

கொழுப்புக் கல்லீரல் (Fatty Liver) ஏன் ஏற்படுகிறது, டாக்டர்? அதை உணவின் மூலமாகச் சரிசெய்ய வாய்ப்புள்ளதா? - டி. உமாராணி, ராஜபாளையம்.
கல்லீரலில் கொழுப்பு ’கூடு’ கட்டுவதைக் கொழுப்புக் கல்லீரல் என்கிறோம். இதில் இரண்டு வகை உண்டு. மது அருந்துவதால் ஏற்படுவது ஒரு வகை (Alcoholic Fatty Liver). இது ஆண்களுக்கு வருகிறது. மது அருந்தாதவர்களுக்கு ஏற்படுவது அடுத்த வகை (Non-Alcoholic Fatty Liver). இது பெரும்பாலும் பெண்களுக்கு வருகிறது. இதற்கு அவர்கள் சாப்பிடும் அதீத சர்க்கரையும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்தாம் முக்கியக் காரணம். அதிலும், உடல் உழைப்பும் இல்லாமல் உடற்பயிற்சியும் செய்யாமல், அரிசி உணவையும் அதிகக் கொழுப்புள்ள உணவையும் சாப்பிடுவது காலப்போக்கில் ஆல்கஹால் அல்லாத கொழுப்புக் கல்லீரல் பிரச்சினைக்கு விதை போடும். தம் வாழ்நாளில் மதுவை ஒருமுறைகூடத் தொடாதவருக்கும் கொழுப்புக் கல்லீரல் வருவது இப்படித்தான்.
இது வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்? மதுவை மறக்க வேண்டும். உடல் எடையைப் பேண வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும். வறுத்த, பொரித்த உணவு அளவோடு இருக்கட்டும். அரிசி உணவு, மைதா கலந்த பேக்கரி பண்டங்கள், செந்நிற இறைச்சி, துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு, உடனடி உணவு, குளிர்பானங்கள், செயற்கை இனிப்பு ரகங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நொறுக்குத் தீனிகளை ஓரங்கட்ட வேண்டும். சிறுதானிய உணவு வகைகளையும் புரத உணவு வகைகளையும் அதிகப்படுத்த வேண்டும். கொழுப்பு உணவை மொத்தமாக ஒதுக்க வேண்டியதில்லை. இறைச்சியைக் குழம்பாக்கிச் சாப்பிடலாம். முட்டை சேர்க்கலாம். மீன் நல்லது. கீரைகள், பழங்கள், காய்கறிகளைத் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம். 6 - 8 மணி நேரம் இரவுத் தூக்கம் தேவை. இவ்வளவும் சரியாக இருந்தால் கொழுப்புக் கல்லீரலுக்கு நம் உடலில் இடமில்லை.
என் மகனுக்கு ஒன்பது வயது. அவனுக்குக் கைவிரல் சூப்பும் பழக்கம் உள்ளது. அதை நிறுத்துவதற்கு நானும் சில வழிமுறைகளை மேற்கொண்டேன். ஆனால், அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. கைவிரல் சூப்புவது விபரீதமான பழக்கமா? விரல் சூப்பும் பழக்கம் ஏன் வருகிறது? அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? - சந்தன பாரதி கார்த்திகேயன், மின்னஞ்சல்.
குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கியக் காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று அது உணர்வதுதான். பெற்றோரிடம் தேவையான அன்பு, பாதுகாப்பு, பராமரிப்பு கிடைக்காதபோது இந்தப் பழக்கம் குழந்தையிடம் நீடிக்கிறது. ஏதாவது ஒரு வழியில் மன அழுத்தம் இருந்தாலும் அதற்கு ஒரு வடிகாலாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். சில குழந்தைகள் பசிக்கும்போதும், தூக்கம் வரும்போதும் இந்தப் பழக்கத்தைக் கைக்கொள்ளும். பெற்றோர் அடிக்கடி சண்டை போடுவார்கள் என்றால், அவர்களின் குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் ஏற்பட அதிகச் சாத்தியமுண்டு. குழந்தை வளர்ந்த பிறகும் இது நீடித்தால் பற்களில் இடைவெளி விழும். பற்கள் வெளியே நீட்டிக்கொள்ளும். இது தாழ்வுமனப்பான்மைக்கு வழிவிடும்.
கிருமித்தொற்று ஏற்படவும்கூடும். விரல்களில் சூடுபோடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான வழிமுறைகளை எப்போதும் பயன்படுத்தாதீர்கள். அது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவதற்குச் சமம். விரல் சூப்பும் குழந்தையின் கவனத்தைத் திருப்பப் பாருங்கள். பொம்மையைக் கொடுத்தல், புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், இசைக் கருவி வாசித்தல் என வயதுக்கு ஏற்ப விரல்களுக்கு வேலை கொடுங்கள். விரல் சூப்பாத நேரத்தைக் குறிப்பிட்டுச் சிறு பரிசு கொடுத்துப் பாராட்டுங்கள். இப்படியான உளவியல் மாற்றுவழிகளில் குழந்தையை ஈடுபடுத்தினால் சிறிது சிறிதாக அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். அப்படியும் விடுபடவில்லை என்றால் குழந்தை நல மருத்துவரிடம் காண்பித்து, சில மருந்துகளை வாங்கிக் குழந்தையின் விரல்களில் தடவலாம். பலன் கிடைக்கும். அப்போதுகூட உளவியல் வழிமுறைகளையும் தொடர வேண்டும்.
பாமாயில் நம் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் செய்யும் என்கிறார்கள். அது உண்மையா, டாக்டர்? - ராமசாமி தனசேகர், மின்னஞ்சல்.
உண்மைதான். பனை எண்ணெய்யில் பால்மிட்டிக் அமிலம் (Palmitic Acid) உள்ளது. இது நிறைவுற்ற கொழுப்பு அமிலத்தைச் (Satutrated Fatty Acid) சார்ந்தது. பொதுவாகவே, எந்தவொரு நிறைவுற்ற கொழுப்பும் இதயத்துக்கு ஆபத்தைத் தரக்கூடியதுதான். அதிலும் உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாமல் இந்த மாதிரியான கொழுப்புள்ள உணவு வகைகளைச் சாப்பிடும்போது இதயத்துக்கு ஆபத்து 18% அதிகரிப்பதாக 2016இல் அமெரிக்க ஆய்வு ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து, இது உடற்பருமனுக்கும் காரணமாகிறது. அப்போது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை (Insulin resistance) அதிகரித்து, நீரிழிவு ஏற்படவும் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. பாமாயில் விலை குறைவு என்பதாலேயே அதைப் பலரும் பயன்படுத்துகின்றனர். மிகக் குறைந்த அளவில் இதைப் பயன்படுத்தினால், மேற்சொன்ன ஆபத்துகளையும் குறைக்கலாம்.
எனக்கும் என் மனைவிக்கும் காய்ச்சல், ஜலதோஷம், சளி, இருமல் வந்தது. ஒரு வாரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், சளி எல்லாமே சரியாகிவிட்டது. ஆனால், இருமல் மட்டும் இரண்டு வாரங்களாகப் படுத்துகிறது. என்ன காரணம், டாக்டர்? இதற்கு என்ன செய்யலாம்? - எல். மாதவன், திருச்சி-1
பொதுவாக, மழைக்காலத்தில் ஃபுளூ காய்ச்சல் பரவும். இன்ஃபுளூயென்சா வைரஸ் தாக்குவதால் இது ஏற்படுகிறது. காய்ச்சலும் சளியும் குணமானாலும் வறட்டு இருமல் மட்டும் 3 – 4 வாரங்கள் வரை நீடிக்கிறது. இப்போது பரவும் வைரஸ் வழக்கத்துக்கு மாறாக பாதிக்கப்பட்டவரின் நுரையீரலில் அதிக அளவில் அழற்சியை ஏற்படுத்தி, அங்கு திரவம் சேர வழி (Congesion) செய்கிறது. அடுத்து, மேல் மூக்கிலிருந்து சளித் திரவம் தொண்டைக்கு வந்து (Postnasal drip) உறுத்தும்போதும் இருமல் வரும். ஒவ்வாமை, ஆஸ்துமா இளைப்பு உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, இரைப்பை - உணவுக்குழாய் - அமிலப் பின்னொழுக்கு நோய் (GERD) இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை அதிக நாள்களுக்கு நீடிக்கிறது. வழக்கத்தில், இந்த வகை இருமல் சில வாரங்களில் தானாகவே சரியாகிவிடும்.
ஆனாலும், அதுவரை இருமலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பலருக்கும் இருமல் மருந்துகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.இருமல் மருந்துகளில் பல வகை உள்ளன. மருந்துக்கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கிச் சாப்பிட்டால் அது சரிப்படாது. மருத்துவரிடம் சென்று, காரணம் தெரிந்து மருந்து சாப்பிடுவதே நல்லது. இருமல் உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது தொற்று பரவுவதைத் தடுக்கும். அவசியம் செல்ல வேண்டும் என்றால் முகக் கவசம் அணிந்து கொள்ளவும். குளிர்ச்சியான இடங்களுக்குச் செல்வதையும், ஏசி அறையில் தங்குவதையும் தவிர்க்கலாம். அடிக்கடி இளம் வெந்நீரைப் பருகலாம். நீராவி பிடிக்கலாம். அழற்சி அமர்த்திகளை (Lozenges) வாய்க்குள் ஒதுக்கிக்கொள்ளலாம். மூக்கில் தெளிக்கப்படும் மருந்துகளையும் (Nasal spray) வாய் வழி உறிஞ்சப்படும் மருந்துகளையும் (Inhalers) பயன்படுத்தலாம். அதிகம் பேசுவதைத் தவிர்க்கலாம்.
காய்ச்சல் இருக்கும்போது குளிக்கக் கூடாது என்கிறார்களே, ஏன் டாக்டர்? - க. லிங்கம், பொன்னமராவதி.
கடுமையான காய்ச்சல் இருக்கும்போது பயனாளியின் உடலில் சக்தி குறைந்திருக்கும். இந்த நிலையில் குளிக்கும்போது இன்னும் கொஞ்சம் சக்தி அவருக்குக் குறைந்துவிடும். பொதுவாக, உடலில் சக்தி குறையாமல் பார்த்துக்கொண்டால்தான், காய்ச்சல் விரைவில் குணமாகும். மேலும், அதிகச் சூடான அல்லது அதிகம் குளிர்ந்த தண்ணீரிலும் ஷவரிலும் குளிக்கும்போது திடீரென்று உடலின் வெப்பநிலை மாறும். இதனால், உடல்நிலை சீர்கெடக்கூடும். அதற்குத்தான் காய்ச்சலின்போது குளிக்கக் கூடாது என்கிறார்கள். என்றாலும், தண்ணீரில் நனைத்தத் துணியால் உடலைச் சுத்தப்படுத்திக்கொள்ளலாம், தவறில்லை.
- gganesan95@gmail.com