

டாக்டர் சஜ்ஜன் சிங் யாதவ் எழுதிய ‘India’s Vaccine Growth Story’ எனும் ஆங்கில நூலின் தமிழ் வடிவம் ‘இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை’ எனும் தலைப்பில் நம் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
இந்த நூல், உலக அளவில் நவீன மருத்துவம் பயன்படுத்தும் பலதரப்பட்ட தடுப்பூசிகளின் பரிணாம வளர்ச்சியின் பல நூற்றாண்டுப் பயணத்தை அழகாக விவரிக்கிறது. முதன் முதலில் தடுப்பூசி பிறந்த கதையில் தொடங்கி, தற்போது நடைமுறையில் இருக்கும் பல்வேறு தடுப்பூசி வகைகள், அவை உருவாக்கப்படும் விதம், மனிதர்களிடம் பரிசோதிக்கும் முறைகள், மத்திய அரசின் ஒழுங்குமுறை ஒப்புதல் பெறப்படும் வழிகள், சந்தைப்படுத்தப்படும் விதம் எனப் பல விஷயங்களைக் கதை சொல்லும் ஓட்டத்தில் ஆசிரியர் அணுகியுள்ளார்.
தடுப்பூசிகளுக்காக முன்பு வெளிநாடுகளை நம்பியிருந்த இந்தியாவில் தடுப்பூசித் தயாரிப்பு எப்போது, எப்படித் தோன்றியது, எப்படி வளர்ந்தது என்பதை விரிவாக விவரிக்கிறது இந்த நூல். மக்களின் ஆரோக்கியம் காக்கும் தடுப்பூசிக்கு உலக அளவில் மக்களிடம் காணப்படும் தயக்கம், எதிர்ப்பு குறித்தும் நவீன மருத்துவம் அவற்றைச் சமாளிக்கும்விதம் பற்றியும் ஆசிரியர் தொட்டிருப்பது பாராட்டுக்குரியது.
சரளமான நடையில் நூல் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் கலைச்சொற்களை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப் பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். உதாரணமாக, ‘walk-in coolers’ என்பதை ‘நடந்து செல்லக்கூடிய குளிரூட்டிகள்’ என்று நேரடியாக மொழிபெயர்த் துள்ளனர். அது ‘சேமிப்புக் கிடங்கு குளிரூட்டிகள்’ என்று இருந்திருக்க வேண்டும்.
இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை
டாக்டர் சஜ்ஜன் சிங் யாதவ்
‘இந்து தமிழ் திசை’
விலை: ரூ.350
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402
ஆன்லைனில் வாங்க: store.hindutamil.in/publications