

எனக்கு வயது 26. என்னுடைய ரத்த அழுத்தம் 150/90 எனும் அளவில் நீண்ட காலமாக இருந்துவருகிறது. அவ்வப்போது தலைவலியும் கிறுகிறுப்பும் வருவது உண்டு. இதுவரை மருத்துவரிடம் சென்றதில்லை; மருந்து எதுவும் சாப்பிடவில்லை. எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. புகைபிடிப்பதும் இல்லை. என் ‘பிபி’யை எப்படிக் குறைப்பது, டாக்டர்? - ஆனந்த் ஜோதி, மின்னஞ்சல் வழியே.
முதலில் மருத்துவரிடம் சென்று உங்கள் உடலைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் தேவைப்படும். இவற்றில் உங்கள் உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணம் தெரிந்துவிடும். மருத்துவர் உங்களுக்குத் தேவையான மருந்தைக் கொடுப்பார். முறைப்படி சாப்பிட்டு வாருங்கள். உணவில் கவனம் செலுத்துங்கள். முக்கியமாக, உப்பை மிதமாகப் பயன்படுத்துங்கள். அரிசி உணவு அளவோடு இருக்கட்டும். துரித உணவு வகைகளுக்குத் தடை போடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
நொறுவைகள் வேண்டாம். காய்கறி, கீரை, பொட்டாசியம் மிகுந்துள்ள பழங்கள் ஆகியவற்றை அதிகம் உண்ணுங்கள். உடல் எடை சரியாக இருக்கட்டும். தினமும் ஏதாவது ஓர் உடற்பயிற்சி அல்லது 40 நிமிடத்துக்கு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இவற்றோடு தியானம், யோகா உதவும். மன அழுத்தத்துக்கு இடம் தராதீர்கள். இரவில் குறைந்தது 7 மணி நேரம் நிம்மதியாக உறங்க வேண்டும். மாதம் இருமுறை உங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். வருடத்துக்கு இரண்டுமுறை இதயம், சிறுநீரகம், கண் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் செய்தால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
இடது தோளில் வலி வந்தால் அது மாரடைப்பு வலியா, தோள் வலியா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது, டாக்டர்? - ம. குமரேசன், காஞ்சிபுரம்.
இடது தோளைப் பல்வேறு திசைகளில் அசைத்துப் பாருங்கள். அந்த வலி அதிகமானாலோ, குறைந்தாலோ, தோளை இறுக்கிப் பிடித்த உணர்வு தளர்ந்தாலோ அது தோள் மூட்டு வலியாகவே இருக்கும். தோளின் அசைவுக்கும் வலிக்கும் தொடர்பில்லை; அசைவு இல்லாத நேரத்திலும் வலிக்கிறது; வலி தொடர்ந்து இருக்கிறது என்பது உறுதியானால் அடுத்த அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும்.
இடது பக்கத் தோளில் மட்டும் வலி அதிகம், இடது கைக்கும் முழங்கைக்கும் விரல்களுக்கும் வலி பரவுகிறது, உடல் வியர்க்கிறது, படபடப்பாக இருக்கிறது, நெஞ்சு பாரமாக இருக்கிறது அல்லது நெஞ்செரிச்சல் இருக்கிறது என்றால் அது மாரடைப்பு வலியாக இருக்க சாத்தியம் அதிகம். உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அடிக்கடி இடது தோளில் வலி வருகிறது என்றால், ஒருமுறை ‘இசிஜி’ எடுத்துப் பார்த்துக்கொள்வது நல்லது.
எனக்கு வயது 79. எனது வலது கை விரல்கள் மரத்துப்போன நிலையில் உள்ளன. காலையில் கண் விழித்து எழுந்தவுடன் மிகவும் மரத்துப்போன நிலையில் விரல்கள் இருந்து, பின்பு லேசான மரத்துப்போன நிலையில் நாள் முழுவதும் உள்ளன. இதற்கு என்ன காரணம்? ஸ்மார்ட் போனை அடிக்கடித் தொடுவதால் இது ஏற்படுகிறதா? நிவாரண முறைகளை விளக்க வேண்டுகிறேன். -அ. காஜா நஜிமுதீன், ஏர்வாடி.
நமது உடலில் உள்ள ஒரு பகுதி நீண்ட நேரம் அழுத்தப்பட்டுக்கொண்டே இருந்தால், அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் குறையும். அப்போது அங்குள்ள நரம்புகள் செயல்பாட்டை இழந்துவிடும். அதனால், அந்தப் பகுதி உணர்ச்சியற்று மரத்துப்போகிறது. விரல்கள் மரத்துப்போவதற்கு இது ஒரு பொதுவான காரணம். அடுத்த காரணம், ‘புற நரம்பு பாதிப்பு’ (Peripheral neuropathy). இதில் கை, கால், பாத நரம்புகள் முதன்மையாகப் பாதிக்கப்படும். இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்குக் கை, கால் மரத்துப்போகும்; எரிச்சல் ஏற்படும்; ஊசி குத்துவதுபோல் வலி உண்டாகும்; இந்தத் தொல்லைகள் இரவில் அதிகமாக இருக்கும்.
வைட்டமின் பி-12 குறைபாடும் ரத்தக்குறைவும் இருந்தால் இந்தப் பிரச்சினை தலைதூக்கும். நீரிழிவு, புகைபிடிப்பது, மது அருந்துவது போன்றவை அடுத்த காரணங்கள். கழுத்து எலும்பில் பிரச்சினை இருந்து கைக்கு வரும் நரம்பு அழுத்தப்பட்டாலும் கை விரல்கள் மரத்துப்போன நிலையில் இருக்கும். ஸ்மார்ட் போனை அடிக்கடி தொடுவதால் இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு குறைவு. உங்களுக்குப் பொதுவான நிவாரண முறைகள் சொன்னால் சரிப்படாது. எந்தக் காரணத்தால் விரல்கள் மரத்துப்போகின்றன என்பதைப் பொறுத்து சிகிச்சை அமையும். மருத்துவரை நேரில் அணுகினால் உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.
என் அப்பாவுக்கு வயது 70. நீரிழிவு நோயாளி. இன்சுலின் எடுத்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து அடிபட்டு இடுப்பெலும்பு முறிந்து விட்டது. அப்போதிலிருந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். புட்டத்திலும் முதுகிலும் படுக்கைப் புண்கள் வந்துவிட்டன. இதை எப்படிக் குணப்படுத்துவது, டாக்டர்? - ச. தங்கம் சின்னதுரை, மதுரை-6
முதலில், அப்பாவின் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் அவரைக் கவனிக்க வேண்டியது அதைவிட முக்கியம். அப்போதுதான் படுக்கைப் புண்களைக் குணப்படுத்த முடியும். புண்களின் தன்மைகளுக்கு ஏற்ப தகுந்த கிருமிக்கொல்லி மாத்திரை, ஊசிகளைச் செலுத்த வேண்டி வரும். பொதுவாக, படுக்கைப் புண்களை சலைன் கொண்டு நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும்.
புண்களைச் சுத்தப்படுத்த சில கிருமிநாசினிகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றில் ஒன்றைப் பயன்படுத்தியும் சுத்தப்படுத்தலாம். அதன் பிறகு, ஏதேனும் ஒரு கிருமிக்கொல்லிக் களிம்பைப் புண்ணில் தடவ வேண்டும். அல்லது ‘sofra tulle’ எனும் மருந்து கலந்த துணியால் புண்களை மூட வேண்டும். பிறகு, சுத்தமான பருத்தி வலைத் துணியால் கட்டுப்போட வேண்டும். தினமும் கட்டை நீக்கிச் சுத்தம் செய்து புதிய கட்டுப்போட வேண்டும்.
படுக்கைப் புண் வராமலிருக்க உங்கள் அப்பாவை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை புரண்டு படுக்க வையுங்கள். தினமும் அவரைக் குளிப்பாட்டிவிடுங்கள். எண்ணெய் தேய்த்துவிடுங்கள். அவரை ஈக்கள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். படுக்கையில் மென்மையான விரிப்புகளைப் பயன்படுத்துங்கள். அல்லது தண்ணீர் படுக்கையில் (Water bed) படுக்க வையுங்கள். வாந்தி, சிறுநீர், மலம் போன்றவற்றால் படுக்கை, தலையணை அசுத்தமானால் உடனடியாக மாற்றிவிடுங்கள்.
என் உடலில் ஓரிரு இடங்களில் பெரிய மரு நீண்ட காலமாக இருக்கிறது. ஆபரேஷன் இல்லாமல் இவற்றை நீக்க வழியுண்டா, டாக்டர்? - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
மருக்களை (Warts) ஆபரேஷன் இல்லாமல் அகற்ற நவீன மருத்துவத்தில் பலதரப்பட்ட சிகிச்சைகள் இருக்கின்றன. கிரையோதெரபி (Cryotherapy), போட்டாடைனமிக் தெரபி (Photodynamic therapy), லேசர் சிகிச்சை ஆகியவை அவற்றில் முக்கியமானவை. சருமநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை கேட்டால், உங்களுக்குத் தேவையான சிகிச்சையை மேற்கொள்வார்.
- gganesan95@gmail.com