

கீரை சாம்ராஜ்ஜியத்தில் ‘கீரைகளின் அரசன்’ எனும் பெயரைச் சூட்ட தகுதியானது முருங்கைக் கீரை. முருங்கையின் பசுமையான இலைகளில் மறைந்திருக்கும் கறுப்பு நிற இரும்புச்சத்து, உட்கொள்வோருக்கு குறையாத ஆற்றலை வாரி வழங்கி ரத்தசோகையைத் தடுக்கும். உடனடிச் சமையலுக்கு உதவும் ஆபத்பாந்தவன் முருங்கைக் கீரை.
‘ஊர் முதலி’ எனச் சிறப்பித்துக் கூறப்படும் முருங்கையில் உடலுக்குத் தேவைப்படும் அநேகச் சத்துகள் குடியிருக்கின்றன. ‘வெந்து கெட்டது முருங்கை...’ என்பது, கீரையின் நளபாகத்தோடு தொடர்புடைய ஆழமான உணவு மொழி. முருங்கைக் கீரையை அளவுக்கு அதிகமாக வேக வைக்கும்போது, அதிலிருக்கும் சத்துக்கள் வீணாகி முருங்கைக் கீரையின் பயன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடும் என்பதே இதன் பொருள்.
இலக்கியங்களில்: வலுவில்லாமல் முறிந்து விழும் தன்மையால் ‘முறிதல்’ என்கிற பொருளில் மருவி, ‘முருங்கை’ என்று பெயர் பெற்றிருக்கிறது. இதற்குச் சங்க இலக்கியச் சான்றாக ‘நாரில் முருங்கை’ என்று மாமூலனார் குறிப்பிடுகிறார். பாலை நிலத்துக்கான மரமாக முருங்கை சுட்டப்படுகிறது. முருங்கையின் வெண்ணிற மலர்கள், பலத்த காற்றால் தூக்கி வீசப்பட்டு, கடல் அலையின் நீர்த் துளிகள் சிதறுவதைப் போலக் கீழ் உதிர்வதாக உவமை சொல்கிறது அகநானூறு.
உணவில்: முருங்கைக் கீரையை ‘வறைக்கறி’யாக அதாவது பொரிகறியாகப் பயன்படுத்தும் வழக்கம் இலங்கையில் பிரசித்தம். இலங்கை மக்களின் அதிவிருப்பம் கொண்ட உணவு முருங்கைக் கீரை. மற்ற உணவு வகைகள் விரைவாகக் கெடாமல் இருப்பதற்கு முருங்கை இலைகளைச் சேர்க்கும் நுணுக்கத்தைக் கிராமத்துச் சமையலில் கண்கூடாகப் பார்க்கலாம்.
முருங்கைக் கீரையுடன் மஞ்சள், பூண்டு, மிளகு சேர்த்து அவியல் ரகமாகச் சாப்பிட, செரிமானப் பிரச்சினைகள் தீர்ந்து, உணவின் சாரங்கள் முழுமையாக உள்கிரகிக்கப்படும். முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து வேகவைத்து, நீரை இறுத்த பிறகு பொரியலாகச் சமைத்துச் சாப்பிட வாயுப் பிரச்சினைகள் ஏற்படாது. இறுத்த முருங்கை நீரை ரசத்துக்கான அடிப்படை நீராகப் பயன்படுத்தலாம்.
ஆய்வுக்களம்: பாக்டீரியாவை அழிக்கும் தன்மை கொண்ட முருங்கைக் கீரைக்கு வலிநிவாரணி, இசிவகற்றி (நரம்பு இழுப்பு நிவர்த்தி), வீக்கத்தைக் குறைக்கும், சிறுநீர்ப்பெருக்கி போன்ற செய்கைகள் இருப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன. முருங்கையில் இருக்கும் ‘Quercetin’ எனும் வேதிப்பொருள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கண்களுக்கு நலம் உண்டாக்கும் நலக்கூறுகள் முருங்கைக் கீரையில் நிறையவே இருக்கின்றன. விட்டமின் – ’ஏ’ வின் சேமிப்புக் கிடங்காகத் திகழும் முருங்கைக் கீரை, பார்வையின் கூர்மையைப் பாதுகாக்கப் பேருதவி புரியும்.
நெய்யோடு முருங்கை இலைகளைச் சேர்த்துக் காய்ச்சும்போது உண்டாகும் வாசனை நாசிப் படலங்களை மகிழ்விப்பதுடன் நெய்யின் மருத்துவத் தன்மையையும் அதிகரிக்கும். அடை வகைகளில் முருங்கைக் கீரையைத் தூவிச் சேர்த்து முருங்கை இலைகளின் உதவியால் காய்ச்சிய நெய் தடவிச் சுட்டுச் சாப்பிட, நாவில் சுவையும் உடலில் ஊட்டமும் பெருகும். கம்பு மாவோடு முருங்கைக் கீரையைச் சேர்த்து வேக வைத்துப் பனைவெல்லம் கலந்து சாப்பிடலாம்.
தாய்ப்பால் பெருக்கும் உணவாகவும் பிரசவித்த பெண்களின் பத்திய உணவாகவும் முருங்கைக் கீரை இருப்பதால், மகவு ஈன்ற தாய்மார்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். வீரியத்தை அதிகரிக்கும் ‘மூலிகை வயாகரா’வாக முருங்கையைப் பார்த்த காலம் உண்டு. போகத்தை அதிகரிக்கும் கீரைகளின் பட்டியலில் முருங்கையைக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவப் பாடல். கியூபப் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ, நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்திய முக்கிய ஆயுதம் முருங்கைக் கீரை என்பது வரலாற்றுச் செய்தி!
கண் நோய், தலை நோய், மூர்ச்சை, அதிபித்தம், மந்தம் ஆகியவற்றை முருங்கைக் கீரை நீக்கும் என்பதை ‘செறிமந்தம் வெப்பந் தெறிக்கும்...’ எனத் தொடங்கும் அகத்தியர் குணவாகடப் பாடலின் மூலம் அறிந்துகொள்ளலாம். சிக்குரு, கிரஞ்சம் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது முருங்கை. முருங்கை இலைச்சாறு வீக்கங்களின் மீது பற்று மருந்தாகவும், அஞ்சனம் இடப் பயன்படும் மூலிகைச் சாறுகளுள் ஒன்றாகவும் பயன்பட்டிருக்கிறது. மிளகோடு முருங்கைக் கீரையைச் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட, தலைவலி குறையும்.
‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்...’ என்பது வழக்கத்தில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பழமொழி! முருங்கை மரத்தின் பலன்களைச் சிறுவயது முதலே அனுபவிப்பவர்கள், முதிய வயதிலும் கோல் ஊன்றாமல் வெறுங்கையோடு நடப்பார்கள் எனப் புரிந்துகொள்ள வேண்டிய முருங்கையின் பெருமையைப் பறைசாற்றும் பழமொழி! ஆக, சிறுவயது முதல் முதிய வயது வரை நம்மோடு உறவாட வேண்டிய கீரைக் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் முருங்கை! முருங்கை, கீரைகளின் முதல்வன்.
சுத்தப்படுத்தும் முறை: பசுமையான இலைகளை மட்டும் பயன்படுத்துவது சிறந்தது. சற்று மஞ்சள் நிறம் கலந்த இலைகளை அப்புறப்படுத்திவிடலாம். முருங்கை இலைகளை லேசாகத் தண்ணீரில் சுத்தம் செய்தாலே போதுமானது. மற்ற கீரைகளைப் போல பல முறை தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு முருங்கைக் கீரை சுவையிலும் ஊட்டத்திலும் சிறந்தது.
முருங்கை இலைகளோடு கூடிய காம்புகளை ஒரு முழுத் தாளில் காற்றுப் புகாமல் சுற்றி வையுங்கள். சில மணி நேரம் கழித்துப் பார்த்தால் இலைகள் அனைத்தும் தாமாகவே காம்பிலிருந்து நழுவி இருப்பதைக் காணலாம். கீரையை அதன் காம்பிலிருந்து உருவ எளிய யோசனை இது! காம்பிலிருந்து இலை இலையாக கிள்ள வேண்டும் என்ற காரணத்துக்காக முருங்கைக் கீரையைத் தவிர்ப்பவர்களும் உண்டு.
Moringaceae குடும்பத்தைச் சார்ந்த முருங்கையின் தாவரவியல் பெயர் Moringa oleifera. Beta – carotene, Moringine, Cysteine, Vitamin – C, Zeatin போன்ற தாவர வேதிப் பொருள்களை உள்ளடக்கியது. பிசின் சுரக்கும் தண்டுகளும் வெண்ணிற மலர்களும் சிறகுக் கூட்டிலை கொண்ட இலை அமைப்பும் சிறகமைப்பு கொண்ட விதைகளும் முருங்கைக்கு அழகூட்டுகின்றன.
கட்டுரையாளர் அரசு சித்த மருத்துவர்.