

மூத்த குடிமக்களின் உடல்நலத்தைப் பேணி பாதுகாப்பதில் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியம். வீட்டில் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் குடும்பத்தினர் மத்தியில் பெரும் பதற்றம் தோன்றும். அதேபோல முதியவர்களுக்கும் ஏதேனும் பிரச்சினை என்றாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.
பொருளாதார, குடும்பச் சிக்கல்களும் பெரியவர்களின் உடல்நலத் தீர்வுகளை எட்டுவதில் செல்வாக்கு செலுத்துகின்றன. இதய நோய், நீரிழிவு போன்ற நோய்களின் தீவிரம் ஒருபுறம் தொடர் மருத்துவச் செலவினங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்க, கீழே விழுவதால் ஏற்படக்கூடிய காயம் பொது சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்துவருகிறது.
உலகம் முழுவதும் 50 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இறப்பு, உடல் இயக்கக் குறைபாடு என இரண்டுக்குமான முண்ணனி காரணங்களில் காயங்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகம் முழுவதும் 65 வயத்துக்கு உள்பட்டோரில் 28% முதல் 35% வரை கீழே விழுந்து காயப்பட்டு மருத்துவமனை உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் வருடத்தில் 14.6% மூத்தவர்கள் காயப்படுகின்றனர். அதில் கிட்டத்தட்ட 94.5% பேர் காரண காரியமின்றி தற்செயலாகக் காயப்படுகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் கீழே விழுந்து காயப்படுகின்றனர். உடல் உழைப்பு வேலை செய்கிறவர்கள், குறிப்பாக விவசாயிகள் 30.7% பேர் இந்தக் காயப்படுவோர் பட்டியலில் இடம்பிடிக்கின்றனர்.
முதியவர்கள் ஏன் கீழே விழுகின்றனர்? - பெரும்பாலானோருக்கு வயது காரணமாகத் தசை அடர்த்தி குறையத் தொடங்குவது, உடல் கூட்டமைப்பைச் சிதைத்து உடற்சமநிலையைப் பாதித்து விழுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது.
பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைதல், அனிச்சை உணர்வு குறைதல், தசை வலிமை குறைதல் ஆகியன இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. நாள்பட்ட சர்க்கரை, இதய வியாதிகளால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் நிணநீர் மண்டலம், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்திறனில் பிரச்சினை ஏற்பட்டு உடற்சமநிலை பாதிக்கப்பட்டு கீழே விழுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகின்றன. அறிவாற்றல் குறைவு, மறதி போன்ற பிரச்சினைகளும் கீழே விழுவதற்கான காரணங்கள். சிறுநீரை அடக்க இயலாமல் கழிப்பறைக்கு விரைந்து செல்ல வேண்டும் என்கிற நிலை, கீழே விழுவதை அதிகப்படுத்துகிறது.
ரத்த அழுத்த மாறுபாட்டால் சிலர் படுக்கையில் இருந்து எழுந்து நிற்கும்போது உடல் சமநிலை பாதிக்கப்பட்டு கீழே விழுவார்கள். சிலருக்கு அவர்கள் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளால் தலைச்சுற்றல், மயக்க உணர்வு ஏற்பட்டு நிலை தடுமாறி விழக்கூடும். எலும்பு வலுவிழப்பு நோய், உடற்பருமன் போன்றவையும் விழுவதற்கான காரணிகளாக அமைகின்றன.
தற்காத்துக்கொள்ள முடியுமா? - நிச்சயம் முடியும். முறையான உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் ஆலோசனை பெற்று செய்துவந்தால், அனைத்தும் சாத்தியமே. தினசரி வாழ்க்கை முறையைச் சுறுசுறுப்பான வைத்துக்கொள்ள முயல வேண்டும். கடைகளுக்குச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது, தோட்ட வேலைகள் செய்வது என உங்களுக்குப் பிடித்த வேலைகளைத் தினமும் செய்துவர வேண்டும். உங்களுக்கு என சவால்களை உருவாக்கிக்கொண்டு, அவற்றை அடைய முயல வேண்டும். உதாரணமாக, வாரம் ஒரு முறை பத்து நிமிடங்கள் நில்லாமல் நடனமாடுவேன் என்கிற சவாலை நிறைவேற்ற முயன்று நேரத்தைச் சிறிது சிறிதாக அதிகரிக்கலாம்.
கைப்பிடி இல்லாத நாற்காலியில் அமர்ந்துகொள்ள வேண்டும். கால் முழங்காலைச் சற்று பின்னோக்கி மடக்கிய நிலையில் பாதங்களைத் தரையில் வைத்துக்கொண்டு, முன்னோக்கி உடலைச் சற்று சாய்த்து எழுந்து நிற்க வேண்டும். மீண்டும் உட்காரும்போது நாற்காலியைத் தொடும் நிலை வரை பின்நகர்ந்து, அதன் பிறகு மெதுவாக உட்காரத் தொடங்க வேண்டும். 10 முதல் 12 முறை செய்யலாம்.
வீட்டில் உள்ள சமையலறை மேடை அருகே – பக்கவாட்டில் பிடித்துக்கொள்ள ஆதாரத்திற்காக - நின்றுகொண்டு, முன் பார்த்தவாறு பத்து அடிகள் நடக்க வேண்டும். ஒரு திசையில் இருந்து எதிர்திசை சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வரவேண்டும். இவ்வாறு நடக்கும்போது பாதங்கள் ஒன்றுக்கு ஒன்று முன்பாக நேர்க்கோட்டில் ஊன்றி நடக்கவேண்டும். உடலைச் சாய்க்காமல் நேராக நடக்க முயல வேண்டும். இவ்வாறு கீழே விழாமல் தற்காத்துக்கொள்ள பயிற்சி முறைகள் உள்ளன.
சில முன்னெச்சரிக்கைகள்: பிசியோதெரபிஸ்ட்கள் பரிந்துரைக்கும் பயிற்சிகளைச் செய்யும்போது எளிய, வழுக்காத, வலிமையான நாற்காலிகளைப் பயன்படுத்துங்கள். மூச்சு திணறல், மயக்க உணர்வு, நெஞ்சு எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால் பயிற்சிகளை உடனடியாக நிறுத்திவிட்டு மருத்துவ உதவியை நாடவேண்டும்.
மேலை நாடுகளில் முதியவர்களுக்கான மறுவாழ்வுப் பயிற்சித் திட்டங்கள் பிசியோதெரபி மருத்துவர்களைக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. அவர்கள் கீழே வீழாமல் தடுப்பதை இயக்கமாக முன்னெடுக்கிறார்கள். உடல்திறன் மேம்படுத்தப்படுவதால் தங்களைத் தாங்களே மேலாண்மை செய்துகொள்கிறார்கள். யாருடைய துணையுமின்றி, உடல் இயக்க வரம்புகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் மூத்தவர்கள் சுதந்திரமாக, ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்ய அனைவரும் முயல்வோம்.
TUG சோதனை: நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் இருந்து பத்து அடி தூரத்தில் கோடு வரையுங்கள். நாற்காலியில் இருந்து எழுந்து பத்து அடி தூரத்தில் வரையப்பட்ட கோட்டினை அடைந்து மீண்டும் நாற்காலியில் வந்து அமர வேண்டும். இதற்கான நேரத்தைக் கணக்கிட வேண்டும். நான்கு தடவை மீண்டும், மீண்டும் நடக்க வைத்து நேரத்தைக் கணக்கிட வேண்டும். இதற்கு 13.5 நொடி தேவைப்படுகிறது. இதற்கு மேல் நேரம் எடுத்துக்கொண்டால் அவர்கள் கீழே விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
TINETTI சோதனை: இச்சோதனை முதியவர்களது உடல் இயக்கச் சமநிலை, நடைத்திறனை அறிய மேற்கொள்ளப்படுகிறது. முதியவரைக் கைப்பிடி இல்லாத நாற்காலியில் அமர வைக்க வேண்டும். முதலில் எவ்வித உதவியுமின்றி எழுந்து நிற்க வேண்டும். பாதங்களை முடிந்தவரை அருகருகே கொண்டுவர வேண்டும்.
முதலில் கண்கள் திறந்திருக்கும் நிலையில் மார்பெலும்பில் பிசியோதெரபிஸ்ட் உள்ளங்கை கொண்டு அழுத்தித் தள்ளுவார். பிறகு கண்களை மூடிய நிலையில் இரண்டு முறை உள்ளங்கை கொண்டு மார்பெலும்பில் அழுத்தி அவர்களைத் தள்ளுவார். பிறகு 360 டிகிரி சுற்றி நகர்ந்து பிறகு நாற்காலியில் அமரச் சொல்ல வேண்டும். இவற்றை முழுமையாக எவ்விதச் சிரமமும் இன்றி நிறைவுசெய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மதிப்பெண் அளிக்கப்படும்.
யார் விழுகிறார்கள்? - கீழே விழுவதற்கான சாத்திய முள்ளவர்களை அடையாளம் காண முடியுமா? முடியும். இதற்காக பிசியோதெரபியில் பல சோதனைகள் உள்ளன. சிலவற்றை இங்கு காண்போம்:
- கட்டுரையாளர், இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட்ஸ் அமைப்புத் தலைவர்; krishnafpt@gmail.com