

பொடிப் பொடியாகச் சிறிய இலைகள் மண் வாசனையைக் கிளப்பிக்கொண்டே, விதையிலிருந்து துளிர்த்தெழும் நயத்தில் அவ்வளவு அழகு ஒளிந்திருக்கிறது. ‘பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியாதே’ எனும் பழமொழி மற்ற கீரைகளுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வெந்தயக்கீரைக்குச் சாலப் பொருந்தும்.
வெந்தயத்தோடு ஒப்பிடும்போது, வெந்தயக்கீரையின் பயன்பாடு நமது உணவில் மிகக் குறைவே. ‘வெந்தயம் கசக்கும், அப்போ அதன் கீரையும் கசக்கத்தானே செய்யும்…’ என்கிற தவறான கணக்கில் வெந்தயக்கீரையை ஒதுக்கி, அதன் பல்வேறு பலன்களை அனுபவிக்கத் தவறுபவர்கள் பலர். வெறும் இலைகளாகப் பார்க்காமல், வெந்தயக்கீரைக்குள் உள்ள சத்துப் பட்டியலை அறிந்துகொண்டால், கீரையின் மெல்லிய கசப்புச் சுவையும்கூட நம் சுவை மொட்டுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
உலகளாவிய உணவுத் தொடர்பு: மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியச் சமையல் கலாச்சாரத்தில் நீண்ட காலத் தொடர் புடையது வெந்தயக்கீரை. ஈரானியர்களின் மிக முக்கியமான சூப் வகையான ‘கோர்மே சப்ஜி’யில் (Ghormeh sabzi) உலர்ந்த வெந்தயக் கீரை நீக்கமற இடம்பிடிக்கிறது. வெண்ணெய் விட்டு வதக்கிய உருளைக்கிழங்கோடு சிறிதாக நறுக்கிய வெந்தயக்கீரை, பெருங்காயம் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘உருளை வெந்தயக்கீரைப் பிரட்டல்’ பஞ்சாபியர்களின் முக்கிய தொடுகறி.
யவன - இந்திய உணவுத் தொடர்பில் வெந்தயக்கீரை யையும் வெந்தயத்தையும் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஐரோப்பிய நாடுகள் பிறப்பிடமாக இருந்தாலும் பல நூற்றாண்டு களுக்கு முன்பிருந்தே இந்தியாவில் அதிகம் பயன்பாட்டிலிருந்தவை வெந்தயக்கீரையும் வெந்தயமும். Trigonella foenum graecum என்பது வெந்தயக் கீரையின் தாவர வியல் பெயர். Fabaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.
மருத்துவ உணவு: ‘பொருமல் மந்தம் வாயுகபம்…’ எனத் தொடங்கும் அகத்தியர் குணவாகடப் பாடல் வயிற்று உப்புசம், செரியாமை, இருமல், சுவையின்மை போன்ற பிரச்சினைகளைப் போக்குவதற்கு வெந்தயக்கீரை சிறப்பானது என்பதைச் சொல்கிறது. உடலுக்குக் குளிர்ச்சியை அள்ளிக் கொடுப்பதோடு, மலமிளக்கியாகவும் இக்கீரை செயல்படுகிறது. வெந்தயக்கீரையுடன் சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட, செரிமான உபாதைகள் விலகுவதோடு வாய் துர்நாற்றமும் நீங்கும்.
வெந்தயக்கீரையை வேகவைத்துத் தேன் விட்டு நன்றாகக் கடைந்த ‘தேன் கீரை’ கடையலை உட்கொள்ள மலம் சிரமமின்றி வெளியேறும். வெந்தயக் கீரையின் கசப்பும் தேனின் இனிப்பும் புதுமையான சுவை அனுபவத்தைக் கொடுக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண், மூலத்திற்கான மருத்துவ உணவு இது.
சர்க்கரைக்கு நல்லது: ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை வெந்தயக் கீரைக்கு இருப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால், நீரிழிவு நோயாளர்களின் தட்டில் அடிக்கடி இடம்பிடிக்க வேண்டிய கட்டாயக் கீரை இது. இரும்புச் சத்து, செம்புச் சத்து, துத்தநாகச் சத்து, புரதம், நார்ச்சத்து போன்றவற்றை நிறைவாக வைத்திருக்கிறது வெந்தயக்கீரை.
வெந்தயக்கீரையோடு வெந்தயத்தையும் உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும்போது ரத்தக் கொழுப்பின் அளவு முறைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிடுகின்றன ஆய்வுகள். கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கும் வெந்தயக்கீரை!
எப்போது விதைத்தாலும் பயன்தரவல்ல வெந்தயக்கீரை, மார்கழி முதல் மாசி வரையான காலத்தில் கனக்கச்சிதமாக வளரும். பொங்கல் பண்டிகைக் கால உணவில் வெந்தயக் கீரைக்குச் சிறப்பான இடம் உண்டு. வீட்டுத் தோட்டத்தில் அல்லது தொட்டியில்கூட மணலைக் கிளறி அதில் வெந்தயத்தைத் தூவி, ஈரப்பதத்தைத் தொடர்ந்து பராமரித்தால் ஒரே வாரத்தில் வெந்தயக்கீரையை கண்ணாரக் காணலாம். செயற்கை உரங்கள் இன்றி இயற்கைவழியில் விளைந்த குட்டிகுட்டி வெந்தயக்கீரை, உங்கள் உணவில் ஒட்டி உறவாடி நலம் உண்டாக்கும்.
வாசனையோடு கூடிய மெலிதான கசப்புச் சுவையை வெந்தயக்கீரை உணவுக்கு வழங்கும். அந்தக் கசப்பும் சுவைமிக்கது என்பதை வெந்தயக்கீரையை ருசித்தவர்கள் அறிவார்கள்!
பழக்கீரை பானம்: வெந்தயக்கீரையோடு திராட்சை, அத்திப் பழம் சேர்த்துச் சிறுதீயில் கொதிக்க வைத்துப் பானமாகத் தயாரித்து கொஞ்சம் தேனும் குடம்புளியும் சேர்த்துப் பருக செரிமானக் கருவிகள் குதூகல மடையும். சோர்வுற்ற உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்க இந்தப் பழக்கீரை பானத்தை முயன்று பார்க்கலாம். உலர்ந்த கீரையைப் பொடித்துத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து சூடான தேநீர் போலவும் பருகலாம்.
வெந்தயக் கீரை முழுமையாக உருவாவதற்கு முன்பே, அதாவது முளை அரும்பிய (Microgreens) உடன் பொடிக்கீரையாக எடுத்து காய்கறி சாலட், சூப், துவையல் வகையில் பயன்படுத்தப் பலன்களும் சுவையும் கூடுதலாகக் கிடைக்கும். பூண்டு, மிளகு, வெங்காயம், தக்காளியோடு நறுக்கிய வெந்தயக்கீரையையும் சேர்த்துத் தயாரிக்கப்படும் சூப், சுவைமிக்கதாக இருப்பது மட்டுமன்றி, செரிமானச் சிக்கல்களையும் தீர்க்கும். குளிர்கால மாலை வேளையில் பருக ஏற்ற பானம் இது.
குழம்பு வகைகளின் சுவையைக் கூட்டவும், குழம்பின் அடர்த்தியை அதிகரிக்கவும் உலர்ந்த வெந்தயக் கீரையைச் சேர்க்கும் வழக்கம் கிராமங்களில் இப்போதும் இருக்கிறது. சமையலில் உலர்ந்த கீரையைப் பயன்படுத்தும்போது ஒரு வாசனையும், பசுமையான கீரையை உபயோகிக்கும்போது வேறுவிதமான வாசனையும் வெளிப்படும். இலைகள் மட்டுமன்றி மெல்லியத் தண்டுகளையும் சேர்த்தே சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
பித்தம் அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் தலைச்சுற்றலுக்கு வேகவைத்த வெந்தயக்கீரையை வெண்ணெய் இட்டு வதக்கிச் சாப்பிடலாம். கீரையோடு முட்டை, தேங்காய்ப் பால் சேர்த்து நெய்விட்டுச் சமைக்கும் வித்தியாசமான கீரை உணவு உடல் சோர்வை உடனடியாக நீக்கும். வெந்தயக்கீரையோடு கசகசா, வாதுமைப் பருப்பு, கோதுமையை ஊறவைத்து எடுத்த பால், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து லேகிய பதத்தில் செய்து சாப்பிட உடலுக்கு வலிமை உண்டாகும்.
- கட்டுரையாளர் அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com