

ஆற்றங்கரை, ஏரிப்பாசனப் பகுதிகள், வாழைத் தோட்டம், தென்னந்தோப்பு போன்ற நீர் நிலைத்திருக்கும் பகுதிகளில், அழகிய கீரை ஒன்று தனித்துவமாகக் காட்சிதருவதை கிராமத்துக் காட்சிகளை ரசிப்பவர்கள் கவனித்திருக்கலாம்! அந்த அழகிய கீரையின் பெயர் வல்லாரை! வித்தியாசமான வடிவம் கொண்ட இலைகளை மெல்லிய தண்டுகள் தாங்கிப் பிடித்திருக்க, படர்கொடியாக வல்லாரை ஊர்ந்து பரவும்போது, மருத்துவ குணங்களையும் தன்னோடு சேர்த்து சுமந்து செல்கிறது.
சுவைத் தத்துவம்: அறுசுவைகளில் முச்சுவைகளைத் தன்னகத்தே பொதித்து வைத்துள்ள தனித்துவமிக்க கீரை வல்லாரை. கொஞ்சம் கசப்பு, கொஞ்சம் துவர்ப்பு, கொஞ்சம் இனிப்பு என மூன்று சுவைகளின் மருத்துவக் குணங்களையும் ஒருங்கிணைத்து வழங்கும் கீரை இது. செரிமானத் திற்குப் பிறகு முச்சுவைகளில் இனிப்புச் சுவை யின் குணங்களை வல்லாரை உடலுக்குப் பரிசாக வழங்கும் என்கிறது சித்த மருத்துவம்.
உலகாளவிய உணவுமுறை: நிலக்கடலை, வெங்காயம், எலுமிச்சை சாறுடன் வல்லாரைக் கீரை சேர்த்துத் தயாரிக்கப்படும் சாலட் ரகம், பர்மிய உணவுக் கலாச்சாரத்தில் பிரசித்தி பெற்றது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, சீனா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் வல்லாரை மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகிறது. பலாப் பழக் குழம்புக்கு தொடு உணவாகவும், காய்ச்சல் கஞ்சியில் முக்கிய உறுப்பாகவும் வல்லாரைக் கீரை இலங்கையின் சில பகுதிகளில் சுவை பரப்புகிறது.
பெயர்க்காரணம்: சண்டகி, பிண்டீரி, யோசனவல்லி ஆகிய வேறு பெயர்களை உடையது வல்லாரை. அறிவுக்கூர்மையை அளிக்கும் கீரை என்பதால் ‘யோசனை’ என்கிற பெயரும், தாவரத் தின் வளரியல்பு படர்கொடி என்பதால் ‘வல்லி’ என்கிற பெயரும் இணைந்து ‘யோசனவல்லி’ என்று பெயர்பெற்றிருக்கிறது. இலைகளில் அவ்வளவாக சாரமில் லாத தன்மை யால் ‘பிண்டீரி’ என்று பெயர் உருவாகி இருக்கலாம். Centella asiatica எனும் தாவரவியல் பெயர் கொண்ட வல்லாரையின் குடும்பம் Apiaceae.
உணவில்: வல்லாரைக் கீரையைச் சமைத்து மிளகுத் தூள் தூவிச் சாப்பிட, செரிமானம் அதிகரிக்கும். தோல் நோய்களின் தீவிரத் தைக் குறைக்க, வல்லாரைக் கீரையோடு பூண்டு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட லாம். வயிற்று வலி ஏற்படும்போது, வல்லாரைக் கீரையோடு சீரகம் சேர்த்து மசித்துப் பனைவெல்லம் கலந்து சாப்பிட, உடனடிப் பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரையைத் தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, தேங்காய்ப் பாலில் பூண்டு சேர்த்து வேகவைத்து சாப்பிட வயிற்றுப் புண்களின் தீவிரம் குறையும்.
வல்லாரைக் கீரையோடு மணத்தக்காளி வற்றல் சேர்த்துச் சாப்பிட, வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கம் தடைபடும். வல்லாரைக் கீரையோடு அதிமதுரம், திப்பிலி, ஆடாதோடை, கடுக்காய் சேர்த்து தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து குடிநீர் போலத் தயாரித்துப் பருக தொண்டைக் கரகரப்பு சட்டென விலகும்.
ஆய்வுக்களம்: ‘வல்லாரைன்’ (Vallerine) எனும் வேதிப் பொருள் வல்லாரையின் மெல்லிய கசப்புத் தன்மைக்கு காரணகர்த்தா! இதிலுள்ள செண்டெலோசைடு, ரத்த குழாய் சார்ந்த சிக்கல்களில் எப்படி தீர்வளிக்கிறது என்கிற அடிப்படையில் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. காயம் ஏற்பட்ட இடத்தில் சில மாற்றங்களை நிகழ்த்தி விரைவாக காயத்தைக் குணமாக்க, வல்லாரைக் கீரையில் உள்ள ஏசியாடிகோசைடு காரணமாகிறது.
சித்த மருத்துவம்: ‘அக்கரநோய் மாறும் அகலும்…’ எனத் தொடங்கும் தேரையர் கரிசல் பாடல் வாய்ப்புண், பேதி, வயிற்றுவலி போன்றவற்றுக்கு வல்லாரை சிறப்பான பலன்களை அளிக்கும் என்பதை விளக்குகிறது. மாதவிடாய் சிக்கல்களை அவிழ்க்கும் சிறப்புவாய்ந்த கீரை வல்லாரை. சிறுநீரைப் பெருக்கி, உடலுக்கு ஊட்டமளிக்கும் சத்துக் கீரை ரகம் இது. சித்த மருத்துவத்தின் சிறப்புகளுள் ஒன்றான குழந்தை மருத்துவத்தில் வல்லாரையின் பங்கு முக்கியமானது. குழந்தைகளுக்கு உண்டாகும் செரிமான உபாதைகளுக்கு வல்லாரை எண்ணெய் முக்கிய மருந்து. குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ப கீரையை உளுந்து மாவுடன் சேர்த்து வித்தியாசமான தின்பண்ட ரகங்களாக உருவாக்கிக் கொடுக்கலாம்.
‘வல்லாரை வெல்ல வல்லாரை உண்க’ எனும் சொலவடை, உடலுக்கு வலிமை அளிக்கும் வல்லாரையின் தன்மையைப் பொருத்தும், மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் அதன் குணத்தை சார்ந்தும் உருவாகி இருக்கலாம். குடிவெறி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் வல்லாரைக் கீரையைச் சேர்த்து வரலாம். அக்காலத்தில் புண்களுக்குத் தூவும் மருத்துவப் பொடியில் உலர்ந்த வல்லாரை இலைப் பொடி சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வல்லாரை நெய்: வல்லாரைக் கீரையைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, நெய் சேர்த்து அதில் ஏலக்காய், சுக்கு, சாதிக்காய், விலாமிச்சம் வேர், சீரகம், வெட்டிவேர், சந்தனம், வில்வம், அக்கிரகாரம், தனியா, மேலும் சில மூலிகைகளின் உதவியுடன் நெய் வடிவமாகக் காய்ச்சி தயாரிக்கப்படும் வல்லாரை நெய், சுவாச நோய்களுக்கான நெய்ப்பான சித்த மருந்து. பல்வேறு சித்த மருந்துத் தயாரிப்புகளில் வல்லாரைக் கீரை யின் சாறு பயன்படுகிறது. உலர்ந்த வல்லாரை சூரணமும் மருத்துவக் குணம் நிறைந்தது.
எப்படித் தேர்ந்தெடுப்பது? - வல்லாரைக் கீரையில் தனியாக யாரும் வேதித் தாக்குதல் நிகழ்த்துவது இல்லை. இருப்பினும் வேதித் தாக்குதலுக்கு ஆள்படும் இடங்களில் வல்லாரைக் கீரை இயற்கையாக முளைப் பதற்கு வாய்ப்புகள் இருப்பதால், கீரையை நன்றாக கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். இலைகள் பறிக்கப்பட்ட பிறகு வல்லாரைத் தண்டுகளை வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளரச் செய்யலாம். விதை அங்காடிகளில் கிடைக்கும் விதைகளை விதைத்தும் இந்தக் கீரையை வளர்க்கலாம். வல்லாரையின் வளர்ச்சிக்குத் தண்ணீர் வளம் மிகவும் முக்கியம்.
- கட்டுரையாளர் . அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com