

பண்டிகை நாளில் வீட்டின் உள்ளே குழந்தை விளையாடிக்கொண்டிருக்க, திடீரென குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அம்மா ஓடிவந்து பார்த்தார், வீட்டின் வெளிப்புறம் தெருவில் வெடித்த பட்டாசின் ஒரு சிறு துண்டு அந்தக் குழந்தையின் கண்ணில் பட்டு கண் சிவந்ததைக் கண்டு பதற்றம் அடைந்தார்.
உடனடியாக அந்தத் தாய் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கண் மருத்துவமனைக்குச் செல்ல, பட்டாசுத் துண்டு கண்ணைக் கிழித்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அறுவைசிகிச்சை செய்து, ஒரு மாதத் தொடர் சிகிச்சைக்குப் பின் அந்தக் குழந்தைக்குச் சிறு பாதிப்புடன் 80% பார்வை திரும்பக் கிடைத்தது. அந்தக் குழந்தையின் தாய் உடனடியாக கண் மருத்துவரை அணுகியதால், அந்தக் குழந்தையின் பார்வை காப்பாற்றப்பட்டது.
நிஜ மகிழ்ச்சிதானா? - தீபாவளிக்குப் பின் மருத்துவமனைகளில், குறிப்பாக கண் மருத்துவமனைக்குப் பட்டாசு வெடித்து கண்ணில் காயத்துடன், வலி வேதனையுடன் வரும் நோயாளிகளைப் பார்க்கும்போது இந்த ஆபத்தான பட்டாசுகளை வெடிப்பது அவசியம்தானா என்கிற கேள்வி எழுகிறது.
மேலும், பட்டாசு வெடிப்பது குறித்த வழிமுறைகள், தீ விபத்து நேர்ந்தால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது போன்ற விழிப்புணர்வு நமது மக்களிடையே குறைவாக இருக்கிறது.
இளம் கன்று பயமறியாது என்பதைப் போல் ஊசிப் பட்டாசு முதல் பெரிய பட்டாசு வரை எல்லாவற்றையும் கையில் பிடித்துப் பற்றவைத்துக் தூக்கிப் போட்டு விளையாடும் சிறுவர்கள் நம்மூரில் ஏராளமாக உள்ளனர். இவர்களிடம் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் விபத்துகள் குறித்துப் பெற்றோர்கள் அறிவுறுத்துவது அவசியமாகிறது.
கவனிக்க வேண்டியவை
* பட்டாசு வெடிக்க சிறு குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.
* சிறுவர், சிறுமியர் பெற்றோர் உதவியுடன் பட்டாசு வெடிக்க வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகத் தீயை அணைத்துவிட வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது உடையாத பாலிகார்ப னேட்டால் ஆன கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும்.
* பட்டாசு வெடிப்ப வர்கள் நீளமான வத்தி கொண்டு சற்றுத் தள்ளி நின்று வெடிக்க வேண்டும். பட்டாசை நேரடியாகத் தீக்குச்சி அல்லது மெழுகுவர்த்தி கொண்டு பற்றவைக்கக் கூடாது.
* ராக்கெட் போன்ற வானத்தில் சென்று வெடிக்கும் பட்டாசு உட்பட அனைத்து பட்டாசுகளையும் தகர டப்பா, கண்ணாடி பாட்டிலில் வைத்து வெடிக்கக் கூடாது.
* வெடிக்காத பட்டாசைக் கையில் எடுத்து, ஏன் வெடிக்கவில்லை என ஆராயக் கூடாது. அதுவே வெடித்து விபத்தை ஏற்படுத்தலாம். வெடிக்காத பட்டாசைத் தண்ணீர் ஊற்றி நனைத்துவிட வேண்டும்.
* ராக்கெட், ஆட்டம் பாம் போன்ற பெரிய வெடிகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்கலாம்.
* குடிசைப் பகுதிகள் நிறைந்த இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* பட்டாசு வெடிப்பவர்கள் வெடித்து முடித்தவுடன் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அப்படிக் கைகளைக் கழுவாமல் கண்களைத் தேய்த்தால் பட்டாசில் உள்ள வேதிப்பொருள்கள் கண் எரிச்சலை ஏற்படுத்தும்.
* பட்டாசு வெடித்தப் பிறகு கை கழுவாமல் சாப்பிட்டால் பட்டாசில் உள்ள வேதிப்பொருள்கள் நம் உடலைப் பாதிக்கும்.
வெடி விபத்தைத் தவிர்ப்பது எப்படி?
* பட்டாசை சமையல் அறை, பூஜை அறையில் வைக்கக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும் இடங் களில் அனைத்து பட்டாசுகளையும் குவியலாக போட்டுவைத்து வெடிக்கக் கூடாது.
* பட்டாசை வைத்திருக்கும் இடங்களில் சிகரெட் புகைக்கக் கூடாது.
கண்ணில் என்ன பாதிப்பு ஏற்படுத்தும்?
* பட்டாசு வெடிக்கும் போது கண் இமை, விழி வெண்படலம், கருவிழி, கண் விழித்திரை, கண் நரம்பு உள்பட அனைத்துப் பகுதிகளும் வெப்பம், வீரியமிக்க வேதிப்பொருள், வேகம் போன்றவற்றால் ரத்தக் காயம், கிழிந்த காயம், தீக்காயம், உள்வீக்கம் போன்றவை ஏற்படலாம். இதனால் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பார்வை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கண்ணில் காயம் பட்டால் என்ன செய்ய வேண்டும்?
* உடலில் தீக்காயம் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரைத் தொடர்ந்து ஊற்ற வேண்டும்.
* கண்ணில் காயம் ஏற்பட்டால் உடனடி யாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும்.
* கண்களைத் தேய்க்கக் கூடாது, அழுத்தக் கூடாது.
* கண்களில் உள்ள பட்டாசுத் துண்டு களை நீங்களாகவே எடுக்க முயலக் கூடாது.
* கண் மருத்துவரிடம் செல்லாமல் மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி ஊற்றக் கூடாது.
* பெரும்பாலானவர்கள் பட்டாசு வெடித்து கண்ணில் அடிப்பட்டால் இன்று தீபாவளி விடுமுறை, அதனால் கண் மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள் என நினைக்கிறார்கள். பலரும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என அடுத்த நாள் கண் மருத்துவரிடம் செல்கிறார்கள். அப்போது பட்டாசில் உள்ள வேதிப்பொருள் கண்களைப் பாதித்து பார்வையிழப்பை ஏற்படுத்திவிடலாம்.
* அதுவே உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றால், கண் மருத்துவர் வேதிப்பொருளை மருத்துவ திரவம் கொண்டு அகற்றி சிகிச்சை அளிப்பார். இதன் மூலம் பார்வையிழப்பு தடுக்கப்படும்.
கண் காயத்துக்கு எங்கு சிகிச்சை கிடைக்கும்?
* பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு அவசரம் என்றால் நீங்கள் 108 ஐ அழைக்கலாம்.
* தீக்காய சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இலசமாக வழங்கப்படுகிறது. இரவு நேரம் என்றாலும் சிகிச்சை வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.
* பட்டாசு வெடித்து ஏற்படும் காயத்துக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். தாமத சிகிச்சை அதிக பாதிப்பை உண்டாக்கும்.
* பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுப்படும். இதனால் ஆஸ்துமா தொந்தரவு உள்ள குழந்தைகள், பெரியவர்களுக்கு மூச்சு திணறல் வர வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க தீபாவளிக்கு முன்பே ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.
* தற்போது தமிழக அரசு காற்று மாசுப் படுவதைக் குறைக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காலை 1 மணி நேரமும் மாலை 1 மணி நேரமும் பட்டாசு வெடிக்க உத்தர விட்டுள்ளது. அதனைக் கடைப்பிடித்து முடிந்தவரை தரமான பட்டாசுகளை, பசுமை பட்டாசுகளைக் கவனமுடன் வெடிக்கலாம். உங்கள் கண்களை, உடல்நலத்தைக் காக்க மேற்கூறிய அறிவுரைகளைக் கடைப்பிடியுங்கள்.
- கட்டுரையாளர், கண் மருத்துவர்; drranganathansocial@gmail.com