

என் கணவருக்கு இரவில் உறங்கும்போது அடிக்கடி புரையேறி விடுகிறது. இதனால், உறக்கம் பாதிக்கப்படுகிறது.
இதற்கு என்ன செய்ய வேண்டும், டாக்டர்? - எஸ். சோபியா, மின்னஞ்சலில்.
உங்கள் கணவருக்கு ‘இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்’ (Gastro Esophageal Reflex Disease - சுருக்கமாக GERD) இருக்க வாய்ப்பிருக்கிறது. மருத்துவரிடம் ஆலோசித்து இதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அப்படி உறுதி யானால், தகுந்த சிகிச்சை எடுங்கள். அதோடு உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்.
காரம் புகுந்த, மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய பன்னாட்டு உணவு வகைகளை உங்கள் கணவர் ஒதுக்க வேண்டும். ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. காபி/தேநீர் அளவோடு இருக்கட்டும். இறைச்சி, முட்டை, சாக்லேட், காற்றடைத்த செயற்கை பானங்கள், குளிர்பானங்கள், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புகை, புகையிலை, மது, பான்மசாலா, பீடா போன்றவை வேண்டாம்.
சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்வது நல்லது. அப்போதுகூடப் படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஓர் அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது. படுக்கும் நிலையும் முக்கியம். அதிக நேரம் குப்புறப்படுப்பது, மல்லாந்து படுப்பது, வித்தியாசமான கோணங்களில் கால்களை நீட்டி, மடக்கிப் படுப்பது போன்றவை தவறானவை. இடது பக்கமாகப் புரண்டு படுப்பதுதான் சிறந்தது. உடல் பருமன் இருந்தால் அதைக் குறைக்க முயலுங்கள்.
என் மகளின் வயது 15. அவள் சில நாள்களாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்படு கிறாள். அதைக் குணப்படுத்து வதற்கான வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் கூற முடியுமா? - ரேணுகா, மின்னஞ்சலில்.
ஒற்றைத் தலைவலிக்கு இரண்டுவித சிகிச்சைகள் இருக்கின்றன. முதலாவதாக, உங்கள் மகளுக்குத் தலைவலி ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, ஒற்றைத் தலைவலி வரும் முன்பு பார்வையில் சில மாற்றங்கள் தோன்றும். அப்போதே சில தடுப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, தலைவலி வராதிருக்க, அதைத் தூண்டும் காரணிகளை ஓரங்கட்ட வேண்டும்.
முக்கியமாக, மேற்கத்திய உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். செயற்கை உணவும் ஆகாது; செயற்கை மணமும் கூடாது. சாக்லெட் ஆகாது. நீண்ட நேரம் பசியோடு இருக்கக் கூடாது. பணியில் பதற்றமும் வேண்டாம்; பரபரப்பும் வேண்டாம்; நிதானம் பேணுவது நல்லது. களைப்பைக் கழற்றிப் போட வேண்டும். உபரிச் சத்தமா, ஒதுங்கிவிட வேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் முக்கியம். தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம். தியானம் உதவும்.
சமீபத்தில் மலம் கழித்தபோது ரத்தம் வந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றேன். அவர்கள் இது மூல நோயின் அறிகுறி என்று கூறினார்கள். தற்போது எனக்கு ஒரு சில வேளைகளில் காரமாகச் சாப்பிட்டால் மட்டுமே ரத்தம் வருகிறது. மூலநோயைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகளைக் கூறுங்கள் ? - சக்தி, தர்மபுரி.
நாள்பட்ட, சரிவர கவனிக்கப்படாத மலச்சிக்கல்தான் மூலநோய்க்கு முக்கியக் காரணம். மலச்சிக்கலைத் தவிர்த்தாலே மூலநோய் பெரும்பாலும் விடைபெற்றுக் கொள்ளும். அதற்கு உணவில் கவனம் செலுத்த வேண்டும். துரித உணவு வகைகளைத் தவிருங்கள். மசாலா நிறைந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். கார உணவு ஆகாது. கொழுப்பு மிகுந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ளலாம். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வது நல்லது.
குறிப்பாக வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய் போன்ற காய்கறிகள் நல்லவை. தினமும் ஒரு வகைக் கீரையை அவசியம் சாப்பிட வேண்டும். இரவில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள்.
சுண்டல், பயறு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். நிறைய தண்ணீர் அருந்துங்கள். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதைத் தவிருங்கள். நீண்ட நேரம் நிற்கவும் கூடாது. உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
என்னுடைய நாடித்துடிப்பு எப்போதும் 60க்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால் ஆபத்து உண்டா? - ஆர். மாதவன், சென்னை-9.
சராசரி மனிதருக்கு நாடித்துடிப்பு (இதயத்துடிப்பு) நிமிடத்துக்கு 60 லிருந்து 100வரை இருப்பது இயல்பு. தடகள வீரர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற சில வகையினருக்கு இயல்பாகவே நாடித்துடிப்பு குறைவாக இருக்கும். அடிக்கடி மயக்கம் வருவது, நெஞ்சு வலிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் ஒருமுறை இதயநல மருத்துவரை அணுகி இசிஜி, எக்கோ, ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு காரணம் தெரிந்து கொண்ட பிறகு சிகிச்சை பெற வேண்டும்.
| மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை: உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு டாக்டர் கு.கணேசன் பதில் அளிக்கிறார். கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் அல்லது மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@hindutamil.co.in முகவரி: டாக்டர் பதில்கள், நலம் வாழ, இந்து தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 |
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.