அறுவை சிகிச்சைக்குப் பிறகும் சைனஸ் தொடருமா?

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் சைனஸ் தொடருமா?
Updated on
2 min read

எனக்கு 69 வயதாகிறது. 1985-லிருந்து சர்க்கரை நோய் உள்ளது. ரத்தஅழுத்தமும் 1992-லிருந்து உள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கை, கால்களில் செதில் செதிலாக உரிந்துவருகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் ஏதாவது மருந்து உள்ளதா?

- எஸ்.ஹேமச்சந்திரன், புதுச்சேரி.

கையில் வரும் Palmo plantar psoriasis என்ற செதில் நோயைப் பற்றி கேட்டிருக்கிறார். இது தாதுபாகம் எனும் autoimmunity-யால் வருகிறது. இதற்கு ‘வைபாதிக குஷ்டம்' என்று இந்திய மருத்துவத்தில் பெயர். இதற்கு முதலில் குடல் மலசுத்தி செய்ய வேண்டும். ஒருவரின் குடலை நன்றாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப மலசுத்திக்கான மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

அதற்குப் பின் நன்னாரி முதலியவை சேர்ந்த சோணிதாம்ருதம் கஷாயம், நிசோத்தமாதி (மஞ்சள், திரிபலா சேர்ந்த) கஷாயம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். வெட்பாலைத் தைலம், ஊமத்தை இலையால் செய்த துர்தூர பத்ராதி தைலம் போன்றவற்றை வெளியே பயன்படுத்தலாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் காரம், புளி, உப்பு, எண்ணெய், தயிர், அசைவ உணவுகள், உளுந்து பலகாரங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

அதிமதுர எண்ணெயைக் கொண்டு மூக்கில் நஸ்யம் (மருந்தை மூக்கில் விட்டுச் செய்யப்படும் சிகிச்சை) செய்துகொள்ள வேண்டும். இடையிடையே மலசுத்தி செய்ய வேண்டும். கையில் உறை அணிந்துகொள்ள வேண்டும். கசப்பான காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய், கோரைக் கிழங்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட மோரைக் கொண்டு, தலையில் தாரை எனும் சிகிச்சை செய்ய வேண்டும். ஆழ்ந்த மனஅழுத்தத்தை இது குறைக்கும். நாட்பட இந்த நோய் குறையும். இவற்றின் மூலம் குறையாத நிலையில் பெருமருந்துகளாகிய சேரான்கொட்டை சேர்ந்த மெழுகுகள், சேரான்கொட்டை நெய் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சிறிய அளவில் பயன்படுத்தலாம்.

ஆயுர்வேத மருத்துவமனைகளில் நோயாளியை உள்நோய் சிகிச்சைப் பிரிவில் தங்க வைத்து மருந்து, நெய்களைக் கொடுத்து வாந்தி எடுக்கச் செய்தல், பேதிக்கு மருந்து கொடுத்தல், அட்டைப்பூச்சி விடுதல், ரத்தத்தை வெளியேற்றுதல் போன்றவற்றைச் செய்வார்கள்.

எனது அம்மாவுக்கு வயது 45. கடந்த 6 வருடங்களாக சைனஸ் தொந்தரவால் அவதிப்படுகிறார். மூக்கில் சதையும் வளர்ந்துள்ளது. சில நேரம் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது. இதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். எனது அம்மாவுக்கு அதில் விருப்பமில்லை. இதற்கு அறுவை சிகிச்சை செய்யாமல் வேறு மருத்துவம் உள்ளதா?

- எஸ்.இந்து, மின்னஞ்சல்

சைனஸ் பிரச்சினையைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். மூக்கிருந்தால் ஜலதோஷம் வரத்தான் செய்யும். பலரும் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அதற்குப் பிறகும் தும்மல் வருகிறது என்று சொல்கிறார்கள். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. நாம் நமது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக்கொண்டால் போதும்.

முதலில் நன்றாக சுவாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பிராணாயாமம் செய்ய வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும். நமது ஒவ்வாமைக்கு எது காரணமாக இருக்கிறதோ, அதைத் தவிர்க்க வேண்டும். பாலில் சிறிது திப்பிலி, மஞ்சள், தூதுவளை சூரணம் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். இந்து காந்தம் கஷாயம், அமிர்தா ரஜன்யாதி கஷாயம், இந்து காந்தக் கிருதம், வியோஷாதி வடகம் போன்றவற்றைச் சாப்பிடலாம். நீர்க்கோவை மாத்திரையை அரைத்து மூக்கைச் சுற்றிப் பற்று (பத்து) போடலாம்.

ராஸ்னாதி தூமம் என்று சொல்லக்கூடிய தூம வர்த்தி புகையை மூக்கினால் இழுத்து, வாயால் வெளிவிட்டால் மூக்கில் இருக்கிற அழுக்குகள் எல்லாம் சேர்ந்து வெளியேறும். அதன் பிறகு தும்பைத் தைலத்தைக் கொண்டு மூக்கில் நஸ்யம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் இந்த சுவாச நாளங்களில் பிராண சக்தியானது எல்லா இடங்களுக்கும் போய்ச் சேரும். கெட்ட நீர் வெளியே வரும். சதை கரையும்.

இதன் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சியவனபிராசம், ஷட்பல கிருதம் போன்ற மருந்துகளெல்லாம் உள்ளன. இதற்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க முடியும். உணவில் கபத்தை அதிகரிக்கும் இனிப்புப் பண்டங்கள், தயிர், மாவுப் பண்டங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in