்ளேன். எனது உடலில் சில கொழுப்புக் கட்டிகள் உள்ளன. இவற்றால் பிரச்சினை வருமா, டாக்டர்? - சுதந்திரமணி, திருவாரூர்.
வழக்கத்தில், பெரும்பாலான கொழுப்புக் கட்டிகள் (Lipoma) பிரச்சினை செய்வதில்லை. கொழுப்புக் கட்டி வலி மிகுந்ததாகவோ உடல் இயக்கத்தைப் பாதிப்பதாகவோ மாறும் வரை அதற்குச் சிகிச்சை தேவையில்லை. பெரும்பாலும் அவை அழகைக் காரணம் காட்டி, அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன. ஒரு கொழுப்புக் கட்டி திடீரென்று பெரிதாக வளர்கிறது என்றாலோ அது கொழுப்புத்திசுக் கட்டி (Liposarcoma) வகையைச் சார்ந்தது என்றாலோ அதை நீக்கிவிடவேண்டும். வடுக்கள் ஏதுமில்லாமல் கொழுப்புக் கட்டிகளை நீக்கும் புதிய வழிமுறைகள் இப்போது உள்ளன.
நான் தினமும் ‘ஜிம்’ பயிற்சி செய்பவன். வயது 36. ‘ஜிம்’ பயிற்சிகளால் இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைப்பதில்லை என்றும் நடைப்பயிற்சிதான் இதயத்துக்கு நல்லது என்றும் என் நண்பன் கூறுகிறான். இது எந்த அளவுக்கு உண்மை, டாக்டர்? - ஆர். குணசேகரன், சென்னை-90.
எடை தூக்குவது, ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றால் உடலில் தசைகள் வலுப்பெறும். உடல் கட்டமைப்பு அழகு பெறும். எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். எலும்பு மூட்டுகள் வலுப்பெறும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளைச் செய்துவரும்போது, தசைகளில் குளுக்கோஸ் அதிகமாகச் சேமிக்கப்படும். உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். சோர்வு இருக்காது. மாறாக நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற காற்றலைப் பயிற்சிகளைச் (Aerobic Exercises) செய்யும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் பாகங்களுக்கு அதிக ரத்தம் செல்லும். அப்போது ஆக்ஸிஜன் எல்லா உறுப்புகளுக்கும் அதிகமாகக் கிடைக்கும். இதன் பலனால், உறுப்புகள் எல்லாமே சுறுசுறுப்படைந்து அதிகத் திறனுடன் இயங்கும். குறிப்பாக, இதயம் சீராக இயங்கும்.
ரத்த அழுத்தம் கட்டுப்படும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும். சுவாசம் அதிகரிக்கும். நுரையீரலின் காற்றுக் கொள்ளளவு அதிகரிக்கும். சுவாசத் திறன் மேம்படும். சிறுநீரகம், நுரையீரல், தோல் போன்றவற்றின் வழியாக உடற்கழிவுகள் விரைவில் அகற்றப்படும். ஆக மொத்தத்தில் இதயத்துக்கு மட்டுமல்லாமல் காற்றலைப் பயிற்சிகளால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். ஆகவே, தினமும் ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் நடைப்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இதயப் பாதுகாப்பு கிடைக்கும். அதேவேளை, ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னால் ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம். இதயத்தில் பிறவியிலேயே ஏதாவது பிரச்சினை இருந்து அவை வெளியே தெரியாமல் இருக்குமானால், ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்வது ஆபத்தாகிவிடும். ஆகவேதான், இந்த எச்சரிக்கை.
DEPLATT A 75 மாத்திரை சாப்பிடும்போது உடலில் காயம் பட்டால் ரத்தப்போக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எதிர்பாராமல் காயம் ஏற்பட்டால் ரத்தம் தாமதமாக உறையுமா? முதலுதவி ஏதும் செய்ய வேண்டுமா? - பி. நடராஜன், மின்னஞ்சல்.
DEPLATT A 75 என்பது ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை. இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது உடலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் உறைவதற்குத் தாமதம் ஆகும். ஆகவே, காயத்திலிருந்து வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்த உடனடியாகக் காயத்தில் அழுத்தமாகத் துணிக்கட்டு போடப்பட வேண்டும். காயம் ஏற்பட்ட உடல் பகுதியைத் தொங்கப்போடக் கூடாது. மாறாக, உயர்த்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். பெரிய காயம் என்றால், DEPLATT A75 மாத்திரை எடுத்துக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம். இந்த மாத்திரையை எடுத்துக்கொள்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். பணி இடங்களில் தேவையான பாதுகாப்புக் கருவிகளைப் பொருத்திக்கொள்ள வேண்டும். நகங்களை வெட்டும்போதும் கவனம் தேவை.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com