பச்சை வைரம் 06: சிறுகீரையின் பெரும்பயன்

பச்சை வைரம் 06: சிறுகீரையின் பெரும்பயன்
Updated on
3 min read

‘கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டண மும் பாழ்’ எனும் பழமொழி, கீரைகள் சேர்க்கப்படாத தினசரி உணவு முழுமையடையாது என்பதையும் மூத்தோர் இல்லாத வீடும் முழுமை பெறாது என்கிற கருத்தையும் உணர்த்துகிறது. அவ் வகையில் உணவின் மூலம் உடலுக்குச் செறிவூட்ட நாம் தினமும் பயன்படுத்த வேண்டியது சிறுகீரை.

‘கீரை’ என்று உச்சரித்ததும் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது சிறுகீரைதான். கீரை வகையில் நாம் அதிகம் பயன்படுத்தும் சுவைமிக்க கீரையும் இதுதான். அறோதயம், சில்லி போன்ற வேறு பெயர்களை உடையது சிறுகீரை. ‘Amaranthaceae’ குடும்பத்தைச் சேர்ந்தது. மற்ற அமரந்தஸ் வகைக் கீரைகளை ஒப்பிடும்போது, இதன் இலைகள் சிறியதென்பதால் சிறுகீரை எனப் பெயர் பெற்றிருக்கிறது.

உணவுக் கலாச்சாரம்: விரதத்தை முடித்துவைக்கும் உணவுப் பொருளாகவும் பண்டிகைக் கால சிறப்புத் தொடு உணவாகவும் நமது கலாச்சாரத்தில் சிறுகீரை இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தப் படும் கஞ்சி ரகங்களில் ‘சிறுகீரைக் கஞ்சி’ சிறப்பு வாய்ந்தது. பாசிப் பருப் போடு சிறுகீரையைச்சேர்த்துச் செய்யப்படும் தொடு உணவு ஆந்திரத்தின் சிறப்பு உணவு. சிறுகீரையைப் பொரியலாக, கூட்டாக, குழம்பாக எனப் பல வடிவங் களில் சமைத்து உண்ணலாம்.

சித்த மருத்துவம்: சிறுகீரையை உணவாகச் சமைத்து உண்ண கண் நோய்களைத் தடுப்பதோடு சிறுநீர் எரிச்சல், வெப்ப நோய்களும் தீரும் என, ‘கண்புகைச்ச நேத்திரநோய் காசம் படலம்…’ எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல் எடுத்துரைக்கிறது. நஞ்சு முறிவு மருத்துவத்தில் பத்திய உணவாகச் சிறுகீரையைப் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.

சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடைய சிறுகீரை, பித்த நோய்கள் பலவற்றை நீக்கும் என்பதை, ‘சில்லியைப் பாகமாய்ச் செய்து…’ எனத் தொடங்கும் ‘தேரையர் கரிசல்’ பாடல் வரிகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம். தண்ணீரைக் குடிப்பதற்கே அலாரம் வைத்துப் பருகும் வகையில் இயந்திரத்தனமாக வாழும் மனிதர்களுக்கு ஏற்படும் சிறுநீர் அடைப்பு, சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் தீவிர எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறுகீரையைச் சமைத்து சாப்பிட, சட்டெனப் பலன் தரும்.

உணவாக... சிறுகீரையுடன் பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம், தேவையான அளவில் உப்பு சேர்த்து வேகவைத்துக் கடையலாக்கிச் சாப்பிடலாம். கடையலில் கொஞ்சம் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடப்படும் முதல் பிடி சோறு அமுதச் சுவையைக் கொடுக்கும். சிறுகீரையை உப்பிட்டு வேகவைத்து, மிளகுத் தூள் சேர்த்துக் கிளறி, நெய் விட்டுச் சாப்பிட உடனடி ஆற்றல் கிடைப்பதோடு நினைவுத் திறனும் அதிகரிக்கும். பள்ளிக் குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் சிறுகீரையைச் சமைத்துக் கொடுக்க, அதில் உள்ள சத்துகள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கும்.

சிறுகீரைக் குழம்பு: சிறுகீரை இலைகளை வேகவைத்து, அதனுடன் வேகவைத்த துவரம்பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், கொஞ்சம் புளி, தேவையான அளவு கல் உப்பு சேர்த்துக் கடைந்து, வெங்காய வடகத்தைத் தாளித்துச் சேர்த்தால் சுவையான கீரைக்குழம்பு தயார். இந்தச் சத்துக் குழம்புதான் பெருவாரியான கிராமிய சமையலில் தினமும் இடம்பெற்று ஆரோக்கியத்தைக் கடத்துகிறது.

நோயிலிருந்து மீண்டவர்களுக்கான ஊட்ட உணவாக இக்கீரைக் குழம்பைத் தரலாம். சிறுகீரையை அடிக்கடி பயன்படுத்த இனிய குரலைக் கொடுக்கும் எனும் சித்த மருத்துவக் குறிப்பு ஆய்வுக்குரியது. உடலுக்குத் தேவையான ஊட்டங்களை அளித்து, நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து, அவ்வளவு சீக்கிரம் உடலில் கிருமிகளின் தாக்கம் இருக்காது என்கிற ரீதியில் இது சொல்லப்பட்டிருக்கலாம்.

ஆய்வுக் களம்: இரும்புச் சத்தை நிறைத்து வைத்திருக் கும் சிறுகீரையை, இளம் பெண்களுக்கான உணவுப் பட்டியலில் கட்டாயம் சேர்க்க வேண்டும். ரத்தச் சோகையைத் தடுக்கும் உணவுப் பட்டியலில் சிறுகீரைக்கு முக்கிய இடமுண்டு. உடலில் ஏற்படும் நுண்ணிய வீக்கங்களைக் குறைக்கும் செய்கை கொண்ட சிறுகீரையில் நார்சத்தும் அதிகம் என்பதால் செரிமானப் பாதையில் ஏற்படும் நுண்ணிய சிராய்ப்புகளையும் வீக்கங்களையும் குணமாக்கும் என்கிறது ஆய்வு. இதிலுள்ள லைசின் எனும் அமினோ அமிலம், கால்சியம் உட்கிரகித்தலை அதிகரிக்க உதவுகிறது.

கீரைத் தைலம்: தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்யோடு சிறுகீரைச் சாறு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனத் தூள் கலந்து செய்யப்படும் கீரைத் தைலத்தை தலைக்குத் தேய்த்து குளிக்க உடல் வெப்பம் படிப்படியாகக் குறையும். வேனிற் காலத்தில் இந்தக் கீரைக் குளியலை முயன்று பார்க்கலாம். கீரைத் தைலத்தில் சேரும் அனைத்து மூலிகை களும் குளிர்ச்சிக்குப் பெயர் பெற்றவை!

மலக்கழிவை முறையாக வெளியேற்ற வைத்தல், ரத்தச் சிவப்பணுக்களைப் பெருக்குதல், சிறுநீரக உறுப்புகளின் இயக்கத்துக்குத் தடையாகும் காரணிகளை வகுத்துக் களைதல், கல்லீரலின் செயல்திறனைப் பல மடங்கு அதிகரித்தல் என்பது போன்ற பல்வேறு நன்மைகளை உடலுக்கு ஒருசேர வழங்கும் ‘உணவுக் கணித மாயாவி’ சிறுகீரை. சிறுகீரை பெயரிலும் அளவிலும் சிறுத்திருந் தாலும் மருத்துவக் குணத்தின் அடிப்படையில் பேருருவம் கொண்டது!

கவனம்: கீரை வகைகளில் அதிக அளவில் வேதித் தாக்குதலுக்கு ஆள்படக்கூடிய கீரையும் இதுவே! ‘காய்த்த மரம்தான் கல்லடி படும்’ என்பதுபோல மக்களால் அதிகம் விரும்பப்படும் இளம் சிறுகீரையை விதைப்பதில் தொடங்கி நமது கைகளுக்கு வந்து சேரும் வரை பல முறை வேதிக் கலவைகளை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

தற்போதைய சூழலில் சிறுகீரையை நமது வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பதே ஆரோக்கியத்துக்கு உகந்தது. சிறுகீரையைச் சந்தைகளில் வாங்குவதாக இருந்தால், பளிச்சென்று இருக்கும் கீரையைத் தவிர்ப்பது நலம். கீரையின் பின்புறத்தில் வெண்மை நிறத்தில் படிமங்கள் இருப்பின் அந்தக் கீரையை ஒதுக்கிவிடலாம். மேற்சொன்ன காரணங்களால் சிறுகீரையைப் பல முறை கழுவிப் பயன்படுத்துவதும் முக்கியமானது.

இளசான சிறுகீரையே உணவுக்கு ஏற்றது என்பதால், முதிர்ச்சி அடைந்த கீரையைத் தவிர்க்கலாம். வேருடன் பறித்த சிறுகீரையைப் பயன்படுத்துவது நல்லது. சிறுகீரையின் இளம் தண்டிலிருந்து பசுமையான இலைகளைப் பறித்து அன்றே சமைப்பது சிறந்தது.

- கட்டுரையாளர் அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in