

‘தனித்து ஒளிரும் கரும் பச்சை இலைகள், கண்களைக் கவரும் ஊதா மலர்கள், உருண்டை வடிவத்தில் செவ்விய பழங்கள், சிறு சிறு முட்களைக் கொண்டிருக்கும் முள்சூழ் தேகம்…’ என வித்தியாசமான அமைப்புடன் மழைக்காலங்களில் தானாக முளைத்து மிளிரும் கீரை தூதுவளை. சீன, தமிழ் மருத்துவத்தில் சிறப்பு வாய்ந்த கீரை தூதுவளை. உணவாகவும் மருந்துகளின் அடிப்படைப் பொருளாகவும் பயன்படும் மருத்துவக் கீரையாகத் தூதுவளை வழக்கத்தில் இருக்கிறது. வெண்ணிற மலர்களைக் கொண்ட வெண் தூதுவளை வகையும் உண்டு. கார்ப்புச் சுவை, சிறிதளவு கைப்புச் சுவையை உடலுக்கு வழங்கும் கீரை இது.
உணவாகப் பயன்படுத்தினால் நோய்களைத் தகர்த்தெறிவதற்கான வெப்பத்தையும் உடலுக்குச் சுறுசுறுப்பையும் தூதுவளை கொடுக்கும். ‘தூதுவளைக் கீரை உணவின் சுவையைக் கூட்டும்’ என்கிறது தேரையர் குணவாகடப் பாடல். ஆதலால், உணவில் விருப்பமில்லாமல் தவிப்பவர்கள் சாப்பிட வேண்டிய முதல் கீரை ரகம் இது. மழைக்காலத்தில் பாடாகப்படுத்தும் சளி, இருமலின் தீவிரத்தைக் குறைக்க தூதுவளை ரசம் விட்டுப் பிசைந்த சாதத்துக்குத் தொடு உணவாகத் தூதுவளை துவையல் போதும். காலத்துக்கேற்ற உணவு முறையில், மழைக்காலத்துக்கான உணவுப் பட்டியலில் முதன்மையாக இடம்பிடிக்க வேண்டிய கீரை தூதுவளை.
பெயர்க்காரணம்: ‘வேளை’ வகை தாவரத் தொகுப்பில் தூதுவளையும் முக்கிய உறுப்பினர் என்பதால், தூது‘வேளை’ என்கிற பெயரும் இருக்கிறது. அளர்க்கம், அளருகம், தூதளங்கீரை, தூது, கூதளம், சிங்கவல்லி, தூதுணை, தூதுவளம் ஆகிய வேறு பெயர்கள் தூதுவளைக்குச் சொந்தம். ‘சொலானம் டிரைலோபேடம்’ (Solanum trilobatum) என்பது தூதுவளையின் தாவரவியல் பெயர். சொலானேசியே (Solanaceae) தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.
சித்த மருத்துவம்: தூதுவளைக் கீரையைக் கடைந்து சுண்டை வற்றல் சேர்த்து வதக்கி உணவில் பிசைந்து சாப்பிட, வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கம் மறையும். தூதுவளை, ஆடாதோடை, சுக்கு, இம்பூரலோடு மேலும் சில மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் தூதுவளைக் குடிநீர் காய்ச்சலை உடனடியாகக் கட்டுப்படுத்தும் மருந்து. தூதுவளைக் கீரையைப் பயன்படுத்த காது சார்ந்த நோய்கள், இருமல், அரிப்பு, செரிமானக் குறைவு, உடல் வலி தீரும் என்கிறது ‘காதுமந்தம் காதெழுச்சி காசந்தினவுமதம்…’ எனும் சித்த மருத்துவப் பாடல். ‘தூதுவேளைக்கர்ப்பந் தொடு மேகமிரும லிற்குப் போதுமே மண்டலங் கொள்…’ எனும் வைத்தியக் குறள், பாதிக்கப்பட்ட செரிமானத்தைத் தூண்டி, நல்ல பசி உணர்வை உண்டாக்குவதோடு இருமலுக்கான மருந்தாகவும் தூதுவளைக் கீரையை உபயோகிக்கலாம் என்பதற்குச் சான்றாக அமைகிறது.
தூதுவளைக் குழம்பு: தூதுவளை இலைகளைச் சிறிதாக நறுக்கித் தனியாக வேகவைத்த துவரம் பருப்பு, மிளகு, சின்ன வெங்காயத்தோடு கூட்டிக் குழம்புப் பதத்தில் செய்து, சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட உடல் வலி, தலைபாரம், வயிற்று உப்புசம், மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
தூதுவளை நெய்: தூதுவளைக் கீரையோடு சுக்கு, மிளகு, திப்பிலி, கண்டங்கத்தரி, அக்கிரகாரம், ஏலம், கிராம்பு, ஓமம் மேலும் சில மூலிகைகள், பால், நெய் சேர்த்து மருந்தாகத் தயாராகும் தூதுவளை நெய், நாள்பட்ட இருமலுக்கும் இரைப்பு (ஆஸ்துமா) நோயாளர்களுக்கும் சிறப்பான பலன் கொடுக்கும். வீட்டில் நெய் காய்ச்சும்போது தூதுவளை இலைகளைப் பொரியவிட்டுக் காய்ச்சி எடுக்க, நெய்யில் தூதுவளையின் மருத்துவ சாரங்கள் விரவிப் பரவும்.
தூதுவளை ரசம்: இலைகளைத் துண்டுதுண்டாக நறுக்கித் தண்ணீரில் போட்டு மிளகு, பூண்டு, சீரகம், சிறிது பட்டை சேர்த்து உருவாக்கப்படும் சூப், மழைக்கால நோய்களுக்குத் தடுப்பாக அமையும். ஆடாதோடை, தூதுவளை இலைகளைச் சேர்த்து இடித்து ஆவியில் வேகவைத்துப் பிழிந்த சாறில் தூள் செய்த மிளகு, கோஷ்டம், திப்பிலி கலந்து கொடுக்க சளி, இருமல் தீரும். கிராமங்களில் குளிர்காலத்துக்கான முக்கிய மருந்து இது.
உலர்ந்த தூதுவளைக் கீரையின் பொடியோடு கீழாநெல்லிப் பொடியையும் சேர்த்துப் பனைவெல்லம் கூட்டிச் சாப்பிட உடல் சோர்வு நீங்குவதோடு கணீர்க் குரல் கிடைக்கும்.
ஆய்வுக் களம்: ஒவ்வாமையை உண்டாக்கும் பல்வேறு நுணுக்கமான காரணிகளைத் தடுப்பதால், ஆஸ்துமா, தோல் நோய்களுக்கான நேரடி மருந்தாகத் தூதுவளை செயல்படுகிறது. ஆஸ்துமா நோயாளர்களில் தூதுவளையின் சாரங்களைப் பயன்படுத்தி நுரையீரல் செயல்பாட்டை அளவீடு செய்தபோது நல்ல முன்னேற்றம் கிடைத்ததாக ஆய்வுகள் பதிவிடுகின்றன. பல காரணங்களால் சிறுநீரக செல்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தூதுவளைத் தடுக்க உதவுகிறதாம். உடலுக்குள் ஏற்படும் நுண்ணிய காயங்களைத் தடுக்கும் திறனும் தூதுவளைக் கீரைக்கு உண்டு.
கிராமத்து மொழி: ‘கொடி முள்ளு நாலும் கபத்தை அறுக்கும்’ எனும் பழமொழி, தாவரங்களின் வளரியல்பையும் நோய்க்கான தீர்வையும் நுணுக்கமாகச் சுட்டுகிறது. அவ்வகையில் தூதுவளை, கழற்சி, ஆதொண்டை, இண்டு ஆகிய நான்கு மூலிகைகளும் முள்களுடன் கூடிய கொடியேறும் வகையைச் சார்ந்தவை. இந்த முள்ளுக் கொடிகள் நான்கும் சளி, இருமல், தலைபாரம் போன்ற கபம் சார்ந்த பிரச்சினைகளைக் குறைக்கும் என்பதற்குப் புதுமையான விளக்கம் அளிக்கிறது பழமொழி!
கையாளும் முறை: தேவையான தூதுவளைக் கொடிகளைக் கத்தரித்து எடுக்க வேண்டும். பிறகு இலைகளைத் தனியாகக் கத்தரித்துக்கொண்டு அவற்றில் உள்ள முள்ளை வெட்டி எடுத்த பின் பயன்படுத்துங்கள். சேகரித்த கீரையை நெய் அல்லது நல்லெண்ணெய்யில் லேசாக வதக்கிய பிறகு சமையலுக்கு உபயோகிக்கலாம். தூதுவளைக் கீரையை அனைத்துப் பருவக் காலங்களிலும் பயன்படுத்த, அதன் இலைகளை நிழலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். காய்கறிச் சந்தைகளிலும் தூதுவளைக் கீரை கிடைக்கிறது.
முள்ளை எடுக்க வேண்டுமே என்று சிரமப்பட்டுக்கொண்டு தூதுவளைக் கீரையை ஒதுக்குபவர்கள் பலர். ஆனால், சிறிது நேரம் ஒதுக்கி, தூதுவளையை அடிக்கடி உணவாகப் பயன்படுத்தினால் குளிர் - மழைக்காலத்துக்கான நோய்ப் பாதுகாப்பு அரண் இலவசமாகக் கிடைக்கும்.
தூதுவளை, உணவாகும் மருந்து!
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com