கர்ப்பிணிகளின் உணவில் கவனம் தேவை!

கர்ப்பிணிகளின் உணவில் கவனம் தேவை!
Updated on
3 min read

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமானது ஊட்டச்சத்துள்ள உணவு. ஆனால், சில கர்ப்பிணி களுக்கு ஊட்டச்சத்துள்ள பொருள்களைக் கொடுத்தாலும் ஆரோக்கியமான மகப்பேற்றுக்கு அவை உதவுவது இல்லை. கர்ப்ப காலத்திற்கு முன்பிருந்தே ஊட்டச்சத்து குறைபாட்டோடு சத்தற்ற நிலையில் அவர்கள் இருப்பதுதான் இதற்குக் காரணம். பெண்கள் கர்ப்பம் அடைவதற்கு முன்பே அவர்களது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். உதாரண மாக பெண்களின் உடல் எடை, ஹீமோகுளோபின் அளவு (HB), கால்சியச் சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தற்காலத்தில் பெண்களின் உடல் எடையை இருவிதமாகப் பிரிக்கலாம். ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு (உடல் எடை குறைவு), மற்றொன்று ஊட்டச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிட்ட தால் ஏற்படும் உடல் பருமன். இந்த இரண்டு நிலைகளிலும் பெண்களுக்கான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

உடல் எடை சீரமைத்தல்: உடல் எடைக் குறியீட்டில் 18.5–24.9 (56-76 கிலோ) எடையானது கர்ப்பிணிகளுக் கான சரியான அளவாகக் கூறப்படுகிறது. அதைவிட எடை குறைவாக இருப்பதால் போதிய ஊட்டச்சத்து இன்றி கருச்சிதைவு, குறைமாத பிரசவம், உடல் எடை குறைவான குழந்தை ஆகிய சிக்கல்கள் ஏற்படலாம். உடல் எடை அதிகரித்த பெண்கள் கருத்தரிக்கும்போது கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல், கர்ப்ப கால சூல் வலிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாகும். இவையின்றிக் கர்ப்ப கால உடல் எடை அதிகரிப்பு 10-12 கிலோவுக்குள் இருப்பது சிறந்தது. இதைவிடக் கூடுதலாக உடல் எடை அதிகரிக்கும்போது ரத்த அழுத்தம் அதிகரித்தல், சூல் வலி ஆகியன உண்டாகலாம். சரியான உடல் எடையைப் பராமரிக்க உணவுப் பொருள்கள் மட்டுமன்றி உடற் பயிற்சியும் தேவைப்படுகிறது. பெண்கள் வீட்டு வேலைகளோடு மிகவும் எளிதான, லகுவான பயிற்சிகளை மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

என்னென்ன உணவு வகைகள்? - உணவுப் பொருள்களில் பெண்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியது புரதச்சத்தே. இத்துடன் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்துகள் போதிய அளவு இருப்பது அவசியம். மேலும் கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் உள்ள உணவுப் பொருள்களையும் ஈஸ்ட்ரோஜனை நடுநிலைப்படுத்தும் உணவு வகை களையும் பெண்கள் சாப்பிட வேண்டும். இந்தப் பொருள்களின் அளவுகள் உணவுப்பொருள்களில் குறைந்தாலும், ஊட்டச்சத்து இல்லாத துரித உணவு வகைகள், இயற்கையாக உற்பத்தியாகும் சினைமுட்டைவரை பாதிப்பை உண்டாக்கி விடுகின்றன. பெண்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவது இரும்புச்சத்து சார்ந்துதான். அதற்கு அடுத்ததாக விட்டமின் டி குறைபாடு பரவலாகக் காணப்படுகிறது.

விட்டமின் டி பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள ஒவ்வோர் உறுப்பின் செயல்பாட்டையும் சீரமைக்கிறது. உதாரணமாகப் பெண்களின் இனப் பெருக்க உறுப்பான சினைப்பையில் கருமுட்டைகளை முதிர்ச்சியடையச் செய்து அதில் ஹார்மோன் (ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரான்) உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும், கருப்பையில் சினைமுட்டை வெளிப்பட்ட பிறகு கரு தங்குவதை ஊக்கப்படுத்துகிறது. விட்டமின் டி ஆண்களின் இனப் பெருக்க உறுப்புகளிலும் விந்தணு உருவாக்கம், விந்தணு இயக்கம் போன்ற வற்றை அதிகப்படுத்துகிறது. எனவே விட்டமின் டி3 எலும்புச் சத்துக்காக மட்டுமன்றி கருத்தரித்தல், கரு நிலைத்திருத்தல் ஆகிய பணியையும் மேற்கொள்கிறது.

கர்ப்ப காலமும் தைராய்டு அளவும்: கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பு. தைராய்டு அளவில் மாற்றம் ஏற்படும்போது கர்ப்ப காலத்தில் வலிப்பு, நஞ்சுக்கொடி பிரிதல், குழந்தை எடை குறைவாகப் பிறத்தல், குழந்தை உயிரிழப்பு போன்ற பல சிக்கல்களுக்குக் காரணமாகிவிடுகிறது. தைராய்டு சுரப்பி கர்ப்ப காலத்தில் என்ன நன்மை செய்கிறது என்றால், கருவுற்ற முதல் இரண்டு மாதங்களில் தாயிடமிருந்து கிடைக்கும் தைராய்டு ஹார்மோன்களே நஞ்சுக்கொடி வழியாகக் கருவுக்குக் கடத்தப்படும். தைராய்டு சுரப்பியின் ஹார்மோன்களில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

தைராய்டு சுரப்பியும் ஊட்டச்சத்தும்: அயோடின் உப்புச் சத்து குறைவால் தைராய்டு சுரப்பியில் மாற்றம் பெரு மளவில் உண்டாகலாம். அது மட்டுமன்றி இரும்புச் சத்து, துத்தநாகம், செலீனியம் போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டாலும் பொதுவாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் தைராய்டு சுரப்பியின் அளவில் மாற்றம் ஏற்படும். அதிக அளவு சர்க்கரை, அது கலந்த பண்டங்களை எடுத்துக்கொள்ளும்போது செரிமான உறுப்புகளைப் பாதிக்கும். மேலும், வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவை (Probiotics) அழிக்கிறது. இதன் விளைவாக ஹார்மோன்களில் மாற்றம் உண்டாகிறது.

இதையடுத்துப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், Cruciferous குடும்ப காய்கறிகளில் இயற்கையாகவே அதிக அளவு Goitrogens இருப்பதால் இது T4 (Thyroxine) இன் உறிஞ்சும் தன்மையைக் குறைத்து, தைராய்டு ஹார்மோன்களுக்கு இடையூறாக இருக்கும். இந்த உணவுப் பொருள்களால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு தைராய்டு சுரப்பியை மட்டுமன்றி மற்ற எல்லா நாளங்களின் சுரப்பையும் பாதிக்கிறது. இவ்வாறு உணவு பொருள்களால் உடலுக்கு உண்டாகும் மாற்றத்தைக் கவனிக்காமல் கருத்தரிக்கும்போது, அது குழந்தையையும் பாதிக்கிறது.

மேலும், அன்றாடம் உண்ணும் உணவுப் பொருள்களுடன் இஞ்சி (ஜிஞ்சரால் எனும் வேதிப்பொருள் கருப்பையில் கரு புதைந்து வளர ஊக்குவிக்கிறது), அதிமதுரம், விளாம்பிஞ்சு (உடலில் உள்ள உப்புச் சத்துக்களை சமநிலையில் வைக்கிறது), திராட்சை (கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ளும் பழம் குழந்தைக்கு நரம்பியக்கக் கடத்திகளைச் சீரமைத்து மன அழுத்தத்திற்கு எதிராகச் செயல்படும்), அல்லி, தாமரை இதழ்கள் (கருப்பையில் கரு பதியும்போது ஏற்படும் அதிக அளவு ரத்தப்போக்கை நிறுத்துகிறது) ஆகிய அனைத்தையும் சித்த மருத்துவரின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்வது சிறந்தது.

மேலும், அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மகப்பேறு சஞ்சீவிப் பெட்டகம் உறுதுணையாக இருக்கும். ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள் களைச் சாப்பிடாமல் இருப்பதைக் காட்டிலும் உடலுக்குத் தீங்கு தரும் துரித உணவு வகைகள், பதப்படுத்தப் பட்ட உணவு வகைகள் போன்றவை உடல் உபாதைகளை உண்டாக்கி உடலை நலிவடையச் செய்யும். அதனால் அவற்றை முற்றிலும் தவிர்ப்பது சாலச் சிறந்தது. மகப்பேற்றை நோயைப் போல அணுகாமல் இயல்பான ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ள ஊட்டச்சத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சத்துள்ள உணவு வகைகள்:

* தண்டுக் கீரை, முருங்கைக் கீரை, பாதாம், வால்நட்,பேரீச்சை, சோயா பீன்ஸ், பாசிப்பருப்பு, முழு கறுப்பு உளுந்து, பூசணி விதைகள், ஆளி விதை,கோழி கல்லீரல், மீன், நண்டு ஆகியவற்றில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.
* கம்பு,கோதுமை, பார்லி, பெர்ரி, எள் விதை, அக்ரூட் பருப்பு, வேர்க்கடலை, பெருஞ்சீரகம், பூண்டு ஆகியவற்றில் கால்சியம் நிறைந்துள்ளது.
* பால் பொருள்கள், வெந்தயம், கேழ்வரகு, பப்பாளி, அன்னாசிப் பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சு, மத்தி மீன் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அளவை நடுநிலைப்படுத்தும்.

- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; gayathri6vivek@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in