ஓசிடி: மனதில் படிந்த அழுக்கு!

ஓசிடி: மனதில் படிந்த அழுக்கு!
Updated on
3 min read

வாயிலே அழுக்கென்று நீரெடுத்துக் கொப்பளித்தேன்; கொப்பளித்துக் கொப்பளித்து வாயும் ஓயாமல் அழுக்கும் போகாமல் உற்றுப்பார்த்தேன்; நீரே அழுக்கு! சுப்ரமண்ய ராஜுவின் கவிதை இது. பல நேரம் பிரச்சினை வெளியில் இருக்கிறது என நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், அதில் உண்மையில்லை. பிரச்சினை நமக்குள்தான் இருக்கும். அது போன்ற ஒரு பிரச்சினைதான் அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் (OCD - Obsessive Compulsive Disorder) என அழைக்கப்படும் எண்ணச் சுழற்சி மனநலப் பாதிப்பு.

சுத்தமாக இருத்தல் என்பது மனிதர்களுக்கு இயல்பாக இருக்கக்கூடிய உணர்வு. ஒரு கரும்புள்ளிகூட இல்லாத வெள்ளை விரிப்பைப் பார்க்கும்போது மனதுக்குள் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும். அதேபோல் நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்ட விஷயங்களைப் பார்த்தாலும் நிறைவு ஏற்படும்.

இது வெறும் அழகியல் உணர்வு மட்டுமல்ல. பரிணாமரீதியாகப் பார்த்தால் எல்லாம் சரியாக இருந்தால் மனிதர்களாகிய நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். இவ்வாறான விஷயங்கள் நமக்கு நிம்மதி தருவதால் அப்படி இருப்பதை உறுதிசெய்து கொள்கிறோம். கொஞ்சம் பாதுகாப்பில்லாத சூழல் இருந்தால்கூட அதைச் சரி செய்ய முயல்கிறோம்.

ஆதிகாலத் தொடர்பு: தீமையைத் தவிர்த்தல் என்பது மனிதர்கள் அனைவருக்குமான பொதுவான தன்மை. அதனால், சுற்றுப்புறத்தில் தீமை தரக்கூடிய வகையில் ஏதாவது இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொண்டே இருப்பது நமது ஆதாரக் குணம். ஆதிகாலத்தில் காடுகளில் மனிதர்கள் வசித்தபோது இரைகொல்லி உயிரினங்கள், பூச்சிகள் ஏதாவது இருக்கின்றனவா என்று பார்த்துக்கொண்டே இருந்தது இயல்பான குணமாக இருந்தது. அடுத்தது, ஏதாவது ஆபத்து வர நேர்ந்தால், அதைச் சரி செய்வது.

இந்த இரண்டு விஷயங்கள்தாம் எண்ணச் சுழற்சி நோயில் அதீதமாகப் போகின்றன. அதாவது எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றனவா எனச் சோதித்துப் பார்ப்பது. சரியாக இல்லை என நினைப்பதைச் சரிசெய்வது. இந்தச் செயல்களைத் தேவைக்கு அதிகமாகச் செய்யும்போது சிக்கல் ஏற்பட வழிவகுக்கிறது.

அதீத சுத்தம்: எண்ணச் சுழற்சி நோய் என்றதுமே பலருக்கும் பொதுவாக நினைவுக்கு வருவது கைகளைக் கழுவிக்கொண்டே இருப்பதுதான். எத்தனை முறை கழுவினாலும் அழுக்கோ கிருமிகளோ முழுவதுமாகப் போகவில்லை என்கிற போதாமை தோன்றுவதால் மீண்டும் மீண்டும் கைகளைக் கழுவுவது, குளிப்பது போன்ற செயல்களைச் செய்துகொண்டே இருப்பார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நம்மில் சிலர் அதிகமாகச் சுத்தத்துக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்போம். அடிக்கடி குளிப்பவர்கள், ஒவ்வொரு முறை கழிப்பறைக்குச் சென்றதும் நான்கைந்து முறை கைகளைக் கழுவுபவர்கள் பலர் உண்டு. இதில் எண்ணச் சுழற்சி நோயில் இருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக மணிக்கணக்கில் இதிலேயே ஈடுபட்டு, இதிலேயே உழன்றுகொண்டிருப்பார்கள்.

பல வேளைகளில் கைகளைக் கழுவிக் கழுவிக் கையெல்லாம் புண்ணாகித் தோல் மருத்துவர்களிடம் சென்று, அவர்கள் மூலம் மனநலச் சிகிச்சைக்கு வருபவர்களும் உண்டு. குறிப்பாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தாலோ வெளியிலிருந்து ஆள் யாரும் வீட்டுக்கு வந்து சென்றாலோ, அந்த இடத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பது எண்ணச் சுழற்சி நோயின் ஒரு வகை.

சோதித்தல்: இதற்கடுத்துப் பரவலாகக் காணப்படுவது சோதித்துக்கொண்டே இருப்பது. குறிப்பாக மின்சாதன ஸ்விட்சுகளை, அடுப்பை அணைத்துவிட்டோமா, கதவுகளை எல்லாம் மூடிவிட்டோமா என மணிக்கணக்கில் சரிபார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

இன்னொரு வகையினர் தாங்கள் பிறருக்கு ஏதாவது தீமை செய்துவிட்டோமோ அல்லது தவறுதலாக ஏதாவது பேசிவிட்டோமோ அல்லது செய்துவிடுவோமோ எனச் சந்தேகப்பட்டு உறுதிசெய்துகொண்டே இருப்பார்கள். பேசியவர்களை மீண்டும் அழைத்துத் தான் சரியாகத்தான் பேசினோமா என உறுதிசெய்து கொள்வார்கள்.

இன்னும் சிலருக்கு மனதில் சில அசிங்கமான எண்ணங்களோ உருவங்களோ அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். மீண்டும் இப்படி எண்ணங்கள், உருவங்கள் வந்துவிடுமோ எனப் பயப்படுவதாலேயே மீண்டும் மீண்டும் அவை மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். அதேபோல் சிலர் யாருக்கேனும் தீமை ஏற்படுவதுபோல் நினைத்தாலே, அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என எண்ணி அவ்வாறு நடக்காமல் இருக்கக் கடவுள் துதிகள், மந்திரங்கள் போன்றவற்றை மீண்டும் மீண்டும் உச்சரிப்பார்கள். அவற்றையும் சரியாகச் சொன்னோமா எனச் சந்தேகப்பட்டு மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

வேறுவகையினரோ எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொண்டே இருப்பார்கள். உடை சரியாக இருக்கிறதா, வெளியே கொண்டுபோக வேண்டிய பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்தோமா என்றெல்லாம் சந்தேகப்பட்டுச் சரிபார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

தேர்வு எழுதிவிட்டு விடைத்தாளைக் கொடுக்காமல் சரிபார்த்துக்கொண்டே இருப்பார்கள். மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம் – இவை எல்லாமே எல்லாரும் செய்வதுதான். ஆனால், அளவும் காலமும் அதனால் அடையும் துன்பமுமே ஒரு செயலைப் பாதிப்பு (எண்ணச் சுழற்சி பாதிப்பு) என்று கூறவைக்கிறது

திருப்தியே அடைவதில்லை: எண்ணச் சுழற்சி பாதிப்பு இருப்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல் ‘திருப்தியில்லை’ என்பது. அதாவது எத்தனை முறை கழுவினாலும், சரி செய்தாலும், பரிசோதித்தாலும் அவர்கள் மனதில் திருப்தி ஏற்படாமல் ஏதோ சரியில்லை என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். மனதில் ஏற்படும் எண்ணத்தை அப்செஷன் (Obsession) என்றும் அதைச் சமன்படுத்தச் செய்கிற செயல்களைக் கம்பல்ஷன் (Compulsion) என்றும் அழைக்கின்றனர்.

ஏன் பாதிப்புகள் ஏற்படுகின்றன? - பொதுவாக எல்லா மனநலப் பாதிப்புகளைப் போன்றே இதற்கும் தனிநபரின் மூளையில் ஏற்படும் வேதிமாற்றங்கள், மரபணுக்கள், அவர்களது ஆளுமை, வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள், சூழல் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கரோனா காலத்தில் அதீதமாகப் பயந்து கைகளைக் கழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

முதலில் குறிப்பிட்டதுபோல் நம் எல்லாருக்குமே சூழலில் ஏதோ ஒன்று சரியில்லை என்றால், ஓர் எச்சரிக்கை உணர்வு எழும். இந்த எச்சரிக்கை உணர்வு எண்ணச் சுழற்சி நோய் இருப்பவர்களுக்குத் தேவையில்லாத நேரத்தில் காரணமே இல்லாமல் அதிகமாக எழுகிறது. மூளையில் ஏற்படும் சில வேதி மாற்றங்களால் இவர்களுக்கு அதீதப் பதற்றமும் எச்சரிக்கை உணர்வும் எழும்போது அதைச் சமன்படுத்தி அமைதிப்படுத்துதல் நடக்காமல் போகிறது. குறிப்பாக, செரட்டோனின் என்கிற வேதிப்பொருளைச் சுரக்கும் மூளை செல்கள் சரியாகச் செயல்படாமல் இருந்தால் எண்ணச் சுழற்சி அதிகரிக்கிறது.

என்ன செய்யலாம்? - மிகை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். நம்மூரில் ஒரு சொல்வழக்கு உண்டு. ‘மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது’ என்று சொன்னால், கட்டாயம் அதைத்தான் மருந்து சாப்பிடும்போது நினைப்போம். அதுபோல் இந்த எண்ணங்களையும் வரக் கூடாது என்று போராடினால், அவை பெருகிக்கொண்டேதான் இருக்கும். இந்த எண்ணங்களுக்கு அடிபணியாமல் அவற்றை அலட்சியப்படுத்துவதே அவற்றிலிருந்து வெளிவர உதவும்.

எண்ணச் சுழற்சி பாதிப்பிலிருந்து விடுபட முதலில் இது குறித்த விழிப்புணர்வு தேவை. அதீத பயம், எச்சரிக்கை உணர்வு போன்ற எண்ணங்களைக் குறைக்க உளவியல் ஆலோசனை தேவைப்படும். பயப்படும் விஷயத்தைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நம்மைத் தொந்தரவு செய்யும் தீவிர எண்ணங்களை அலட்சியப்படுத்த பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செரட்டோனின் போன்ற வேதிப்பொருள்களின் செயல்பாட்டை அதிகரிக்கும் மருந்துகளும் இவர்களுக்குத் தேவைப்படும். ‘புறத்தூய்மை நீரால் அமையும்’ என்று குறள் சொல்கிறது. எண்ணச் சுழற்சி என்பது மனதில் படிந்த அழுக்கு. அதைக் கழுவ நமக்கு உளவியல் முறைகளே உதவும்.

- கட்டுரையாளர், மனநல மருத்துவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in