பச்சை வைரம் 09: புற்றுநோயைத் தடுக்கும் தண்டுக் கீரை

பச்சை வைரம் 09: புற்றுநோயைத் தடுக்கும் தண்டுக் கீரை
Updated on
3 min read

கிராமத்து மக்களிடம் ‘கீரை வகைகளிலேயே பெரிதினும் பெரிது எது?’ என வினவினால், அடுத்த வினாடியே சட்டென கிடைக்கும் விடை தண்டுக் கீரை என்கிற பெயராகத்தான் இருக்கும். தண்டுக் கீரையின் சற்றே பெரிதான இலைகளும் வழுவழுப்பான இளம் தண்டுகளும் பசுமைப் பார்வையாலே நம்மைச் சாப்பிட அழைக்கும். உணவு வகைகளில் நொறுவைத்தன்மையை விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது தண்டுக் கீரையை. நார்ச்சத்துக்கான தேவை இருப்பவர்கள் அணுக வேண்டிய கீரையும் இதுவே. உறவுகளுக்கு ஆரோக்கியத்தைப் பரிசளிக்க விரும்பினால் தண்டுக் கீரையைப் பச்சை பொக்கேவாக உருவகப்படுத்தி நலப் பொக்கிஷமாக வழங்கலாம்.

இனிப்புச் சுவையை வழங்கும் கீரைகளில் தண்டுக்கீரையும் ஒன்று. மலத்தைக் கடினமின்றி வெளியேற்றி, சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றுக்குத் தீர்வாகத் தண்டுக் கீரை அமையும். மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், நார்ச்சத்து போன்ற உடலுக்கு அத்தியாவசியமான நுண்ணூட்டச் சத்துகள் தண்டுக்கீரையில் நிறையவே இருக்கின்றன. இரும்புச் சத்தையும், சுண்ணாம்புச் சத்தையும் நிறைவாக வைத்திருக்கிறது தண்டுக்கீரை. அமரந்தஸ் (Amaranthus) குடும்பத்தின் உறுப்பினர் தண்டுக்கீரை. இலைகளோடு சேர்த்துத் தண்டுகளும் உணவாகப் பயன்படும் ரகத்திலான கீரை இது. தண்டுக் கீரையின் தண்டுகளையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கூட்டு, பொரியல், சூப் என அசத்தலாம்.

சித்த மருத்துவம்: ‘தண்டுமெத்த வாய்வு தணியாத சீதளமாம்…’ எனத் தொடங்கும் அகத்தியர் குணவாகடப் பாடல், தண்டுக் கீரையை உணவு முறைக்குள் சேர்த்து வர,சிறுநீர்ப் பாதை சார்ந்த அறிகுறிகள், வெள்ளைப்படுதல், மூலம், வயிற்றுப் புண் போன்றவற்றுக்கு மருந்தாக அமையும் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.

உணவாக: பாசிப்பருப்பை வேகவைத்துத் தண்டுக் கீரை சேர்த்துச் சமைத்துப் பருப்புக் கீரைக் குழம்பாகச் சாப்பிட, உடலுக்கு ஊட்டம் கிடைக்கும். தேகத்திற்குப் பொலிவைக் கொடுத்துச் சுறுசுறுப்பை அதிகரிக்கும். வயிற்றுப் புண் இருப்பவர்கள் தண்டுக்கீரையை வாரம் ஒரு முறையாவது மசியல் செய்து சாப்பிட்டு வரலாம். தண்டுக் கீரையோடு நெய்யில் வறுத்த சீரகம் அல்லது சோம்பு, கூடவே வெங்காய வடகத்தைச் சேர்த்துத் தாளித்து உணவோடு பிசைந்து சாப்பிட மலம் முறையாக வெளியேறி செரிமான சிக்கல்கள் நிவர்த்தி அடையும்.

தண்டுக் கீரை சிற்றுண்டி: இலைகளைச் சிறு சிறு துண்டுகளாக அரிந்து அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, கீரை போண்டாவாக எண்ணெய்யில் பொரித்துச் சாப்பிடலாம். நலமான மாலை நேரச் சிற்றுண்டியாகப் பலன் தரும். குழந்தைகளுக்கும் கீரைகளின் சுவையான அறிமுகமும் கிடைக்கும்.

தண்டுக் கீரை ரசம்: கீரையோடு சேர்த்துத் தண்டுகளையும் சிறிது சிறிதாக நறுக்கி, தண்ணீரிலிட்டு மிளகு சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்துச் செய்த ரசத்தை உடல் சோர்வுற்றவர்களுக்கு ஊட்ட பானமாகக் கொடுக்கலாம். தனியாகத் தண்டுகளை மட்டும் பயன்படுத்தி தண்டு ரசமாகவும் சாப்பிடலாம்.

மண்பானை தண்டுக் கீரைக் கடையல்: தண்டுக் கீரை இலைகள் ஒரு கைப்பிடி, அதன் நறுக்கிய தண்டுகள் ஒரு கைப்பிடி, முருங்கைப் பூ இருபது, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி ஆகியவற்றை மண்பானையில் போட்டு, வாகை மரத்து விறகுகளை எரிபொருளாக்கி வேக வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு விட்டு, குறைவாக உப்பு சேர்த்து மர மத்தால் கீரை கடையும் பக்குவத்தில் கடைந்துகொள்ள வேண்டும். மதிய உணவுக்கு இந்தக் கீரைக் கடையலைச் சோற்றில் பிசைந்து சாப்பிட, உடலுக்கு மிகுந்த வலு உண்டாகும். திருமணமான இளம் தம்பதியினருக்கு வழங்கப்படும் கிராமத்துச் சிறப்பு உணவு இது. தண்டுக் கீரை, தாம்பத்திய வாழ்க்கையில் இருபாலருக்குமே இன்சுவை கூட்டும் ஒரு பசுமை வித்தகன்!

ஆய்வுக்களம்: உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், உயர் ரத்த அழுத்த நோயாளர்களும் தங்களுடைய உணவுத் தட்டில் அடிக்கடி இடம் கொடுக்க வேண்டிய கீரை இது. செரிமானப் பகுதிகளில் உருவாகும் புற்று நோய்க்குத் தண்டுக்கீரை தடுப்பாகச் செயல்படும் என்கிறது ஆய்வு. அதிகரித்த கொழுப்புச் சத்தின் அளவைக் கட்டுப்படுத்தவும் தண்டுக் கீரை உதவும். ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க, தண்டுக் கீரை அருமருந்து. பெண்களின் கருப்பைப் சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்லுணவாகத் தண்டுக் கீரை அமையும்.

நிற வேற்றுமை: வெண்கீரைத் தண்டு, செங்கீரைத் தண்டு என இரண்டு வகைகள் உள்ளன. அதாவது பச்சை நிறத்திலும் இளம் சிவப்பு நிறத்திலும் தண்டுக் கீரை கிடைக்கிறது. உடலில் உள்ள வெப்பத்தையும் எரிச்சலையும் குறைக்க, வெண் தண்டுக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம். கருப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு மருந்தாகும் உணவாகச் சிவப்பு நிறத் தண்டுக் கீரையைப் பயன்படுத்தலாம். மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் அதிக ரத்தப் போக்கைத் தடுக்க சிவப்பு நிறத் தண்டுக் கீரை பேருதவி புரியும். சிவப்புத் தண்டுக் கீரையில் கொஞ்சம் சுவை கூடுதலாக இருக்கும்.

கவனம் தேவை: உடலுக்குள் குளிர்ச்சியைப் பரப்பும் சீதளக் கீரை இது. மழைக்காலத்தில் குறைவாகவும் வெப்பம் தகிக்கும் கோடைக் காலத்தில் அதிக அளவிலும் சாப்பிடவேண்டிய கீரை வகை இது. கப நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கப தேகம் உடையவர்கள், மழை - குளிர் காலத்தில் இக்கீரையின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம். உப்பு போட்டுக் கழுவிய பிறகு கீரையைப் பயன்படுத்தலாம். கீரையின் வளர்ச்சியைப் பொறுத்துத் தகுந்த காலத்தில் அறுவடை செய்து பயன்படுத்தும்போதுதான் தண்டுகளில் நார்த்தன்மை சரியான அளவில் இருக்கும்.

பொதுவாகக் கீரைகள் அனைத்துமே விதைத்தது முதல் முப்பது நாள்களிலேயே விளைச்சலை வாரி வழங்கும். ஆனால், தண்டுக் கீரை விதைத்த மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்களில் பலன் தர வல்லது. நினைவாற்றலை வளர்ப்பது, மலச்சிக்கலைக் களைவது, கொழுப்புச் சத்தின் அளவை முறைப்படுத்துவது, வயிற்றுப் புண்களை விரைவில் குணமாக்குவது, மூல நோயின் தீவிரத்தைக் குறைப்பது எனப் பல நன்மைகள் தண்டுக் கீரை வழியே கிடைக்கும். தண்டுக் கீரையை உண்டவர்கள் மட்டுமே அதன் முழு நலக்கூறுகளை உளமார உணர முடியும்.

தண்டுக் கீரை, வலிமைக்கு உத்தரவாதம்!

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in