

எனக்கு ஒரு மாதமாக வாயுத் தொந்தரவு உள்ளது. மேலும், சிறிதளவு காரமான உணவு சாப்பிட்டாலும் வயிற்றில் எரிச்சல் உள்ளது. வலது பக்கம் மேல் வயிறு வலி மிதமாக உள்ளது. தொப்பை இருப்பதால் அதைக் குறைக்க பெல்லி உடற்பயிற்சி இரண்டு நாள் செய்தேன். அது முதல் வலி அதிகரித்தது. அதனால், இப்போது உடற்பயிற்சி செய்வதில்லை. தேங்காய்ப் பால் போன்ற உணவு சாப்பிட்டால் வலி சுமாராக இருக்கிறது. வயிற்றில் புண் இருந்தால், வயிறு தொடர்பான உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாதா? செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? - விஜயகுமார், திருவள்ளூர்.
உங்களுக்கு 'இரைப்பை அழற்சி' (Gastritis) இருக்க அதிக சாத்தியம் இருக்கிறது. இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக (Peptic ulcer) மாறிவிடும். மருத்துவரின் நேரடி ஆலோசனைப்படி சில மாத்திரை, மருந்துகளைச் சில வாரங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, உங்கள் வாழ்க்கைமுறையில் கவனம் செலுத்துங்கள். அப்போதுதான் உங்கள் வயிற்றுப் பிரச்சினை சரியாகும். முதலில் நேரத்துக்கு உணவு சாப்பிட வேண்டும். அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது. சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான்மசாலா பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். புளித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள். மென்பானங்களையும் குளிர்பானங்களையும் முடிந்த அளவு தவிர்க்கப் பாருங்கள். காபி, தேநீர் அருந்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். வயிற்றில் புண் இருந்தால், வயிறு தொடர்பான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது என்பதில்லை. உங்களுக்கு வயிற்றில் வலி இருக்கும் நேரத்தில் மட்டும் உடற்பயிற்சிகளைச் செய்யாதீர்கள். இரைப்பைப் பிரச்சினையைச் சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்திவிட்டு உடற்பயிற்சி செய்யுங்கள். தவறில்லை.
தாம்பத்திய உறவின் மூலம் புற்றுநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா, டாக்டர்? - செ.ரமேஷ் குமார். ஆனைமலை.
தாம்பத்திய உறவு வழியாகப் புற்றுநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. ஆனால், சில வைரஸ் கிருமிகள் தாம்பத்திய உறவின் மூலம் அடுத்தவர்களுக்குப் பரவும். உதாரணமாக, ஹெப்படைடிஸ்-பி (Hepatitis-B), ஹெச்ஐவி (HIV), ஹெச்பிவி (HPV) வைரஸ்களைச் சொல்லலாம். இவை புற்றுநோயை உண்டாக்கும்.
எனக்குக் கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக மலச்சிக்கல் பிரச்சினை உள்ளது. இதற்கு நான் மதுரையில் உள்ள ஒரு மருத்துவரிடம் சில காலம் சிகிச்சை எடுத்தேன். அப்புறம் எடுக்கவில்லை. மலச்சிக்கலைப் போக்க ஒரு நல்ல வழி சொல்லுங்கள், டாக்டர். - ஜெ. பிரதாப், மின்னஞ்சல்.
மலச்சிக்கலைத் தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டியது நம் உணவுமுறை. உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத்தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய் வகைகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழ வகைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம். உங்கள் உணவுத் தட்டில் இவை அடிக்கடி அவசியம் இடம்பெற வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து மிகுதி. இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்தவேண்டும்.
எடுத்துக்காட்டு: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி. தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் பால், பால் தொடர்பான உணவு வகை களையும் குறைத்துக் கொள் ளுங்கள். காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். இந்தப் பொதுவான வழிகளைப் பின்பற்றியும் மலச்சிக்கல் நீடித்தால், உங்களுக்குக் குடல் பரிசோதனை தேவை. காரணம் தெரிந்து சிகிச்சை பெற அது உதவும்.
எனக்கு வயது 69 ஆகிறது. இடுப்பு வலி இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்துவிடுகிறது. அதற்கு இயன்முறை மருத்துவம் (Physiothaerapy) மட்டும்தான் நிவா ரணம் தருகிறது. இதற்கு மற்ற மருந்துகள் மூலமாக நிவாரணம் கிடைக்குமா? - ராஜேந்திரன். அண்ணனூர்
உங்கள் இடுப்பு வலிக் குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறு வதுதான் சிறந்தது. வழக்கத்தில், இடுப்பு வலிக்கு மருந்துகள், மாத்தி ரைகள், ஊசிகள், இயன்முறை மருத்துவம் போன்றவற்றின் மூலம் நிவாரணம் பெறலாம். பாதிப்பு அதிகமென்றால் அறுவைசிகிச்சையும் தேவைப்படும். உங்களுக்கு இடுப்பு எலும்புகளில் என்ன பிரச்சினை, அது எந்த அளவில் உள்ளது என்பதைப் பொறுத்துத்தான் மருந்துகளால் வலி கட்டுப்படுமா, கட்டுப்படாதா என்று உறுதிகூற முடியும். பொதுவாக, இடுப்புவலிக்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருபவர்களுக்கும் இயன்முறை மருத்துவம் செய்வதே நிரந்தரத் தீர்வைத் தரும். உங்களுக்கு இயன்முறை மருத்துவம் நிவாரணம் தருகிறது என்பதால் அதையே தொடர்ந்து மேற்கொள்வதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்; விட்டுவிட்டு மேற்கொள்ளாதீர்கள்; இடைவெளி விட்டு மேற்கொண்டால் இடுப்புவலி மீண்டும் வந்துவிடும்.
நான், நாள் தவறாமல் சூரிய நமஸ்காரம் செய்து வருகிறேன். ஆனால், சூரியனை நேரடியாகப் பார்த்தால் கண்கள் பாதிக்கப்படும் என்று என் கணவர் பயமுறுத்துகிறார். இது உண்மையா? - காவ்யாஸ்ரீ, பொள்ளாச்சி.
நேரடியாகச் சூரியனைப் பார்க்கக் கூடாது என்பதற்கு முக்கியக் காரணம், சூரிய ஒளியில் ஆபத்தைத் தரக்கூடிய புறஊதாக் கதிர்கள் உள்ளன என்பதுதான். காலை, மாலை நேர சூரிய ஒளியில் நன்மை தரும் புறஊதாக் கதிர்கள் இருக்கும். மதிய நேரத்தில் செங்குத்தாக விழும் ஒளிக்கதிர்களில் கெடுதல் செய்யும் புறஊதாக் கதிர்கள் அதிகம் இருக்கும். அந்தக் கதிர்களை அடிக்கடி பார்த்தால் கண்புரை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பொதுவாக, காலை நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்தால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. சூரியன் உதித்ததிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். உடலுக்கு வைட்டமின்-டி கிடைக்கும்.
- gganesan95@gmail.com
| மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை: உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு டாக்டர் கு.கணேசன் பதில் அளிக்கிறார். கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் அல்லது மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@hindutamil.co.in |