மனமே நலமா: உங்கள் பணி… உங்கள் மனம்!

மனமே நலமா: உங்கள் பணி… உங்கள் மனம்!
Updated on
2 min read

வா

டிக்கையாளர்களிடம் மரியாதையாக நடந்துகொள்வது பற்றி மகாத்மா காந்தி கூறிய வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1890-ல், தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் இப்படிக் கூறினார்: “வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்தில் ஒரு அதிமுக்கிய வருகையாளர். அவர் நம்மைச் சார்ந்து இருப்பது இல்லை. நாம்தான் அவரைச் சார்ந்து இருக்கிறோம். அவர் நமது பணிக்கு இடையூறு அல்ல. நமது பணியின் குறிக்கோளே அவர்தான். அவர் நமது வணிகத்தில் வெளி ஆள் அல்ல. மாறாக நமது வணிகத்தின் ஒரு பகுதியே அவர். நாம் அவருக்குச் சேவை செய்வதன் மூலம் அவருக்கு சலுகை ஏதும் தருவதில்லை. தனக்கு சேவை செய்ய அவர்தான் நமக்கு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கிறார்”.

வணிகர்களுக்குக் கூறப்பட்ட இந்த வாசகம், மக்களுக்காக வேலை செய்யும் எல்லா பணியாளர்களுக்கும் பொருந்தும்.

எந்தப் பணியில் இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உண்டு. அது எழுத்தில் இல்லாத ஒரு நடத்தைக் கோவை. ஒரு கடைச் சிப்பந்தி வாடிக்கையாளர் ஒருவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது முதல் ஓர் ஆசிரியர் தம் மாணவர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் எவ்வாறு பழகுவது என்பதுவரை இதில் அடங்கும்.

இதன்படி, அவர்கள் தம் பணியைத் திறம்படச் செய்வது மட்டுமின்றி தொழில்ரீதியாகக் கவுரவமாக இருக்கவும் கடமைப்பட்டுள்ளார். இதை ஆங்கிலத்தில் ‘புரொஃபெஷனலிஸம்’ (தொழில்முறை நல்மனப்பான்மை) என்று அழைப்பார்கள். இது ஒருவர் தன் பணியில் கடைப்பிடிக்கும் மதிப்பீடுகளைச் சார்ந்தது. ஒருவர் தன் கடமையைத் திறம்படவும் நேர்மையுடனும் செய்வது மட்டும் போதாது. தன் வாடிக்கையாளர்களிடம் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதிலிருந்தும் இதை அறிந்துகொள்ள முடியும்.

முக்கியமாக, இந்தத் தொழில்முறை நல்மனப்பான்மை என்பது ஒழுக்கம் பற்றியது அல்ல. தொழில்திறன் பற்றியதும் அல்ல. அறுவைசிகிச்சை மருத்துவர் ஒருவர் திறமையாக அறுவைசிகிச்சை செய்பவராக இருக்கலாம். அதில் உலகப் புகழ்பெற்றவராகக்கூட இருக்கலாம். ஆனால் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் அவர் எரிந்து விழுகிறார், அவர்களை மதிப்பதில்லை என்றால் அவரது தொழில்முறை மனப்பான்மை தவறாக உள்ளது என்பதே அர்த்தம்.

இதேபோல, ஒரு ஆசிரியரோ பத்திரிகையாளரோ தன் பணியில் நாணயமாக இருக்க வேண்டும் என்பது தொழில்நெறி சார்ந்தது. மருத்துவர், செவிலியர், வழக்கறிஞர், ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஆகியவர்களுக்கு எழுத்தில் வடிக்கப்பட்ட தொழில்சார்ந்த நடத்தை விதிகள் (கோடு ஆஃப் காண்டக்ட்) உள்ளது. இதைக் கண்காணிக்க அமைப்புகளும் உள்ளன. ஆனால், இங்கே நாம் கூறவந்த தொழில்சார்ந்த மனப்பான்மை என்பது இவற்றிலிருந்து வித்தியாசமானது, நுட்பமானது. இது உயர்தொழில் புரிபவர்கள் முதல் கடைக்கோடி ஊழியர்வரைக்கும் முக்கியமானது.

மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்றோர் பணியிடத்துக்குத் தாமதமாக வருவது பற்றி நீண்ட காலமாகவே பேசப்பட்டுவருகிறது. இதைக் கண்காணிக்க சி.சி.டி.வி. பொருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. தொழில்முறை நல்மனப்பான்மை எவ்வளவு தூரம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதன் பிரதிபலிப்பே இது.

தொழில்முறை நல்மனப்பான்மையைக் கற்றுக்கொடுக்க முடியும் என்பதே, இதில் உள்ள ஒரு நற்செய்தி. பணியாளர்களும் ஊழியர்களும் பணியில் சேரும் காலத்திலேயே, அந்தந்தத் தொழில்சார்ந்த நல்மனப்பான்மை பற்றி அறிவுறுத்துவதும், மேலாளர்களும் உயர்நிலைகளில் உள்ள பணியாளர்களும் முன்மாதிரியாக நடந்துகொள்வதும் இந்தப் பிரச்சினைக்கு மாற்றாக அமையலாம்.

சரி, உங்கள் தொழில்முறை நல்மனப்பான்மை எந்த அளவுக்கு உள்ளது என்று பார்ப்போமா? கீழ்கண்ட ஏழு வினாக்களுக்கும் விடையளித்துப் பாருங்கள். உங்கள் பணிசார்ந்த மனப்பான்மை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே புரியும்.

# உங்கள் வாடிக்கையாளர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துகிறீர்களா?

# எல்லா வாடிக்கையாளர்களையும் சமமாக நடத்துகிறீர்களா?

# தொழில்சார் வரம்புகளைக் கடைப்பிடிக்கிறீர்களா?

# பணியிடத்துக்குக் காலதாமதம் இன்றி வருகிறீர்களா?

# உங்கள் பணிக்கு ஏற்ற வகையில் உடை உடுத்துவது உண்டா?

# வாடிக்கையாளர்கள் பற்றி சக பணியாளர்களுடன் வீண்பேச்சு பேசுவதைத் தவிர்ப்பது உண்டா?

# உங்கள் தொழில்/வேலை பற்றிப் பெருமைப்படுகிறீர்களா?

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in