பச்சை வைரம் 03: பித்தம் போக்கும் அகத்தி

பச்சை வைரம் 03: பித்தம் போக்கும் அகத்தி
Updated on
3 min read

ஆர்மோனியப் பெட்டி பொத்தான்களின் வரிசை நேர்த்திபோல, வரிசைக்கிரமமாக அமைந்திருக்கும் இலைகள் அகத்திக் கீரைக்குச் சொந்தம். ஆர்மோனியப் பெட்டியிலிருந்து பிறப்பெடுக்கும் இசை மனதைச் சாந்தப்படுத்தும். அகத்திக் கீரையின் மருத்துவ இசையோ பித்த நோய்களைச் சாந்தப்படுத்தும். பூநாரையின் அலகைப் போன்ற வளைந்த பூக்களைக் கொண்ட அகத்தி, தோற்றத்திலும் மருத்துவக் குணத்திலும் மேம்பட்டது!

வெற்றிலைக் கொடிகள் பற்றி ஏற ஆதாரமாகவும், பயிர்களுக்கான வேலித் தாவரமாகவும் பயிரிடப்படும் அகத்தி, பித்தம் போக்கும் நற்கீரையாகப் பார்க்கப்படுகிறது. அகத்தில் இருக்கும் தீயை (அகம், தீ) அணைக்கும் இதன் பண்பை மையப்படுத்தியதே இதற்கான பெயர்க்காரணம் எனலாம்.

உணவில் அகத்தி: தாய்லாந்தில் இதன் இலைகளையும் மலர்களையும் ஆவியில் வேகவைத்து உருவாக்கப்படும் உணவு வகை பிரபலமானது. தேங்காயை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் சுவையான குழம்பு வகையில் அகத்திக் கீரையைச் சேர்க்கும் வழக்கம் சிங்கள மக்களிடத்தில் உண்டு. சர்க்கரைவள்ளிக் கிழங்கோடு அகத்திக் கீரை, தேங்காய் சேர்த்துச் சுவையான பிரட்டலைத் தயாரிக்கலாம்.

’வேகாமல் கெட்டது அகத்தி...’ எனும் பழமொழி, பக்குவமாக வேகாத அகத்திக் கீரை கூடுதலாகக் கசப்புச்சுவையை வெளிப்படுத்தலாம், இதனால் அதிலிருக்கும் சத்துகள் முழுமையாகக் கிடைக்காமல் போகலாம் என்பதை வலியுறுத்து கிறது. ஆகவே நன்றாக, பதமாக வேகவைக்கப்பட வேண்டிய கீரை அகத்தி!

அகத்திக் கீரையோடு பூண்டு சேர்த்துச் சமைப்பது முக்கியமான உணவு முறை ரகசியம். அகத்திக் கீரையைப் பிரட்டல், பொரியல், சூப் என ஏதாவதொரு வகையில் சமைத்து, ரசித்துச் சாப்பிட தனித்துவமான ஊட்டங்கள் உடலில் தங்கும். பருப்பு ரகங்களோடு அகத்திக் கீரையைச் சேர்த்து ஊட்டமிக்க கீரைக் குழம்பைத் தயாரிக்கலாம்.

கைப்புச் சுவையைக் கொண்ட அகத்திக்கு கரீரம், அச்சம், முனி ஆகிய வேறு பெயர்களும் இருக்கின்றன. ‘மருந்திடுதல் போகுங்காண்...’ எனத் தொடங்கும் அகத்தியர் பாடல், அகத்திக் கீரையின் மருத்துவக் குணங்களை எடுத்துக் கூறுகிறது. மலத்தை நன்றாக இளக்குவதோடு, மலத்தை முழுமையாக வெளித்தள்ளும் செயல்பாடு அகத்திக் கீரைக்கு உண்டு.

அளவுக்கு மிஞ்சினால் அகத்தியும் நஞ்சே: மருந்துகளை முறிக்கும் செய்கை கொண்ட அகத்திக் கீரையை மருந்துகள் உட்கொள்ளும் காலத்தில் தவிர்க்க வேண்டிய பத்தியப் பொருளாகச் சுட்டுகிறது சித்த மருத்துவம். அதிகமாகச் சாப்பிட லேசான தோல் நோய் அறிகுறிகளை உண்டாக்கலாம் என்பதால் அகத்திக் கீரையை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மிஞ்சும்போது அகத்தியும் நஞ்சே. இதன் காரணமாகவே ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்தி மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் அகத்தியைச் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

அகத்திக் கீரையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சுரக் கஷாயத்தை அம்மை நோய்க்கான மருந்தாக மலபார் பகுதியில் பயன்படுத்து கின்றனர். சைனஸ் நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த தயாரிக்கப்படும் மருத்துவ பானத்தில் அகத்திக் கீரையின் சாற்றைச் சேர்ப்பது கிராமத்து வழக்கு. குழந்தைகளுக்கான மருந்தாகவும், பெரும் சித்த மருந்துகளைத் தயாரிக்கவும் அகத்திக் கீரைச் சாறு பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழித்து வெளியேற்ற, உலர்த்திய அகத்திக் கீரைப் பொடியைப் பயன்படுத்தலாம். வயிற்றுப் புண், வாய்ப் பகுதியில் ஏற்படும் புண்களின் வீரியத்தைக் குறைக்கவும் அகத்திக் கீரை உதவுகிறது.

நஞ்சு முறிவு செய்கை இருப்பதால், புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த, அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, அகத்திக் கீரையை உணவு சார்ந்த மருந்தாக முயன்று பார்க்கலாம்.

மன நோய்க்கான மருத்துவத்திலும் அகத்திக் கீரை முக்கியப் பங்காற்றுகிறது. அகத்திக் கீரை சாறோடு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சிய அகத்தி எண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க, பித்தம் சார்ந்த நோய்கள் குறையும். மனப் பதற்றத்தைத் (Anxiety) தடுக்க அகத்தி எண்ணெய் உதவும். வாந்தி, குமட்டல் அடிக்கடி ஏற்படுபவர்கள், பித்த உடல் கொண்டவர்கள் தவிர்க்காமல், உணவாகப் பயன்படுத்த வேண்டியது அகத்திக் கீரையை!

ஆய்வுக் களம்: எதிர்-ஆக்ஸிகரணி தன்மை கொண்ட அகத்தி, இதயத் திசுக்களில் பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பது ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது. சுரமகற்றி, வலி நிவாரணி செய்கை கொண்ட அகத்திக் கீரை, ரத்தக் குழாய் சார்ந்த பிரச்சினைகளைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அகத்திக் கீரையில் உள்ள வேதிப்பொருள்களுக்கு, நுரையீரல் சார்ந்த தொற்றுகளை அழிக்கும் வன்மை இருக்கிறது. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுக்கிருமிகளின் பெருக்கத்தைத் தடுக்கவும் அகத்திக் கீரை உதவுகிறது.

சுரம் இருக்கும்போது அகத்திக் கீரைச் சாற்றை உடம்பில் தேய்க்கும் முறை கிராமங்களில் உண்டு. ‘Tepid sponging’ முறையோடு இதை ஒப்புநோக்கலாம். உடலில் அரிப்பு ஏற்படும்போது, அகத்திக் கீரைச் சாற்றை வெளிப்பிரயோகமாகத் தேய்க்கப் பலன் தரும். மூக்குக்கு மருந்தாகவும் அகத்திக் கீரைச் சாறு பயன்படுகிறது.

அகத்தி, அகத்தைக் குளிர்விக்கும் அற்புதக் கீரை!

வளர்க்கும் முறை: அகத்திக் கீரை விதைகளை வேலிப்பயிர்போல இரண்டு அடி இடைவெளி விட்டு விதைக்கலாம். பெருஞ்செடி அல்லது சிறு மரமாக வளரும் தாவரம் இது. தேவையான நேரத்தில் காம்புகளை ஒடித்துக் கீரையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வெள்ளை நிறத்தில் பூக்கும் அகத்தி சாதாரணமாகக் கிடைக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி வகையும் உண்டு.

Sesbania grandiflora என்பது அகத்தியின் தாவரவியல் பெயர். Fabaceae குடும்பத்தில் அங்கம் வகிக்கிறது. Thiamine, Riboflavin, Betulinic acid, Anthraquinones, Isovestitol போன்ற விட்டமின்களும் நலம் பயக்கும் வேதிப் பொருள்களும் அகத்திக் கீரையில் நிறையவே இருக்கின்றன.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in