

என் மகள் கல்லூரி விடுதியில் இருக்கிறாள். அவளுக்குத் தலையில் பேன் தொல்லை இருக்கிறது. அதைப் போக்குவதற்கு ஒரு நிரந்தர வழி சொல்லுங்கள், டாக்டர். - எஸ். சுவாதி, பெரம்பலூர்.
தலையில் ஏற்படும் பேன் தொல்லைக்கு ‘பெடிக்குலஸ் ஹுயூமனஸ் கேப்பிடிஸ்’ (Pediculus humanus capitis) எனும் ஒரு வகை கிருமித் தொற்றுதான் காரணம். தலையில் சுத்தம் காக்கத் தவறினால், பெரும்பாலும் பேன் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, தலையையும் தலைமுடியையும் சுத்தமாகப் பராமரிப்பது முக்கியம்.
பேன் தொல்லையைப் போக்க ஐவர்மெக்டின் (Ivermectin), பெர்மெத்ரின் (Permethrin) என்று இரண்டு வகை ஷாம்பூகள் உள்ளன. வாரம் ஒருமுறை ஏதேனும் ஒரு ஷாம்பூவைத் தலைக்குத் தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து, முடியை இளம் வெந்நீரில் அலசிவிட வேண்டும். பிறகு, பேன் சீப்பைப் பயன்படுத்திச் சீவ, பேன்கள் அகன்றுவிடும். வாரந்தோறும் இப்படிச் செய்ய வேண்டும்.
காரணம் என்னவென்றால், இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது முட்டைகளாகவும், ஈறுகளாகவும் இருப்பவை ஒரு வாரம் கழித்து முழுப் பேன்களாக வளர்ந்துவிடும். ஆகவே, தலையில் பேன் முழுவதும் அகலும்வரை உங்கள் மகளை வாரந்தோறும் தலைக்கு இந்த ஷாம்பூவைப் பயன்படுத்தச் சொல்லுங்கள். பேன் தொல்லை ஒரு தொற்றுநோய்.
அடுத்தவர்களிடமிருந்துதான் இது தொற்றும். மற்றவர்கள் பயன்படுத்திய சீப்பு, சோப்பு, ஷாம்பூ, ரிப்பன், ஹேர்பின், படுக்கை விரிப்பு, தலையணை, தலை துவட்டும் துவாலை போன்றவற்றை உங்கள் மகள் பயன்படுத்த வேண்டாம். உங்கள் மகள் பயன்படுத்திய படுக்கை விரிப்பு, தலையணை, துவாலை போன்றவற்றை வெந்நீரில் அலசிக்கொள்ளச் சொல்லுங்கள்.
அறைத் தோழிகளுடன் அருகருகில் படுக்க வேண்டாம். பேன் தொல்லையைக் கவனிக்கத் தவறினால், தொடர் அரிப்பின் காரணமாகத் தலை மற்றும் காதுகளின் பின்புறம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுச் சீழ்க்கட்டிகள் தோன்றக்கூடும், கவனம் தேவை.
எனக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. சில நாள்களாகக் குழந்தையின் வலது கண் மட்டும் பொங்குகிறது. வீட்டில் பெரியவர்கள் ‘உடல் சூடு காரணமாகக் குழந்தைக்கு இப்படிக் கண் பொங்குவது வழக்கம்; தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினால் சரியாகிவிடும்’ என்கிறார்கள். அதனால், குழந்தையை இன்னும் டாக்டரிடம் அழைத்துச் செல்லவில்லை. எதனால் கண் பொங்குகிறது, டாக்டர்? - ஆர். கோமதி, சென்னை-9.
பொதுவாக, குழந்தை பிறந்தவுடன் அதன் கண்ணீர்க் குழாய் (Nasolacrimal duct) தானாகவே திறந்துவிடும். சுமார் 5% குழந்தைகளுக்கு மட்டும் பிறவியிலேயே இந்தக் குழாய் அடைத்துக்கொள்ளும். இதன் காரணமாக, கண்ணீர்ப் பையில் சுரக்கும் நீர் இந்தக் குழாய் வழியாக வெளியேற முடியாமல் கண்ணின் வெளிப்புறத்தில் வடியும். சில குழந்தைகளுக்குக் கண்ணீர்ப் பையில் கிருமித் தொற்று ஏற்படும். அப்போது கண் பொங்கும்.
உடல் சூட்டுக்கும் கண் பொங்குவதற்கும் தொடர்பில்லை. வழக்கத்தில், மூக்கின் பக்கவாட்டில் உள்ள கண்ணீர்ப் பையைத் தினமும் மூன்று முறை மூன்று மாதங்களுக்கு மசாஜ் செய்துவந்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும். தொற்று இருந்தால் கண்ணைச் சுத்தப்படுத்தி கண்ணில் ஆன்ட்டிபாயாடிக் சொட்டு மருந்து விடவேண்டும். உங்கள் குழந்தைக்கு உடல் சூடுதான் காரணம் என அலட்சியப்படுத்தாமல், உடனடியாகக் குழந்தை நல மருத்துவரையோ கண் நல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெற்று, அவரது பரிந்துரையைப் பின்பற்றுங்கள். அதுதான் சரி.
எனக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் 4.5 மி.மீ. அளவில் கற்கள் உள்ளன. மேலும், சிறுநீர்ப் பையிலும் கற்கள் உள்ளன. அவ்வப்போது வயிற்றில் வலி ஏற்படுகிறது. இயற்கையாகக் கற்களைக் கரைப்பதற்கு என்ன செய்ய வேண்டும், டாக்டர்? - மணிமாறன், மின்னஞ்சல்.
உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கன அளவில் மிகச் சிறியவைதான். அவை அவ்வளவாகப் பிரச்சினை செய்யாது. கரைந்து வெளியில் வந்துவிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சிறுநீரகக் கற்களில் கால்சியம் கற்கள், யூரிக் அமிலக் கற்கள், சிஸ்டின் (Cysteine) கற்கள், ஸ்ரூவைட் (Struvite) கற்கள் என நான்கு வகை உண்டு.
இவற்றில் கால்சியம் கற்கள்தான் பெரும்பாலும் இருக்கும். இவை கால்சியம் பாஸ்பேட், கால்சியம் ஆக்சலேட் எனும் வேதி அமைப்பில் இருக்கும். ஆகவே, இந்த வேதிப் பொருள்கள் மிகுந்துள்ள உணவு வகைகளைத் தவிர்த்தால் நல்லது. காபி, தேநீர், பிளாக் டீ போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
கோக் பானங்கள், மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகியவை ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரை ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் அதிகம். கேழ்வரகு, கீரைகள், மீன், இறால், நண்டு, வெள்ளைக் கரு, பால், பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். இவற்றிலும் கால்சியம் அதிகம்.
அடுத்ததாக, சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. தினமும் மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் அருந்துங்கள். இளநீர், நீர்மோர், பழச்சாறுகள் போன்ற திரவ உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்கள். தேவையில்லாமல் வெயிலில் அலையாதீர்கள். இனப்பெருக்க வெளி உறுப்புகளைத் தினமும் நன்றாகச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். மது அருந்தாதீர்கள்.
நான் சமீபத்தில் வயிற்றை ஸ்கேன் செய்துகொண்டேன். அதன் ரிப்போர்ட்டில் ‘கொழுப்புக் கல்லீரல் கிரேட் - 1’ என்று வந்துள்ளது. இது ஆபத்தான நோயா? எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதற்கும் கொழுப்புக் கல்லீரலுக்கும் தொடர்பு உண்டா? - ஆர். வாசுதேவன், கோயமுத்தூர்- 4.
கொழுப்புக் கல்லீரலுக்கு முக்கியக் காரணம் மதுப்பழக்கம்தான். இது தவிர, உடற்பருமன் உள்ளவர்களுக்கும் கட்டுப்பாடில்லாத நீரிழிவு உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. இந்த நோய் உங்கள் கல்லீரலை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை அறிய ‘ஃபைப்ரோஸ்கேன்’ (Fibroscan) செய்து கொள்ளுங்கள். உடனடியாக மதுவை மறந்துவிடுங்கள். மாறாக, தொடர்ந்து மது அருந்தினால் கல்லீரல் சுருங்கிவிடும். காலப்போக்கில் கல்லீரல் புற்றுநோய் வரும் ஆபத்தும் உண்டு. ஆகவே, எச்சரிக்கை அவசியம்.
- gganesan95@gmail.com