வாத நோயை வெல்லும் வழிகள்

வாத நோயை வெல்லும் வழிகள்
Updated on
3 min read

இன்று ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றத்தால் பல நோய்களுக்கு மக்கள் ஆட்படுகின்றனர். அவற்றில் மாரடைப்புக்குப் பிறகு முதன்மையான நோயாக இருப்பது வாத நோய். இந்தியாவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் வாதநோயால் பாதிக்கப்படுகிறார். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,85,000 பேர் வாதநோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 4 பேரில் ஒருவர் வாதநோயால் மரணமடைகிறார். இன்று இளைய தலைமுறையினரையும் வாத நோய் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் 20 வயதுக்கு உள்பட்டவர்களில் சுமார் 50 லட்சம் பேரிடம் வாத நோய் காணப்படுகிறது.

அறிகுறிகள் என்னென்ன? - வாத நோய் பொதுவாக முதியவர் களுக்குத்தான் ஏற்படுகிறது. என்றாலும் மற்ற வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். சில அறிகுறிகளை வைத்து வாத நோய் ஏற்படப் போவதையோ அல்லது வந்துள்ளதையோ அறியலாம். பார்வைக் குறைபாடு, மனநிலையில் திடீர் மாற்றம், தலைவலி, குமட்டல், வாந்தி, தலைசுற்றுதல், இரட்டைப் பார்வை, உடல் தொடு உணர்வில் மாற்றம், நடையில் தடுமாற்றம், வலிப்பு போன்றவை வாதநோயின் பொதுவான அறிகுறிகள்.

இந்த அறிகுறிகள் திடீரென ஏற்பட்டால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். தவிர, உடலின் ஒரு பகுதி கை, கால்களை அசைக்க முடியாதபடி செயலிழப்பு ஏற்படும். செயலிழந்த பகுதியில் முகம் கோணலாகி, வாயும் அசைக்க முடியாமல் போகலாம். முகப் பகுதியும் வாதத்தால் பாதிக்கப்படும்போது பேசுவதில் சிரமம் ஏற்பட்டு, பேச்சு குளறும். இதைப் பேச்சு வழக்கில் ‘பக்கவாதம்’ என்கிறோம்.

தடுப்பு முறைகள்: வாதநோயைத் தடுப்பதில் வாழ்க்கை முறை மாற்றம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது, நாம் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இது வாத நோய் வருவதைத் தடுப்பது மட்டுமல்ல, ஒருவேளை வந்திருந்தால், மீண்டும் வாத நோய் ஏற்படுவதைத் தடுக்கவும் வாழ்க்கை முறை மாற்றம் உதவும்.

இதில் முதலிடம் வகிப்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான். இரண்டு வகையான உணவு பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கலாம். முதலாவது, ‘ஐடியல் டயட்’. அதாவது, பெரும்பாலும் திடகாத்திரமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது. இதில் சைவ உணவே முதன்மையாக இருக்கும். அதைச் சமச்சீரான முறையில் எடுத்துக்கொள்வதே, இந்த உணவின் அடிப்படை. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வாதநோய் உள்ளிட்ட பிரச்சினை வராது என்பதல்ல. அவர்களுக்கும் வரும். ஆனால், உணவுப் பழக்கவழக்கத்தைச் சரியாகப் பின்பற்றும்போது நோய் வரும் வாய்ப்பு குறையும்.

இரண்டாவது ‘ஹெல்தி டயட்’. இதில் காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட் குறைவான உணவு வகைகள், மீன், கோழி, முட்டை போன்ற உணவு வகைகள் வரும். இதைப் பின்பற்றுவோர் செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட உணவு, சிவப்பு இறைச்சி, எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். இவற்றோடு புகைப் பழக்கம், மூக்குப் பொடி, போதைப் பொருள் பயன்பாடு, மது அருந்துவது போன்றவற்றை எந்த நிலையிலும் தவிர்க்க வேண்டும்.

என்னென்ன செய்யலாம்? - எந்த விஷயத்துக்கும் டென்ஷன் ஆவது, கோபப்படுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இது தேவையில்லாமல் மன அழுத்தத்துக்கு அழைத்துச் சென்று வாத நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட காரணமாகிவிடும். ஓடியாடி வேலை செய்த காலம் மலையேறி, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதுதான் இந்தக் காலத்தில் வேலையாகிவிட்டது. இப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதும் நோய்களை வரவேற்பது போன்றதுதான்.

எனவே, உட்கார்ந்து வேலை செய்பவர்கள் காலை, மாலையில் உடற்பயிற்சி செய்வது அவசியம். நடைப்பயிற்சி செய்ய வேண்டும். வேலை பார்க்கும்போது இடையிடையே கை, கால்களை நீட்டி, மடக்கி உடற்பயிற்சி செய்யலாம். குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து நடந்து வர வேண்டும். இது உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் புத்துணர்வை அளிக்கும்.

மாற்றங்கள் தேவை: நீரிழிவு நோய் வந்துவிட்டால் அதற்குரிய சிகிச்சை முறைகளையும் உணவுப் பழக்கத்தையும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்வதோடு, பழங்களை தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பொட்டாசியம் அதிகமுள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. இந்தியர்கள் காரசாரமாகச் சாப்பிடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால், ரத்த அழுத்த நோய் வராமல் இருக்க வேண்டுமென்றாலும், நோய் வந்தவர்களுக்கு அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் உப்பு பயன் பாட்டைக் குறைத்துக் கொள்வது அவசியம்.

வாத நோய் ஏற்பட மூளைத் திசுக்களில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும் ஒரு காரணம். இதில் கொழுப்பே முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சிவப்பு இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். இவை எல்லாமே பழக்கவழக்க மாற்றங்கள்தாம். இவற்றைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நோய் வந்த பிறகு அல்லாடுவதைவிட வரும் முன்பு தவிர்ப்பது நல்லது. ஒருவேளை வாத நோய் வந்துவிட்டால், பயப்படத் தேவையில்லை. இன்று மேம்பட்ட சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. வாதநோய் அறிகுறிகள் தெரிந்த 4 மணி நேரத்துக்குள் சிகிச்சையைப் பெற்றுவிட வேண்டும்.

இது நோய் தீவிரமாகாமல் தடுக்க உதவும். உரிய நேரத்தில் சிகிச்சையை எடுத்துக்கொண்டால், மருந்துகளின் உதவியுடன் பிறரைப் போல நாமும் வாழ முடியும். இன்று எல்லா அரசு மருத்துவமனைகளிலும் வாதநோய்க்கான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாதநோய் வந்தவர்கள் தொடர் சிகிச்சைகளை எடுத்தக்கொள்வதும் அவசியம்.

வாத நோயை வெல்வோம்: இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது போல, வாத நோயும் வரத் தொடங்கிவிட்டது. இளம் தலைமுறையினரிடமும் வாத நோய் ஏற்படுவதால் அந்த நோயை வெல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதற்கு நாம் எல்லாரும் ஒன்றிணைய வேண்டும். வாத நோய் தொடர்பான விழிப்புணர்வை எல்லாரிடமும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். இதுதான் இந்த ஆண்டுக்கான உலக வாத நோய் நாளின் மையக்கரு. வாதநோய் என்பது வாழ்க்கைக்குத் தடையல்ல. உடனடி சிகிச்சை, தொடர் சிகிச்சை மூலம் சீரான வாழ்க்கையை வாழ முடியும்.

அக்.29: உலக வாத நோய் தினம்

- கட்டுரையாளர்: மூளை நரம்பியல் நிபுணர்; drmaaleem@hotmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in